சனி, 16 நவம்பர், 2013

நிபந்தனைகளுக்குட்பட்டது - சிறுகதை: கி.ச.திலீபன்


           ஹரிஹரன் வடபழநி பஸ் ஸ்டாப்பில் இறங்கி நின்ற போது சூரியன் உச்சியில் நின்று கொண்டிருந்தது. சென்னையின் வெப்பத் தகிப்பில் நிழலுக்கு ஒதுங்கியபடி பலர் காணப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் மிக்க வடபழநி சிக்னல் தன் தனித்துவத்தை இழந்து வெறுமனே காணப்பட்டது. 27சி பஸ் பிடித்து மதுரவாயலிலிருந்து வடபழநி வந்தாயிற்று இருந்தும் ஹரிஹரனுக்கு எந்த யோசனையும் மட்டுப்படவில்லை. அடுத்த அடியை எங்கு வைப்பது என்பதில் கூட குழம்பியபடி நின்று கொண்டிருந்தான். பஸ் ஸ்டாப்புக்கு எதிரே உள்ள மரத்தடியில் வார, நாளிதழ்களின் போஸ்டர்கள் சகிதமாய் ஒரு சிறிய கடை தெரியவே அங்கு சென்றவன் கோல்டு ஃபில்டர் ஒன்றை வாங்கி பத்த வைத்தான். மீதி சில்லறையை நீட்டிய கடைக்காரரிடம் “அண்ணா... இங்க எங்கயாவது வாடகைக்கு வீடு கிடைக்குமா?” என மெல்லிய குரலில் கேட்டான்.
“பேச்சிலரா”
“ம்ம்” என்றபடி தலையசைத்தான்.
“முருகன் கோவில் தெப்பக்குளத்துக்கு பின்னாடி ரெண்டு மேன்சன் இருக்கும் போய்ப்பாரு”என்று சொல்லி விட்டு மீண்டும் தன்  வியாபாரத்தில் மும்மரமானார் அந்த கடைக்காரர்.
மேன்சன் வாழ்க்கையைப் பற்றி ஹரிஹரன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். முகம் தெரியாத இரண்டு பேருடன் ஒரே அறையில் தங்க வேண்டும். மேன்சனுக்கே பொதுவாக உள்ள கழிப்பிடத்தில் வரிசையில் நின்று செல்ல வேண்டும். நாம் எதிர்பார்க்கிற சூழலை அங்கு அமைத்துக் கொள்ள முடியாது போன்றவற்றை கேட்டதிலிருந்து ஹரிஹரனுக்கு மேன்சன் மீது பெரிய அபிப்ராயம் இல்லை.
 வடபழநி முருகன் கோவிலைக் கடந்து தெப்பக்குளத்தின் அருகே உள்ள வீதியில் நடையிட்டான். கொளுத்தும் வெயிலைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொள்ள இப்போது ஹரிஹரனுக்கு நேரமில்லை அவனுடைய ஒரே இலக்கு வாடகைக்கு வீடு பிடித்தாக வேண்டும் அதுவும் இன்றைக்கே. Tolet என்ற ஆங்கில வார்த்தைகளை தாங்கிய போர்டை தேடி அவனது கண்கள் பரபரத்தன.
“நீ சினிமா டைரக்டர் ஆகி கிழிச்சதெல்லாம் போதும் ஊர் ஒலகத்துல எவனுமே இல்லையா படம் எடுக்க... நீ எடுத்தாத்தான் படம் பாப்பேன்னு இங்க எவனும் சொல்லல... இனி இந்த எழவு புத்தகம் வாங்குறது, டிவிடி தட்டு வாங்குறதையெல்லாம் உட்டுப்போட்டு நம்ம கடையை பொறுப்பா கவனி... இல்லையா நீ படிச்ச சிவில் இஞ்சினியர் படிப்புக்கு பக்கத்துல எங்கியாச்சும் வேலை வாங்கித் தர்றேன் ரெண்டுல் ஏதாச்சும் ஒன்னச் செய்யு மறுபடியும் சினிமாவுக்குத்தான் போவேன்னு குதிக்காத” ஹரிஹரனின் தந்தைக்கும் இவனுக்கும் வெடித்த மோதலில் எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நாமக்கல்லில் இருந்து சென்னை புறப்பட்டு வந்து விட்டான். சென்னை வந்ததும் மதுரவாயலில் இருக்கும் இம்மானுவேல் அண்ணன் அறைக்குள் தஞ்சம் புகுந்து விட்டு இன்றோடு இருபது நாட்கள் ஆகிற்று.
வாரக்கணக்கில் வடபழநி, சாலிகிராம வீதிகளில் சுற்றியலைந்தான். இவனத்தான் காணவில்லை என எந்த இயக்குநரும் உதவி இயக்குனர் வாய்ப்போடு இவனுக்காக காத்திருக்கவில்லை. திரைத்துறையை பொறுத்த மட்டிலும் பொறுமை என்பது மிகத்தேவையான ஒன்று அது ஹரிஹரனுக்கு நன்கு தெரியும். ஆனால் பசி கொண்ட இந்த சென்னை மாநகரில் தன் வாழ்க்கை வண்டியை ஓட்டித் தீர வேண்டும் என்றால் பணம் முக்கியம். அப்பாவிடம் கேட்டானென்றால் எக்கேடோ கெட்டு ஒழி என்று பெற்ற பாசத்தில் பணத்தை அனுப்பி விடுவார் ஆனால் தான் மானஸ்தன் என்கிற நினைப்பு மட்டும் இவனுக்குள் குத்திக் குடைவதால் அந்த வழியைத் தவிர்த்து விட்டான். சிவில் இஞ்சினியரிங் முடித்த சர்டிஃபிகெட்களுடன் சுற்றியலைந்ததில் கே.கே.நகரில் உள்ள ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷனில் மாதம் பன்னிரெண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.
ஒரு வார காலமாக மதுரவாயலில் இருந்து கே.கே.நகர் சென்று வந்து கொண்டிருந்தான். வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே ஏதாவது அறை எடுத்து தங்கினால் அலைச்சல் மிச்சம் என இம்மானுவேல் அண்ணன் சொன்னார். இவனும் பார்ப்போம் பார்ப்போம் என தட்டிக் கழித்து வந்தான். இப்படியிருக்கையில் இன்று காலை நிகழ்ந்த சம்பவம்தான் ஹரிஹரனை வடபழநியின் வீதிகளில் சுற்ற விட்டிருக்கிறது.
காலையில் அப்போதுதான் கண் விழித்தான்
“நானும் பாத்துக்கிட்டிருக்கேன் நீ ரொம்ப ஓவராத்தான் போய்க்கிட்டிருக்க... வர்றது வந்து ஜன்னலைத் தொறந்து பாக்குறது... வீட்டுக்குள்ள வந்து சுத்திப் பார்க்குறது... என்னவோ மைசூர் மகாராஜா பேலஸைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்குற நாங்க அதுல அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருக்கமா... மழை வந்தா ஒரு மூளையில ஒழுகிக்கிட்டிருக்கு இந்த லட்சணத்துல நீ மாசமான வாடகை கரெக்டா வந்துடனும்னு குதிக்குற... காடு வா வாங்குது வீடு போ போங்குது கட்டையில போற வயசுல கெழட்டு நாய உனக்கென்னடா ஆசை வந்து அவுக்குது... மொற வாசக்கூலி மயிரு வாசக்கூலின்னு வாடகையை விட ஐநூறு ரூபா கூட வாங்குறியில்ல நான் ஏதாச்சும் சொன்னனா... இவன் வந்து பத்து நாள் தங்கியிருந்ததுக்கு ஆயிரம் எச்சா குடுங்குற இதென்ன உங்கொப்பனூட்டு காசுன்னு நினைச்சிட்டியா...”
இம்மானுவேல் அண்ணன் வீட்டு உரிமையாளரான முதியவரிடம் காட்டுக் கத்தல் கத்திக்கொண்டிருந்தார்.
“இத பாரு... மரியாதையா பேசு வீடு எடுக்கும்போது நாலு பேருக்கு மேல தங்கக்கூடாதுன்னு சொன்னனல்ல அப்புறம் என்ன போய் இன்னொருத்தனை சேர்த்துக்கிட்டு...”
“ஏய் உனக்கெல்லாம் இனி மேட்டுக்கு மரியாதை தர முடியாது. அவனை காலி பண்ணச் சொல்லிடறேன்... ஆயிரம் ரூபாயெல்லாம் கொடுக்க முடியாது நீ எடத்த காலி பண்ணு வீட்டை வாடகைக்கு விட்டுட்டியல்ல இனி நீ உள்ள கால் எடுத்து வைக்கக் கூடாது”
“நீ காலி பண்றா வீட்டை விட்டு”
“காலங்காத்தால கடுப்பைக் கெளப்பீட்டு கிளம்புடா”
“நீ கெளம்புடா”
“அப்ப அட்வான்ஸைத் திருப்பிக்குட்றா” என்று கனத்த குரலில் இம்மானுவேல் கேட்க வீட்டு உரிமையாளர் எந்த பதிலும் இல்லாமல் வீட்டை விட்டு அமைதியாக வெளியேறினார்.
இதற்கு மேல் இங்கு சமாளிக்க முடியாது எனவும் எப்படியேனும் வடபழநியில் ஒரு வாடகை வீடு எடுத்துக் கொள்ளும்படியும் வேறு வழியில்லாமல் இம்மானுவேல் சொன்னதை அடுத்துதான் ஹரிஹரன் வீடு தேடும் படலத்தை துவக்கியுள்ளான்.
தெப்பக்குளத்தை அடுத்துள்ள வீதியில் பழமையான ஒரு மாடி வீட்டின் கீழ் tolet என்று எழுதப்பட்டிருக்க அந்த வீட்டின் உள் நுழைந்தான். அங்கு துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்மணி இவன் வருகையை கண்டதும் கையை கழுவிக் கொண்டு எழுந்தாள்.  இவனிடம் விவரத்தை கேட்டவுடன் பின்னாலே வரும்படி கூறி நடந்து சென்றவள் “இதான் ரூம் நீங்க ஒருத்தார்தானே அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்” என்றதும் ஹரிஹரன் மெல்ல அறையை உற்று நோக்கினான். சிமெண்ட் பூசப்படமால் செங்கல் பிணைப்போடு காட்சி தரும் சுவர். என்றைக்கு இடிந்து விழும் என்று தெரியாத மேல் பகுதியில் சிமெண்ட் சுவர் பெயர்ந்து விழுந்து கட்டுக்கம்பிகள் துறுப்பேறிய நிலையில் காணப்பட்டன. சுவற்றில் ஆங்காங்கே விரிசல்கள். சொரசொரப்பான தரை என ஒன்றுக்கும் உதவாத கட்டிடத்தை கூட யாராவது இளிச்சவாயன் தலையில் கட்டி விடத் துடிக்கும் அந்தப் பெண் “ரெண்டாயிரம் ரூபாய் வாடகை... ரெண்டு மாச வாடகை அட்வான்ஸ்” என்று சொல்லி விட்டு இவனை ஏறப்பார்த்தாள். “இன்னுமாடி பெண்ணே நான் வீடு எடுப்பேன் என நம்பிக்கொண்டிருக்கிறாய்” என்கிற தொணியில் பார்த்து விட்டு மௌனத்தை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு ஹரிஹரன் வாசல் நோக்கி நடந்தான்.
தெரு முனையில் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. இந்த சென்னையைப் பொறுத்தவரைக்கும் கூகிள் மேப்பாக செயல்படுபவர்கள் ஆட்டோக்காரர்கள்தான். எத்தனையோ பேருக்கு வழி சொல்லும் ஆட்டோக்காரர் இவனது பிரச்சனைக்கு ஒரு வழி சொல்ல மாட்டாரா என்கிற நம்பிக்கையில் ஸ்டேண்டை நோக்கி நடந்தான். பலான ஜோக் ஒன்றைச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒருவர் “என்னாப்பா எங்க போவணும்” என்று இவனை பார்த்து குரல் கொடுத்தார்.
“இந்த ஏரியாவுல வீடு எதனா வாடகைக்கு” என்று இழுத்தான்.
“பேச்சிலரா” எத்தனை பேர்தான் இதே கேள்வியை கேட்பார்கள் என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு ஆமாம் என்பது போல தலையசைத்தான்.
“அட்டாச்சுடு பாத்ரூமோட மூவாயிரம் ரூபாய் வாடைகைக்குள்ள ஒரு வீடு இருக்கு” என்றவரை ஆவலாய் பார்த்தான்.
 “முந்நூறு ரூபா குடு வழி சொல்றேன்” என்று சொல்லவும் இவனது முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. எதுவும் பேசாமல் அங்கிருந்து நடந்தவனிடம். “தம்பீ இங்கெல்லாம் காசில்லைன்னா வேலையாவாது” என்று ஆட்டோ ஓட்டுநர் உரக்க சொன்னார்.
கங்கை அம்மன் கோவில் தெரு...
“பேச்சுலருக்கெல்லாம் வீடு கொடுக்கிறதில்லை”
“சார் எனக்கு தண்ணி தம்முன்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருப்பேன்”
“வீடு எடுக்கும்போது இப்படித்தாய்யா சொல்லுவீங்க அப்புறம் நீங்க அடிக்கிற கூத்து எங்களுக்குத் தெரியாது பாரு நாங்க என்ன இன்னைக்கு நேத்தா சென்னையில குடியிருக்கோம்”
சிவன் கோவில் தெரு...
 “வாடகை நாலாயிரம் ரூபாய் அட்வான்ஸ் நாற்பதாயிரம் ரூபாய்”
“எங்கிட்ட அட்வான்ஸ் வாங்கித்தான் வீடே கட்டப்போறீங்களா”
“என்னது”
“பத்து மாச வாடகையை அட்வான்ஸா கேக்குறீங்களே”
“எல்லாப்பக்கமும் அப்படித்தான் இஷ்டமிருந்தா வா இல்லைன்னா உன் விருப்பம்”
வடபழநி பேருந்து நிலையம் பின்புறம்..
tolet போர்டுக்கு கீழ் எழுதப்பட்டிருந்த எண்ணுக்கு டயல் செய்தான்
“ஹலோ”
“சார் என் பேரு ஹரிஹரன்.. டூலெட் போர்டு பார்த்தேன் வீடு வாடகைக்கு வேணும் வாடகை எத்தனை ரூபாய் சார்”
“காமன் பாத்ரூம்... நாலாயிரத்தைநூறு ரூபாய் வாடகை சார் நாலு மாச வாடகை அட்வான்ஸ்”
“சார் ஒரு ஐநூறு குறைச்சுக்க முடியுமா?”
----------- எதிர் முனையில் லைன் கட் ஆனது.
மணி மூன்றைத் தாண்டிற்று பசியில் வயிறு வேறு உள்ளிருந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஹரிஹரனுக்கு பசியெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. கங்கை அம்மன் கோவிலில் தொடங்கிய தேடுதல் கிளைகிளையாகப் பிரிந்து இப்போது சாலி கிராமத்தில் வந்து நின்றாயிற்று வீடுதான் கிடைத்தபாடில்லை. வீடு வேண்டும் என்பதற்காக திருமணமா செய்து கொள்ள முடியும் என்று ஹரிஹரன் உள்ளூர நினைத்து சிரித்துக் கொண்டான். அருகில் இருந்த பெட்டிக்கடையில் சிகரெட் ஒன்றை வாங்கி பற்ற வைத்தான். இழுக்கிற ஒவ்வொரு இழுப்பிலும் புகை நெஞ்சுக்கூட்டை வருடி விட்டு மேலெழும்புவது போன்றதொரு உணர்வு.
எதிரே உள்ள சுவரில் டூலெட் என்று அதன் கீழ் தொடர்பு எண்  அச்சிடப்பட்டிருந்த துண்டுச்சுவரொட்டிகள் ஏகமும் ஒட்டப்பட்டிருந்தன. ஹரிஹரனுக்குள் இனியும் தன்னால் வீடு தேடி குடியேற முடியும் என்கிற நம்பிக்கை அற்றுப் போனது. சுவரொட்டியில் இருந்த எண்ணை டயல் செய்தான்.
“வணக்கம் ஹரிஹரன் என் பேரு. வடபழநி, கே.கே. நகர் ஏரியாவுல வாடகைக்கு வீடு வேணும்”
“பேச்சிலரா?” இந்த கேள்வி ஹரிஹரனை கடுப்பாக்கியது “ம்ம்” என்றான்.
“என்ன ரேஞ்சுல வேணும்”
“மூவாயிரத்தைநூறு டூ நாலாயிரம்”
“நீங்க எங்க ஆஃபீஸ் வந்தீங்கன்னா டீடெய்லா பேசலாம்”
“வர்றேன் சார் உங்களுக்கு கமிஷன் எத்தனை சார் கொடுக்கணும்?”
“ஒரு மாசத்து வாடகை” என்று சொல்லவும் ஹரிஹரனால் மேற்கொண்டு பேச முடியவில்லை போனை கட் செய்யாமல் அப்படியே பாக்கெட்டில் சொறுகினான்.
“என்ன தம்பி வாடகைக்கு வீடா” என பெட்டிக்கடைகாரர் கேட்கவும் திரும்பியவன் தலையசைத்தான்.
“ஒரு மாசத்து வாடகையை கமிஷனா கேட்டிருப்பாங்களே... அதிகமாத்தான் இருக்கும் வேற வழியே இல்லை கொடுத்துத் தொலைச்சுட வேண்டியதுதான் ஏன் சொல்றேன்னா இவங்க இல்லாம இங்க  வீடு பிடிக்கிறது சிரமம். இவங்க நிறைய வீடுகளை கண்ட்ரோல்ல வெச்சிருக்காங்க அப்படிப்பட்ட வீடுகள்ல டூலெட் போர்டு மாட்டக்கூடாதுன்னு சொல்லிடுவாங்க மாட்டினாத்தான நீ போய் கேட்க முடியும். சந்து சந்தா சுத்தி அலையுறதுக்கு பதிலா கோவில் உண்டியல்ல போடுறதா நெனைச்சு கொடுத்திடு” என்றார். இந்தக் கடைக்காரருக்கு ஒரு வேளை கமிஷன் வருகிறதோ அந்த ஏஜெண்டை இந்த அளவுக்கு சிபாரிசு செய்து பேசிக் கொண்டிருக்கிறார் என்றே ஹரிஹரனுக்கு பட்டது.
ஒரு மாத வாடகையை தரகுக்கூலியாய் தாரை வார்ப்பதில் ஹரிஹரனுக்கு உடன்பாடில்லை. இன்னொன்று தரகர்கள் இல்லாமல் வீடே எடுக்க முடியாது என்று சொல்லும் கூற்றினை உடைத்து ஒரு வீடு பிடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் ஹரிஹரனை உந்தித் தள்ளியது. ஹரிஹரனுக்கு இப்போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது. இந்த சென்னையில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று பணம் இன்னொன்று விடாமுயற்சி. பணத்தைக் கொடுத்து வீடு பிடிக்க இவனொன்றும் அம்பானியின் அத்தை மகன் அல்லவே. எனவே விடாமுயற்சியுடன் தேட முற்பட்டான்.
வாடகை அதிகம், அட்வான்ஸ் அதிகம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு கொடுப்பதில்லை, பேச்சிலர் என பல்வேறு காரணப் பின்னல்களில் சாலிகிராமத்தின் தெருக்களில் சுற்றியலையும் ஹரிஹரனுக்கு வீடு ஒத்துவரவில்லை. ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்தல் என்பது அலுப்பூட்டக்கூடியது ஹரிஹரனின் நிலையும் அதுதான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு தரகர்களிடம் சரணடைந்து விடுவோமா? என்கிற சிந்தனையும் வந்தது. தோற்று விட்டோம் என ஏற்க மனமில்லாமல் அடுத்த வீட்டை நோக்கி நடந்தான்.
ஹரிஹரன் அந்த வீட்டின் கதவைத் திறந்த போது அலிபாபா கதையில் வரக்கூடிய குகையைத் திறந்தது போன்றதொரு உணர்வு. இந்த பகல் வேளையிலும் கூட இந்த வீட்டிற்கு மட்டும் அமாவாசையாக இருந்தது. செல்போன் டார்ச் உதவியுடன் சுவிட்சைத் தட்ட சி.எஃப்.எல் பல்ப் எரிந்தது. சிறிய அறையில் குறுக்காக சுவர் எழுப்பி அந்தப்புறம் சமையலறையை பிரித்திருந்தனர். தண்ணீர் இணைப்பு இல்லை கழிப்பறை உபயோகத்திற்கு கிணற்றில் இருந்து நீர் சேந்த வேண்டும். குடிக்க மாலையில் வரும் மெட்ரோ குடிநீரைத்தான் குடிக்க வேண்டும். ஹரிஹரனுக்கு இந்த வீட்டின் மீது பெரிய உடன்பாடு இல்லைதான் இருந்தும் இனியும் வீடு தேட உடலில் வலுவில்லை எனவும் முடிந்த மட்டிலும் இதையே பேசி முடிக்கலாம் எனவும் முடிவெடுத்தான்.
“2800 ரூபா வாடகை எங்களுக்கு அட்வான்ஸெல்லாம் அதிகம் வேண்டாம் பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தா போதும்” வீட்டு உரிமையாளாரான பாட்டி இவனிடம் வாடகை விவரங்களைக் கூறினாள்.
ஹரிஹரனின் எதிர்பார்ப்புகளை இந்த வீடு பூர்த்தி செய்யாவிட்டாலும் இவனது பொருளாதார சூழலுக்கு ஏற்ற வீடாக இருந்தது. அதுவும் தரகர் தயவு இல்லாமலேயே வீடு பிடித்து விட்டதோர் வெற்றிக் களிப்பு அவன் முகத்தில் தென்பட்டது.
“ஆனா ஒரு கண்டிசன்பா”
“கண்டிசனா?” என புருவம் உயர்த்தி பாட்டியையே பார்த்தான்.
“அஞ்சாம் தேதிக்குள்ளார வாடகையைக் கொடுத்திரனும், ரூம்ல தண்ணி அடிக்கக்கூடாது, வெளியிருந்தெல்லாம் பசங்களைக் கூட்டிட்டு வரக்கூடாது, ரூமை டெய்லியும் கூட்டி சுத்தமா வெச்சுக்கணும், ஒட்டடை தேங்கிறதுக்கு வுடக்கூடாது அடிச்சுக்கூட்டிரணும், சாயந்திரத்துக்கு மேலயெல்லாம் துவைக்கக்கூடாது, அடிச்சுத் துவைக்கக்கூடாது சத்தம் வரும் அதனால கும்மிக்க வேண்டியதுதான் அப்புறம் ரூம்ல ஆணி அடிக்கக்கூடாது ஏற்கனவே அடிச்சு வெச்சிருக்கு, ஆறு மாசத்துக்குள்ள காலி பண்ணீங்கன்னா அட்வான்ஸை திருப்பித் தரமாட்டோம் முக்கியமான விஷயம் காலி பண்றதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிடணும்” என்று விதிமுறைகளை மளமளவென பாட்டி ஒப்புவித்ததும் எவ்வித சலனமுமற்று நின்று கொண்டிருந்தான்.
“திங்கட்கிழமை அட்வான்ஸ் கொடுத்துட்டு குடி வந்துக்குறேன் பாட்டி” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான். வீடு வாடகைக்குக் கிடைத்து விட்ட மகிழ்ச்சியெல்லாம் நொடியில் பறந்தது. எதையெல்லாம் இவன் சுதந்திரம் என நினைத்தானோ அதையெல்லாம் நிபந்தனை என்கிற பெயரில் முடக்கி விட்டது போலவே எண்ணினான். தெருமுனையில் இருந்த கடையில் அதே கோல்ட் ஃபில்டரை வாங்கி பற்ற வைத்தான். இம்மானுவேல் அண்ணனுக்கு டயல் செய்தான்...
“வீடு கிடைச்சுதா என்ன”
“கெடைச்சுது... கெடைச்சுது..”
“ஏன் டல்லா பேசுற... ஓ... கண்டிசன்ஸ் அப்ளைடா” என்று சொல்லி சிரிக்க
“கடுப்பேத்தாதண்ணா... இந்த வீட்டை பிடிக்க நான் பட்ட பாடு எனக்குத்தான தெரியும்... என்ன இருந்தாலும் ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சுதே...”
“என்னது பிரச்சனை முடிஞ்சுதா? இப்பத்தான் தம்பி பிரச்சனையே ஆரம்பிச்சிருக்கு... வீடு வாடகைக்குதான் எடுத்திருக்க இனி மேல்தான் விஷயமே... போக போக புரிஞ்சுக்குவ எப்படியோ வாழ்த்துக்கள்” என்றபடி போனை கட் செய்தார்.
இம்மானுவேல் அண்ணன் சொன்னதும் ஒரு விதத்தில் சரியாகப் பட்டது. வீடு வாடகைக்குத்தானே எடுத்திருக்கிறோம் அதற்குள் அலுத்துக் கொண்டால் எப்படி இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கிறது என உள் மனம் சொன்னது. இவன் சிகரெட்டை கீழே போட்டு அணைத்து விட்டு வடபழநி பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.....  

வியாழன், 14 நவம்பர், 2013

தனிமையின் இசை- கே.ஆர்.பி. செந்தில்


ரம்ஜான் மாத மழைக்கால இரவொன்றில் நான் தனித்திருக்கிறேன். மின்சாரம் அடர் மழை காரனமாக நிறுத்தப்பட்டு ஒற்றை மெழுகுவர்த்தி காற்றில் போராடியபடி என்னை ஒரு பேரிருளில் இருந்து இன்னும் சற்று நேரம் தள்ளி வைக்க முயன்றுகொண்டிருந்தது. தனிமை எனக்கு மிகவும் பழக்கமானதும், பிடித்தமானதும் கூட. எப்போதெல்லாம் தனிமை கிட்டுகிறதோ!, அப்போதெல்லாம் என் சுயம் காப்பாற்றப்படுவதை உணர்ந்திருப்பதால், கிடைத்த சொற்ப தனிமைகளை கொண்டாடுபவன் நான்.

வெளியே பெய்யும் மழைக்கு ஒதுங்கிய அல்லது வழிதவறிய தவளையொன்று எப்படியோ வீட்டிற்குள் நுழைந்து மொழி புரியாத ஒரு பாடலை அவ்வபோது பாடிக்கொண்டிருந்தது. இதே போல ஒரு ரம்ஜான் மழைநாளில்தான் நான் உன்னை சந்தித்தேன். அது ஒரு முற்பகல் நேரம். அறையில் தனித்திருந்த நான் சமைக்க அலுப்பாகி, கடைத்தெருவுக்கு ஏதாவது உணவு வாங்கிப்போகலாம் என கனுக்கால் நீரில் செறுப்பில்லாத கால்களால் சளப்.. சளப் என ஒரு தாள கதியுடன் நடந்துசென்றேன். மனது சில சோகப்பாடல்களை அத்தாளகதிக்கு தயார் படுத்தி என்னை மழையுடானான உறவில் இருந்து பிரிக்க முயன்றபோது, சடாரேன வீசிய ஒரு காற்று என் முன்னே ஒரு குடையை வேகமாக இழுத்துச்செல்ல பின்னால் அவசரமாக ஒரு குரல் “பிடிங்க..பிடிங்க” எனப்பதறவே குடையை பிடிக்கும் உத்வேகத்தை அக்குரல் என்னை உத்தரவிட்ட வசீகரத்தை ரசித்தபடி ஓடி அக்குடையை அடைந்த கணத்தில்தான் நான் உன்னை பார்த்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது மாதிரி இருந்தது.

ஒரு அசாதரமான புன்னகையால் எனக்கு நன்றி சொன்னாய். பராவாயில்லை என சொல்லியபடி உன் புன்னகையின் ஆகர்சத்தில் நான் மூழ்கியபோது, “நீங்களும் குடைக்குள் வாங்க” என என் அனுமதிக்கு காத்திராமல் எனக்கும் குடை பிடித்தாய். நாம் இருவருமே ஒரு பாதி நனைந்தோம். எதற்காக நான் சாலைக்கு வந்தேன் என்பதே மறந்துவிட்டது எனக்கு. அதன்பின் சந்திப்புகள்… சந்திப்புகள்… சந்திப்புகள். வாழ்வின் வசந்த காலங்கள் அவை. அப்போதும் சரி, இப்போதும் கூட ஏன் என் காதலை உன்னிடம் சொல்லமுடியவில்லை? என்பதற்கான விடையே கிடையாது. உன்னை சந்திக்கிறேன், பேசுகிறேன் என்பதே என் வாழ்நாளுக்கு போதுமானதாக நான் நினைத்திருக்கலாம்.
உன் வேலை மாறுதல் கடிதம் வந்த மறு வாரம் ஒரு அவசர அவகாசத்தில் ரயில் நிலையத்தில் நீ என்னை கடைசியாக பார்த்தபோது உன் கண்கள் மிகுதியாக அழுது களைத்திருந்தன. மிகுந்த சிரமத்துடன் நீ என் கைகளை பிடித்தபடி ஊருக்குப்போனதும் கடிதம் எழுதுகிறேன் என்று ஒரு சிறிய புன்னகையால் என்னை சமாதானம் செய்வது போல கெஞ்சினாய், நாம் விடை பெற்றோம். அந்த இரவுதான் நான் வாழ்வில் சந்தித்த நீண்ட, கொடுமையான இரவு. அதன்பிறகு ஏராளமான இரவுகள். தனிமை இரவுகள். ஆறு மாதம் கழித்து உன் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தாய் அத்துடன் ஒரு சிறிய கடிதம் திருமணத்திற்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. கலைந்திருந்த எழுத்துக்கள் உன் கண்ணீரால் கழுவப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் வேண்டுகோளை மதிப்பவன் நான்.

இத்தனை வருடங்களாக உன்னை நான் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதை நான் விரும்பவும் இல்லை. மெல்ல மெல்ல இத்தனிமை எனக்கு பழகிவிட்டது. இன்று மழையால் அலுவலகம் செல்லவில்லை. காலை, மதியம் என இருவேளை சாப்பிடாதது பசியின் தக்கத்தை அதிகப்படுத்திருந்ததால், கடைத்தெருவுக்கு மாலையில் சென்றிருந்தேன். எப்போது மழை பெய்தாலும் குடை தேவைப்படாத ஆள் நான். மழை என்றால் நனைவதே விருப்பம். வெளியே மழை சாரலாக இறங்கிக்கொண்டிருதது. நாயர் கடையில் கட்டன் சாயா அடித்துவிட்டு எங்காவது சூடாக இட்லி சாப்பிடலாம் என மனம் கணக்கிட நாயர் கடையில் சாயாவை ருசித்தபடி மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது. ஆம், நீ தெருவில் நடந்து வந்தாய்!. கூடவே உன் கணவனும், பிள்ளையும் என நினைக்கிறேன், சாரலில் குடைக்கு வெளியே நடந்து வரும் உன்னை கேலி பேசியபடி வருகிறார்கள். உன்னுடன் பேச வேண்டும் எனும் பெருவிருப்பத்தை மனதிற்குள்ளாக புதைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.


மெழுகுவர்த்தி தன் உயிரை விட்டுவிட்டது, பேரிருள் என் தனிமையை சொந்தமாக்கி கொண்டது. வெளியே மழை அசுர வேகத்தில் இந்த நகரை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது. வழிதவறிய ஒற்றைத்தவளை இந்த அறையில் என் தனிமையை பாடிக்கொண்டிருக்கிறது.

கே.ஆர்.பி. செந்தில்