ஞாயிறு, 28 ஜூலை, 2013

இளவஞ்சி நன்மாறன் கவிதைகள்


நமக்கு மட்டும் தெரிந்தது...!?

அம்மாவின் புலம்பல் அப்பாவிடம்..
"நம்ம பயலுக்கு கோட்டி புடிச்சிருக்கு போல!
தன்னப்போல இளிக்கான்...
வெள்ளென பெரண்டு பெரண்டு படுக்கான்...
காப்பிதண்ணீல கைய நனைக்கான்...
நடுச்சாமத்துல மீசமயித்த ஒதுக்குரான்...
வயசுப்பய மாதிரியா திங்கான்?
அரை களி உருண்டய
நா முச்சூடும் உருட்டறான்...
ஒரு எழவும் வெளங்கல!
காத்து கருப்பு கீது அடிச்சிருச்சா?
நம்ப ஆத்தா கோயிலு கோடாங்கிய கூப்டுவுட்டு
ஒத்த ரூவா முடிஞ்சி வச்சி
ஒரு தாயத்து கட்டணும் போல...!"

பாவம்..
அம்மாவுக்கு தெரியாது...
உன் சிரிப்புக்கு முன்னால்
கோடாங்கியின் தாயத்து
எம்மாத்திரம் என்று...!

ஓடிப்போனவளின் வீடு

அனிச்சையாய் திரும்பும் தலைகளின்
கீழ்வெட்டுப்பார்வைகள் சிதறிக்கிடக்கின்றன
அவ்வீட்டின் முற்றத்தில்

தெருவையடைத்து அவள் போட்டுச்சென்ற
கோலம் மிதிபட்டு சிதைந்து
வெறும் வண்ணத்தீற்றலாய்

பறிக்கப்படாத ஜாதிமல்லி
தரையில் உதிர்ந்து இன்னும்
மணம் பரப்பிக்கொண்டு
இருக்கிறது

இதுவரை இருந்த உறவுகள் மறந்து
தராதரங்கள் அலசப்படுகின்றன
தெருமுழுதும்

இரவில் கேட்கும் கேவல்கள்
சோகத்தை மீறிய அவமானத்தை
விழுங்க முயன்ற தோல்விகளை
ரகசியமாய் அறிவிக்கின்றன

எதிரியின் இழவுக்கும் துக்கம் கேட்கலாம்
வெறிச்சிடும் வீட்டில் பசித்த ஜிம்மியின்
ஊளைச்சத்தம் மட்டுமே

அவள் விட்டுச்சென்ற புடவைகளும்
பாட புத்தகங்களும் அங்கு
எதை உணர்த்தும் இனி?

நம்பத்தான் மறுக்கிறது மனது
எவனோ ஒரு பொறம்போக்கு
அந்த அழகுதேவதையை இன்னேரம்
அனுபவித்துக்கொண்டிருப்பான்
என்பதை

நான் பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை

பேசுவதே புரியும் பொழுது

முகத்திலிருக்கும் இரு பட்டாம்பூச்சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கிறுகிறு

விடுமுறையில் தூதாக
பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா
எனக்கேட்டு அனுப்பிய
பட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை
புடவைகளுக்கடியில் பத்திரமாய்

என்னைவிட மாநிறமா
எனக்கையோடு கையொற்றி
முதன்முதலில் தொட்டபொழுது
முன்உணராத பட்டாம்பூச்சிகள்
என் அடிவயிற்றில்

பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் பறக்கவிட்ட
விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
நீலம்தெளித்த பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சிகளும் இப்படித்தான்
கலவிக்கொண்டே பறக்குமென
நீ சொன்னதை உணர்ந்ததினம்
நம் கலவியின் உச்சகணம்

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
பட்டாம்பூச்சிகளுக்குள்
பிரிவுத்துயர் இல்லையென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி முத்தம்

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை


சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்...

சிறகடிச்சுக்கிட்டுதான் இருந்தோம்!
கொரங்குபெடல் சைக்கிளிலும்
ரைட்டாதப்பா கட்டங்களிலும்
படிக்கட்டு சறுக்கலிலும்

கோணமூக்கனின் காக்காகடிக்கும்
தெருப்பயகளுடம் ஐஸ்பாய்க்கும்
அம்மாப்பா விளையாட்டுக்கும்
இதுக்குமுன்னால
யாருமே திட்டுனதில்ல

தம்மு தும்முன்னு நடக்காதே...
அடக்க ஒடுக்கமா ஒக்காருடி..
எப்பப்பாரு என்னடி இளிப்பு?
அத்தனை அசைவுகளுக்கும்
திருத்தம் சொல்லறாங்க
நாங்க
இதுவரை பறந்ததை ரசிச்சவங்க

டீவிசானலை திடீரென மாத்தறதும்
நான் தலைகுனிந்து
விரல்நகம் கடிப்பதும்
எங்க வீட்டின் புதுப்பழக்கம்

ச்சே! அம்மாதான் இப்படின்னா
இந்த அண்ணனுக்கென்ன?
முன்னமாதிரி விளையாடவராம
தள்ளித்தள்ளிப்போறான் கொரங்கு...

பசங்ககூட சேரக்கூடாது சரி..
அப்பாவின் கழுத்தையுமா
பிடிச்சு தொங்கக்கூடாது?

இப்போதெல்லாம் பழகிக்கொண்டோம்
சட்டையை முன்னால் இழுத்துப்பிடித்துக்கொள்ள
சில பார்வைகளை தாண்டிவரும்போது

யாரு கேட்டா இந்த சனியனை
இப்போ வரலேன்னு?

அய்யயோ அங்க்கிள்! நாங்க போறோம்...
அம்மா சொல்லியிருக்காங்க


()()()()()()()()()()


போய்வாடி என் மகளே!
நம்வாழ்வை மொக்கையாக்க
மெக்காலே வடிவமைத்த
போர்க்களம்
வென்றுவாடி என் மகளே!

கூட இருக்கத்தான் ஆசப்பட்டோம்...

கள்ளநோட்டு கும்பலுக்கு
"வலைவீச" போனதால
எங்கப்பனுக்கு முடியல

துரைமாரு நாட்டுக்கு
ஆணிபிடுங்க வந்ததால
உங்கப்பனுக்கு முடியல
வெற்றிச் சிரிப்போட
எங்கப்பாரு
தினத்தந்தில வந்தாக

வெட்டிப் பதிவராக
உங்கப்பாரு
பதிவுலகில் வந்திருக்கேன்

கவலைப்படாதேயெங் கண்ணு!

எங்கம்மாவோட அப்பாரு
எங்கூட வந்தாக
உங்கம்மாவோட அப்பாரு
உங்கூட வர்றாக

என்னைக்கும் இதே கததான்!
அப்பனுங்க கதையெல்லாம்
வெறும் வாயோடு
வெளையாட்டு!

ஏபி சீடியும்
ஏப்ளஸ்பி ஹோல்ஸ்கொயரும்
இதமாத்தான் நீ படிக்க
எழுதி இருக்காக
என்பதுகிலோ புத்தகங்க

அத்தனையும் தெனம் சுமக்க
ஆசைப்படுறேன் இந்த அப்பா
படிச்சுக் கிழிக்க அல்ல
மூட்டை தூக்கியேனும்
நீ பெறவேண்டும்
உடலுறுதி
வாங்கித்தாரேன் ஹார்லிக்சு

வேற வழியில்ல கண்ணம்மா...

பப்பிஷேம் ஊருக்குள்ள
ஜட்டிபோட்டவன் லூசுப்பய
ஒம்பது டு அஞ்சுக்குள்ள
படிப்பையெல்லாம் முடிச்சுவிடு
அதன் பெறகும் படிச்சன்னா
அப்பாவுக்கு மூடவுட்டு
தோள்மீது உனைத்தூக்கி
மெரீனாபீச்சு கூட்டிப்போறேன்
அடையாறு சிக்னலிலே
மொளகாபஜ்ஜி வாங்கித்தாரேன்

வாரத்துல நாலுமுறை
புதுகாமிக்சு உனக்குண்டு
டென்னிஸோ உதைபந்தோ
கைதட்ட நானிருக்கேன்
ஒரு குடம் தண்ணியூத்தி"
வெளையாட்டு சொல்லித்தாரேன்
"ரிங்கா ரிங்கா ரோசஸு"
உங்கிட்ட கத்துக்கறேன்

பாடங்க அத்தனையும்
மண்டைக்குள் அனுப்பிக்க
மனுசங்க அனைவரையும்
மனசுக்குள் ஏத்திக்க

பாடங்க நீ படிக்க
உங்கம்மா
ஸ்கேலோட காத்திருக்கா
அவகிட்ட நான் படிச்ச
உலகம்னு ஒன்றுண்டு
கருத்தாக படிச்சுக்க
உங்கப்பா
உவப்போடு சொல்லித்தாரேன்


காக்கா கடிபோட்டு
ஃப்ரெண்டுங்க புடிச்சுக்க
அல்லாவும் ஜீசசும்
எதிரியில்ல தெரிஞ்சுக்க

கீழே விழுகயில
சிரிச்ச மொகத்தோட
நீயாவே எழுந்துக்க
அடுத்தவனைக் கைகாட்டி
அழுது புலம்பறது
ஷேம்ஷேம்னு தெரிஞ்சுக்க

உலக உருண்டையிலே
ஒருபக்கம் நானிருக்கேன்
உன்னை
உருவாக்கும் உலகத்தின்
வாசப்படியில் நீயிருக்க





காலாண்டுப் பரிச்சைக்குள்ள
கலர்பென்சிலோட நான் வாரேன்
ரெண்டுபேரும் சோடிபோட்டு
உன் கனவுகளுக்கு
கலர் அடிப்போம்

போய்வாடி என் மகளே!
மெக்காலே வடிவமைத்த
போர்க்களம்
வென்றுவாடி என் மகளே!

என் பயணங்களில் இரயில்...
பரதேசம் பலகண்ட
பழுத்த பெருசொன்று
பெருமூச்சுடன் பல்குத்துகிறது
பிளாட்பாரத்தில்
நீண்டு கிடக்குது இரயில்
தண்டவாளத்தில்

தலைவரை ஏற்றிவிட
தோரணங்களுடன் தொண்டர்கள்
ஓடும் இரயிலுக்கு
டாட்டா காட்டும் சிறார்கள்

ஊரின் பிரிவுத்துயர்
பெயர்ப்பட்டியலில் தொலைகிறது
இருபத்தியாருக்குள் நாலைந்து 'F'கள்
குப்பைத்தொட்டிக்குள் வாலருந்த நாயொன்று

அப்பர்பர்த்தில் ஏறும்
அம்சமான பெண்ணொருத்தி
மனசின் நிராசைகள்
கண்களின் தெறிப்பில்
ஆற்றினில் அகப்பட்ட நிலா

கச்சாயம் கடிக்கும் பசங்களுடன்
எதிரே கட்டுச்சோறு குடும்பி
விரும்பிய பஜ்ஜியை
வாங்க மறுக்கும் மனசு
அரவாணிகளுக்கு ஐந்து ரூபாய்

விதவைக்கோட்டாவில்
வெள்ளுடை கேட்கீப்பர்
வண்ணக் கொடிகளோடு
பச்சைக் கொடியசைப்புக்கு
இரயில் மட்டும் போகிறது

உபயோகமாய்த்தான் இருக்கிறது
வீச்சமடிக்கும் கழிவறை
மலஜலம் கழிக்கவும்
மனவிகாரம் கிறுக்கவும்
கடந்து வந்த ஊர்களின்
கலாச்சாரப் பதிவுகள்

கொடுத்த காசுக்கு எனக்காக
பின்னோக்கி ஓடுது மரங்கள்
கூடவே வருகுது நிலா
என் பயணம் புரியவில்லை

நகரத்திலிருந்து நகரத்திற்கு
விரைகிறது என் வண்டி
இடைப்பட்ட தூரங்களில்
வாழ்க்கை இருக்குமென
மருகும் என் மனதுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக