புதன், 28 ஆகஸ்ட், 2013

ச.விஜயலட்சுமி கவிதைகள்





அவசரத்தின் பொருட்டாய் தொடங்கிய பயணத்தினை
பேருந்தில் ஆரம்பித்தேன்
பின் வந்த இதே இலக்கமுள்ள நான்கு
அதிவிரைவாய் கடந்து முன்னேறின
கடுப்போடு சன்னலின் வெளியே பார்க்க
மருத்துவமனை நிரம்பிவழிந்துகொண்டிருந்ததது
புறநோயாளிகள் முகமெங்கும் பதற்றம்
.
டாஸ்மார்க் கடை கல்லாவில்
காந்தித்தாத்தா புன்னகையோடிருந்தார்
நேற்றின் எச்சங்கள் புதுக்கோளமிட்டிருக்கின்ற
ஓட்டல் மெனுபட்டியலை கரும்பலகையில்
எழுதிக்கொண்டிருக்கிறான்
டிபார்ட் மெண்டல் ஸ்டோரில்
பிதுங்கி வழிகிற மக்கள் கைகளில் கடனட்டைகள்
எல்லா நிறுத்தத்திலும் நின்று
சிவப்பு விளக்கின்முன் டர்டர் என கரும்புகை கக்குகிறதது
……………………………………………………………………………………………

இலவமரப் பூக்களென செம்பிழம்பாயிருக்கும் மண்ணின்
ஈரம் மணம் வீசிக்கொண்டிருக்கிற
நிலத்தின் ஆதிக்குடிகளாயிருந்தோம்
ஒப்பனையற்றதொரு முகத்தில் தொய்யில் எழுதி மலர்சூட்டி ஆராதித்த பொழுதொன்றில் மறைத்திருந்த ஆயுதங்கள் துளிர்விட்டன
பழுப்பு நிற சருகின் ஒலிக்குள் புதைந்திட்ட சிரிப்பலைகள்
பாண்டியாட்டத்திற்கு கட்டம் கட்டியாடியவர்களுக்கு புதிதாய் விரிந்தன அச்சத்தின் சாரம் ஆற்றுமணற்படுகைகள் சூறையாடிய
இரவின் காரிருள் பொழுதொன்றில் வல்லமை திரள் பறவைக்கூட்டம்
சிறகு விரித்து குனுகுக் குரலெழுப்பி தாவிப்பறந்தது
நாளங்கள் புடைக்கும்படி பதற்றத்தோடான தெறிப்பொன்றில்
துப்பாக்கி ரவைகளின் குறி பார்த்தல்
வாய்க்கரிசி போடுவதாய் பூமியின்
ஆதாரசுருதி அறுத்து தின்னப்பட
மண்ணுமில்லை
நீருமில்லை
மலையும் காடுமில்லை
துருத்திக்கிடக்கிற விதைதெறிக்க காத்திருக்கும் ஆயுதங்களின்
கூர்மையுள் குருதித்திவளை குபுகுபுவென பொங்க
சாதிக்கு நேராய் தோட்டாக்கள் திணித்த துப்பாக்கி
அணுவின் பெயரால் கட்டி உருவாக்குகிற நமக்குநாமே பலி
நதியும் உடைமையென்ற அபகரிப்பு
எல்லைகள் பிளந்திருக்க
நீதியும் நியாயமும் காட்டுப்பூனையாய் வேட்டைக்கு தயாராக
உதிர வாதைகளின் சங்கமத்தில்
வெடிக்கக் காத்திருக்கும் உயிர்களின் ஓர்மை உரு
நீ நான் களைந்து வீதிகளில் கூட
நகரங்களில் கிராமங்களில்
தெபாகா வீதிகளில் இராட்சத மரங்கள் கிளைக்கின்றன.

()()()()

சித்தார்த்தனின் புறா

வெண்ணிற சிறகுகளை விரித்து சென்றது
படபடத்து செல்லும் அதன் உயிர்க்கூட்டில்
குவிந்துகிடக்கின்றன ஆசைகள்
உன்னிலிருந்து உதிரும் இறகுகளைப்போல்
உதிர்த்துவிடு பாரத்தினைத்தாங்காமல் திணருவாய்
சித்தார்த்தனின் குரலினை சட்டைசெய்யாமல்
முடிந்தால் உன் நிர்வாணத்தினை தூக்கி எறி
அதன் தாங்கமுடியா கணத்தை சர்வமும் தூக்கித்திரிகிறாயென்றது
வணிக வளாகத்தின் பொந்துகளில் அமர இடம் தேடிக்கொண்டிருந்த குனுகுக்குரலில்
சர்பத்தின் விஷப்பை மறைந்துகொண்டிருந்தது
.
விரிந்தசிறகுகள் வாமனனின் பாதங்களாகி
தானியக்குமிகளை உடைத்தன
வருமொரு பாதகத்தின் சிரசுகள்
உக்கிரமாய் இயங்குகிறன
சித்தார்த்தன் பட்டாலான மேலாடையை போர்த்திக்கொண்டு சயனத்தில் ஆழ்ந்திருக்க
உள்ளாக ஒளிந்து கொண்டிருக்கிற
நிர்வாணம் நெருப்பாற்றிலிருந்து தப்பிக்க கற்றதாயிருக்கிறது
……………………………………………………………………………………..
நான் தென்றல்
மாயப்பேய்
மழைத்துளி
சிலந்தி வலை
அல்லது காலத்தை மீறி
வளர்ந்து நிற்குமொரு செடி
குருதியின் ஈரம் குடித்த மலர்
நிலம்
நீர்
ஆகாயம்
எல்லாமாகவும் உருவகிக்க
செய்யுமுன் சொற்கள்
என் உடலுக்குள்ளாகவிருக்கும்
இன்னுமொரு உடலை
எப்பொழுதும் உணர்ந்தவனில்லை நீ
நானும் முயன்றேன்
உன்னை நிலாவெனவும்
நட்சதிரமெனவும்
ஏதேனுமொரு வார்த்தையில்
அன்பு செய்ய
எவ்வளவு முயன்றும் முடியாமல்
திணறி நிற்கிற நொடிகளில்
எப்பொழுதும் நீ
உடலாக மட்டுமே இருப்பவன் என்கிற
உண்மையினை எப்படிச் சொல்ல?
………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக