திங்கள், 22 ஜூலை, 2013

மொழிபெயர்ப்புக்கதை


பிரெஞ்சுச் சிறுகதை மன்னர் கீத மொப்பசான் (Guy de Mauppasant) (1850-1893) அகாலத்தில் இறந்தமைக்குக் காரணம் மனநோய். இதன் அறிகுறிகள் அவருடைய பிற்கால கதைகளில் தென்படலாயின. அப்படிப்பட்ட கதைகளுள் ஒன்று 'லுயீ? (lui?- அவன்?) . இது 1883 ல் வெளிவந்தது. அதன் நேரடி மொழிபெயர்ப்பு இது.)

(
பிரெஞ்சிலிருந்து தமிழில் - சொ.ஞானசம்பந்தன்)





என் அருமை நண்பா,

உனக்கு ஒன்றும் புரியவில்லையா? உன் நிலைமை எனக்குப் புரிகிறது.

நான் பித்தன் ஆகிவிட்டதாய் நம்புகிறாயோ? நான் கொஞ்சம் பித்தனாய் இருக்கக் கூடும், ஆனால் நீ நினைக்கிற காரியங்களுக்காக அல்ல.

ஆம், நான் மணஞ் செய்து கொள்கிறேன். அவ்வளவு தான்.

இருந்தாலும் என் கருத்துகளும் நம்பிக்கைகளும் மாறிவிடவில்லை. சட்ட பூர்வ மணம் ஒரு மடமை என்று நான் கருதுகிறேன். அந்த மடச்செயலைச் செய்வதற்கு என்னைத் தூண்டுகிற விபரீத, நம்ப இயலாக் காரணத்தை உன்னிடஞ் சொல்லத் தயங்குகிறேன்.

நான் மணம் புரிவது தனிமையைத் தவிர்ப்பதற்காக!

அதை எப்படிச் சொல்வது, எவ்வாறு புரிய வைப்பது எனத் தெரியவில்லை. நீ என்மீது இரக்கப்படுவாய், அதே சமயம் என்னை இகழ்வாய். அந்த அளவு என் மனநிலை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.

இரவில் இனிமேல் தனியாக இருக்க நான் விரும்பவில்லை. பேசக் கூடிய, எதையாவது சொல்லக் கூடிய ஒருவர் என்னருகில் நெருக்கமாக இருப்பதை நான் உணர விழைகிறேன். அவரது தூக்கத்தைக் கலைக்க என்னால் முடிய வேண்டும் என விரும்புகிறேன். திடீரென அவரிடம் நான் ஏதேனும் ஒரு கேள்வியை, முட்டாள்தனமான கேள்வியானாலும் சரி, வினவ வேண்டும், ஒரு குரலை நான் கேட்பதற்காக, என் வீட்டில் ஆள் உண்டு என்று உணர்வதற்காக, ஒருவர் விழிப்புடன் இருக்கிறார், சிந்திக்கிறார் என்பதை அறிவதற்காக, ஒரு மெழுகுவர்த்தியைத் 
திடீரென்று கொளுத்தி என்னருகில் மனித உருவம் ஒன்றைப் பார்ப்பதற்காக.....

ஏனென்றால்.... ஏனெனில்.....(ஒப்புக் கொள்ள வெட்கமாக இருக்கிறது) தனியாக இருக்க அஞ்சுகிறேன்.

ஆபத்து எதையும் பற்றிப் பயமில்லை. எவனாவது நுழைந்தால் கொன்று விடுவேன் நடுக்கம் இன்றி. பேய் பிசாசு பற்றிப் பீதி கிடையாது. இயற்கைக்கு மாறான எதையும் நான் நம்பாதவன். இறந்தவர்களின் ஆவி குறித்த கிலியில்லை. சாகிறவர் அனைவரும் மிச்சம் மீதியின்றி அடியோடு அழிந்து விடுகிறார் என்பது என் திட முடிவு.

அப்படியானால்! ஆமாம், அப்படியென்றால்?
எனக்கு அச்சம் என்னைப் பற்றியே தான். பயத்தைப் பற்றிப் பயம்; குழம்புகிற என் மூளையின் ஒழுங்கற்ற செயல்பாடு பற்றி உதறல். புரிந்து கொள்ள இயலாத ஒரு திகிலின் பயங்கர அனுபவம் பற்றி அரட்டி.

எள்ளி நகையாடு, நீ விரும்பினால். இது வெறுப்புக்கு உரியது; சிகிச்சையற்றது. சுவர்கள், தட்டுமுட்டு சாமான்கள் அன்றாடம் கையாளும் பொருட்கள் எல்லாம் விலங்குகள் போல இயங்குவதாக எனக்குத் தோன்றுகிறது. யாவற்றுக்கும் மேலாக என் எண்ணங்களில் ஏற்படும் பயங்கரக் குழப்பம் பற்றியும், என் அறிவு கலங்கி இனம்புரியாத் தவிப்புக்கு 
ஆளாவதைப் பற்றியும் பீதியுறுகிறேன். 

நான் பேசுகிறேன்! என் குரல் அச்சுறுத்துகிறது; நடக்கிறேன்! கதவுக்குப் பின்புறம், திரை மறைவில், அலமாரிக்குள், கட்டிலுக்குக் கீழே இங்கெல்லாம் இருக்கிற அறியாத ஒன்றைக் குறித்து அஞ்சுகிறேன். எங்கும் எதுவும் இல்லை என்பது எனக்குத் தெரியும் தான்.

கலவரம் அடைகிறேன், என் பெருங் குழப்பம் அதிகரிப்பதை உணர்கிறேன். எனவே அறைக்குள் முடங்குகிறேன். கட்டிலில் படுத்து மெத்தை விரிப்புக்குள் பதுங்குகிறேன். உடலைக் குறுக்கி உருண்டை போல் சுருண்டு நம்பிக்கையிழந்த நிலையில் கண்மூடிக் கிடக்கிறேன், நீண்ட நேரம். மேசைமேல் வர்த்தி எரிகிறது, அதை அணைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியும் அதற்கான துணிவில்லை.

இந்த என் நிலைமை படுமோசம் அல்லவா? 

முன்பெல்லாம் இந்த மாதிரி அனுபவம் சிறிதும் ஏற்பட்டதில்லை. வீட்டுக்கு நிம்மதியாக வருவேன். என் மனத்தெளிவை எதுவும் கெடுக்காத நிலையில் செயல்படுவேன். யாராவது நம்ப முடியாத, மடத்தனமான, கொடூர அச்சம் என்னைப் பிடித்தாட்டும் என்று அப்போது சொல்லியிருந்தால் பெரிதாய் சிரித்திருப்பேன். இருட்டில் கதவுகளைத் துணிவுடன் திறப்பேன், தாழ் போடாமலே கவலையின்றிப் படுப்பேன். எல்லாம் சாத்தியிருக்கிறதா என்று சரிபார்க்கப் பாதியிரவில்
எழுந்ததேயில்லை.

இந்தத் தொல்லை சென்ற ஆண்டு விசித்திரமான முறையில் தொடங்கிற்று.

இலையுதிர் காலத்து ஈரமான மாலை வேளை. இரவு சாப்பிட்ட பின்பு, வேலைக்காரி போனதும், என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அறையில் குறுக்கும் நெடுக்கும் சற்று உலாவினேன். வேலை செய்ய இயலாமல், வாசிக்கக் கூட ஆற்றலற்றுக் காரணமின்றிச் சோர்வாய் இருந்தேன். சன்னல் கண்ணாடிகளை மழையின் சன்னமான துளிகள்
நனைத்தன. உள்ளத்தில் துயரம், நம்மை அழத் தூண்டுகிற மனச்சுமையை இறக்கி வைக்க யாரிடமாவது பேச வேண்டும்
என்று நம்மை உந்துகிற காரணமற்ற துயரங்களுள் ஒன்றில் ஆழ்ந்திருந்தேன்.

தனியனாய் என்னை உணர்ந்தேன். என்றுமில்லா அளவு வீடு சூனியமாய்க் காட்சியளித்தது. முடிவற்றதும் இதயத்தைப் பிசைகிறதுமான தனிமை என்னைச் சூழ்ந்தது. என்ன செய்யலாம்? அமர்ந்தேன். கால்களில் ஒருவிதப் படப்படப்பு உண்டாயிற்று. மறுபடி நடந்தேன். குளிரால் உடல் திடீரென நடுங்கியது. வெளியீரம் உள்ளே வந்துவிட்டது எனக்
கருதிக் கணப்பை மூட்டினேன். சுவாலைகளைப் பார்த்தபடி உட்கார்ந்தேன். வெளியே போய் நண்பன் எவனையாவது
பார்க்க முடிவு செய்து மூன்று பேர் வீட்டுக்குப் போனேன். ஒருவனையும் சந்திக்க இயலாமல் தெருவில் நடந்தேன், தெரிந்தவர் யாரையாவது பார்த்து விடுவது என்ற முடிவோடு.

எங்கும் சோகச் சூழ்நிலை. நனைந்த நடைப்பாதைகள் ஒளி வீசின. நீரின் மித வெப்பம், திடீர் நடுக்கங்கள் உண்டாகும் படி குளிர் தரும் வெப்பம், மிக நுண்ணிய மழைத்துளிகளின் கனமான வெப்பம் சாலையை ஆக்கிரமித்துத் தெரு விளக்கின் ஒளியை மங்கச் செய்தது போலிருந்தது.

லேசான அடியிட்டு நடந்தேன்; திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேன்:"பேசுவதற்கு ஒருவனையும் காணமாட்டேன்".

மதலேன் தேவாலயத்திலிருந்து புவாசோன்னியர் தெரு வரை பார்களைப் பலதடவை துருவினேன். சோக மனிதர்கள் மேசைகளின் எதிரில் அமர்ந்திருந்த கிளாஸ்களைக் காலி செய்வதற்குக் கூட சக்தியற்றவர்கள் போல் காணப்பட்டார்கள்.

நீண்ட நேரம் அலைந்து விட்டு நள்ளிரவில் இல்லத்துக்குத் திரும்பினேன். 

வீட்டில் நுழைந்தபோது நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைப்பதற்காக எடுத்தேன். நேரே பார்த்தபோது என் நாற்காலியில் யாரோ, முதுகு என்பக்கம் இருக்க அமர்ந்து தீயருகில் கால்களை நீட்டிச் சூடுபடுத்திக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

எனக்குப் பயம் ஏற்படவில்லை. என்ன நடந்திருக்கிறது என்பது பற்றிய எண்ணம் என் மூளையில் தோன்றிற்று. நண்பன் எவனோ என்னைக் காண வந்திருக்கிறான். காவலாளியிடம் சாவியை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறான்.

அவனுடைய முடி என் பார்வையில் பட்டது. எனக்காகக் காத்திருந்தவன் தூங்கிவிட்டான். அவனை இரு கண்களாலும் தெளிவாய்ப் பார்த்தேன். எழுப்புவதற்கு நெருங்கினேன். வலக்கை தொங்கிக் கொண்டிருக்கக் கால் மேல் கால் போட்டிருந்தான். இடப்பக்கம் சற்றே சாய்ந்திருந்த தலை அவனது உறக்கத்தை நன்கு புலப்படுத்திற்று.

"
யாராக இருக்கும்?" எனக் கேட்டுக் கொண்டேன். அறையில் கொஞ்சந்தான் ஒளியிருந்தது. கையை நீட்டினேன் தோளைத் தொடுவதற்கு! கையில் பட்டது நாற்காலி! அதில் யாருமில்லை! வெற்று நாற்காலி!

தூக்கி வாரிப் போட்டது!

முதலில் பின்வாங்கினேன் பயங்கர ஆபத்தைக் கண்டது போல். பின்பு திரும்பிப் பார்த்தேன். முதுகுக்குப் பின்னால் யாரோ இருப்பதாய் உணர்ந்து. உடனே நாற்காலியை மறுபடியும் நோக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் என்னை மீண்டும் திரும்ப வைத்தது. பெருந் திகிலுக்கு ஆளாகி எந்தச் சிந்தனையும் இல்லா அளவுக்குப் பதற்றத்துடன் நின்று
கொண்டிருந்தேன், விழுந்து விடக் கூடிய நிலைமையில்.

ஆனால் நான் துணிச்சல் நிரம்பியவன். உடனடியாய் சிந்தனை மீண்டது. 

"
உருவெளித் தோற்ற மொன்றைக் கண்டிருக்கிறேன். அவ்வளவே" என்று எண்ணினேன். உருவெளித் தோற்றந்தான். மறுக்க இயலா நிகழ்ச்சி. என் அறிவு ஒரு நொடியும் மங்கவேயில்லை. அதுபாட்டுக்கு ஒழுங்காயும் சரியாயும் இயங்கிக் கொண்டிருந்தது. ஆகவே மூளையில் கோளாறு இல்லை. கண்கள் மட்டுமே தவறு செய்து என்னை ஏமாற்றிவிட்டன.
அவை ஒரு காட்சியைக் கண்டுள்ளன. எதையும் நம்பக்கூடியவர்கள் அற்புதம் என்று கருதக் கூடிய ஒரு காட்சியை. பார்வை நரம்பில் சிக்கல், அவ்வளவு தான்; ரத்தக் கட்டாக இருக்கலாம்.

வர்த்தியை ஏற்றினேன், அதைக் கொளுத்துவதற்குக் கணப்பை நோக்கிக் குனிந்த போது உடல் உதறலை உணர்ந்தேன். பின்னாலிருந்து யாரோ தொட்டது போலிருக்கவே அதிர்ந்து நிமிர்ந்தேன்.

நான் நிம்மதியாக இல்லை நிச்சயமாய்.

சில அடிகள் எடுத்து வைத்தேன். உரத்த குரலில் பேசினேன். மெல்லிய குரலில் பாடினேன். கதவை இரட்டைப் பூட்டுப் பூட்டினேன். தெம்பு உண்டாயிற்று. இனி யாரும் உள்ளே வர இயலாது. உட்கார்ந்து நெடுநேரம் அந்தக் காட்சி பற்றி யோசித்து விட்டுப் படுத்து வர்த்தியை அணைத்தேன். மல்லாந்த நிலையில் சில நிமிடம் அமைதியாய்க் கிடந்த பின்பு நெருப்புப் பக்கம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அரும்பவே 
ஒருக்களித்தேன்.

நாற்காலியின் கால்களுக்கு மட்டுமே ஒளி தரக்கூடிய அளவு தீ மங்கியிருந்தது. நாற்காலியில் அவன் அமர்ந்திருப்பது
போல் தோன்றியது. தீக்குச்சியைச் சடாரெனக் கொளுத்திப் பார்த்தேன். யாருமில்லை.

தூங்க முயன்றேன். கண்ணை மூடிய சிறிது நேரத்தில் அந்தக் காட்சி கனவாய் வந்தது. பதற்றத்துடன் எழுந்து வெளிச்சம் உண்டாக்கிக் கொண்டு கட்டிலில் குந்தியிருந்தேன். படுக்கத் துணிவில்லை. என்னை மீறி இருதடவை கண்ணயர்ந்தேன். இரண்டு தடவையும் அதே கனவு. பைத்தியம் பிடித்து விட்டதோ என நினைத்தேன்.

விடிந்த பின்பு நலம் ஏற்பட்டதாய்த் தெரிந்தது. நண்பகல் வரை நிம்மதியாய் உறங்கினேன். எல்லாம் முடிந்து விட்டது, முழுதும் முடிந்து போனது. எனக்கு வந்தது காய்ச்சலா, பயங்கரக் கனவா? தெரியவில்லை.
ஆக நோய்வாய்ப்பட்டு இருந்திருக்கிறேன். எனினும் அடி முட்டாளாய் இருந்தேன் என எண்ணுகிறேன்.

அன்று மகிழ்ச்சியாய் இருந்தேன். உணவகத்தில் சாப்பிட்டு விட்டு நாடகத்துக்குச் சென்றேன். பின்பு திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஆனால் வீட்டை நெருங்கிய போது ஓர் அசாதாரண பதற்றம் என்னைப் பீடித்தது. மீண்டும் அந்த அவனைப் பார்ப்பேனோ என்ற பயம். அவனைப் பற்றியல்ல, அதைத் தான் நான் சிறிதும் நம்பவில்லையே! ஆனால்
கண்களுக்கு மறுபடியும் ஏற்படக்கூடிய குழப்பம் பற்றி, உருவெளித் தோற்றம் பற்றி, அதனால் நான் அடையக் கூடிய கலவரம் பற்றிப் பயம்.

ஒரு மணி நேரத்துக்கு மேலாக, ஆளோடியில் இங்குமங்கும் நடந்தேன்; வடிகட்டிய மடமை என்று கடைசியில் தெரியவே உள்ளே நுழைந்தேன். மாடிப்படியேற முடியாதபடி நெஞ்சு படபடத்தது. ஒருவாறு ஏறிக் கதவின் எதிரில் பத்து நிமிடத்துக்கு மேல் தயங்கி நின்ற பின்பு திடீரெனத் துணிச்சலும் மனத்திண்மையும் உண்டாயின.

சாவியை நுழைத்துத் திறந்தேன். வேகமாய் முன்னேறினேன், கையில் மெழுகுவர்த்தியுடன். கதவை ஓர் உதையால் சாத்திவிட்டுக் கலக்கத்தோடு கணப்பை நோட்டமிட்டேன். ஒன்றுமில்லை. "அப்பாடா".
எவ்வளவு ஆறுதல்! எத்தகைய பரவசம்! எப்படிப்பட்ட விடுதலை! உற்சாகத்துடன் நடமாடினேன். இருப்பினும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. திடீர் திடீரெனத் திரும்பித் திரும்பிப் பார்க்க வேண்டியிருந்தது. மூலை நிழல்கள் சஞ்சலந் தந்தன.

நல்லுறக்கமில்லை. கற்பனை ஒலிகள் கேட்டு அவ்வப்போது விழித்துக் கொண்டேன். ஆனால் அவனைக் காணோம். முடிந்தது!

அனிறிலிருந்து இரவில் தனிமை அச்சுறுத்துகிறது. அந்தத் தோற்றம் அங்கே, இங்கே, சுற்றுமுற்றும் இருப்பதாக உணர்கிறேன். மறுபடி காணவில்லை எனினும் அதைப் பற்றிய நினைப்பு என்னை வாட்டிக் கொண்டேயிருக்கிறது.

யார் அவன்? உண்மையில் அவன் இல்லை என்பது தெரியும். என்னுடைய பயத்தில், என்னுடைய கலக்கத்தில் தான் அவன் இருக்கிறான். இப்படியெல்லாம் நான் சமாதானப்படுத்திக் கொண்டாலும் வீட்டில் தனியாக இருக்கப் பயம்தான். 

இனி அவனை நான் காணமாட்டேன் என்பது தெரியும். அவன் மறுபடி தென்பட மாட்டான், இருப்பினும் அவன் இருக்கிறானே என் மனத்தில். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் இருக்கிறான். கதவுகளின் பின்னால், மூடியிருக்கிற அலமாரியினுள்ளே, கட்டிலுக்கு அடியில், எல்லா இருண்ட மூலைகளிலும், எல்லா நிழல்களிலும்.

இது மடத்தனம், இது கொடுமை. தவிர்க்கவோ முடியவில்லை.

வீட்டில் இருவராக இருந்தால் அவன் ஒழிந்து விடுவான். இது சர்வ நிச்சயம். ஏனென்றால் அவன் இங்கே இருப்பது நான் தனியாள் என்ற ஒரே காரணத்தால் தான்!

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கலை உலகில் ஒரு அகோரி

   .
ஷாராஜின் சமகால நவீன தாந்த்ரீக ஓவியங்களில் தாந்த்ரீக இயங்கியல் 


Beware of the left; the cult of Shakthi
-James Joyce

தாந்த்ரீகம் இன்று மேற்கத்திய நாடுகளிலும் வெகுவாகப் பரவியிருக்கிறது. ஆன்மீக, யோக வட்டாரங்களில் மட்டுமன்றி ஓவியம், இசை உள்ளிட்ட நுண்கலை(fine art)களிலும் அது உலகளாவிய செல்வாக்கு பெற்றுள்ளது. தாந்த்ரீகத்தின் பூர்வீகம் இந்தியா என்றாலும் இந்திய ஓவியர்கள் மற்றும் தாந்த்ரீகம் புராதனமாக உள்ள பிற கிழக்கு நாடுகளின் ஓவியர்கள் மட்டுமன்றி ஐரோப்பிய, அமெரிக்க ஓவியர்களும் இந்து தாந்த்ரீகத்தின் அடிப்படையிலான மரபு சார் மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியங்களைப் படைத்து வருகின்றனர்.  போலவே திபெத்தின் வஜ்ராயண பௌத்த தாந்த்ரீகம், சீனாவின் தாந்த்ரீக முறையான தாவோயிஸம் அடிப்படையிலான ஓவியங்களும் படைக்கப்படுகின்றன. ஷாராஜ் ஓர் இந்தியர் என்பதாலும், அவர் படைப்பது (பெரும்பாலும்) இந்து மத தாந்த்ரீகத்தையே என்பதாலும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டியது இந்து மத தாந்த்ரீகத்தையே.

இந்து தாந்த்ரீகம் இந்துத்வம் எனப்படும் ஆரியமயமாக்கலுக்கும், இந்தியாவில் ஆரியர்களின் குடியேற்றத்துக்கும் முற்பட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்திலான ஹரப்பா-மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சிகளிலேயே சிவ-ஷக்தி மற்றும் லிங்க-யோனி வழிபாடு மேலோங்ககியிருந்த அடையாளங்களைக் காணலாம். வேத காலத்துக்கு முற்பட்ட மூதாதை திராவிட நாகரிகத்தின்படியாக இருந்த அப்போதைய ருத்ரன் வடிவையே பின்னாளில் குடியேறிய ஆரியர்கள் அழித்தொழிக்கப் பார்த்து, இயலாத பட்சத்தில் சிவன் வடிவாக ஸ்வீகரித்துக் கொண்டார்கள். பிற்காலத்தில் ப்ராமணீயத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த புத்த மதத்தையும் இவ்வாறே அழித்தொழிக்க முயற்சித்து, இயலாததால் புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகக் காட்டி ஆரியமயமாக்கிய அரசியலும் இங்கு நினைவுகூரத் தக்கது.

இந்து தாந்த்ரீகம் குண்டலினி யோகத்தையும் சிவ-ஷக்தி வழிபாட்டையும் ஆதாரமாகக் கொண்டது. தாந்த்ரீகம் அல்லாத பொது வழிபாட்டைக் கொண்டவர்களில், சிவனை முதன்மைப்படுத்தி ஷக்தியை இரண்டாம் பட்சமாகக் கொள்பவர்கள் சைவர்கள், ஷக்தி/காளியை முதன்மைப் படுத்தி சிவனை இரண்டாம் பட்சமாகக் கொள்பவர்கள் சாக்தர்கள் என்பது பரவலாக அறியப்படுவது. தாந்த்ரீகத்திலும் இதே போன்ற சமய மரபு(sect)கள் உண்டு. அதன்படி ஷக்தி வழிபாட்டினைக் கொண்டது வாம மார்க்கம் (Vama margam) அல்லது கௌல மார்க்கம் (Kaula margam) ஆகும். இது இடது மார்க்கம் எனப்படும். யோக, தாந்த்ரீக கோட்பாடுகளின்படி ஆண்-பெண் இரு பாலரிலுமே உடலின் இடது பாகம் பெண் ஷக்தி (female energy) கொண்டது. எனவேதான் இந்தப் பெயர். அதே போல சிவ வழிபாட்டினைக் கொண்ட தாந்த்ரீகம் தட்சிண மார்க்கம் (Dhakshina Margam). அது வலது மார்க்கம் எனப்படும். ஆண்-பெண் இரு பாலரிலுமே உடலின் வலது பாகம் ஆண் ஷக்திக்கு (male energy) உரியது என்பதால் அப் பெயர்.

சிவ வழிபாட்டைக் கொண்ட வலது (தட்சிண) மார்க்கம் மிதப் போக்கு கொண்டது. குண்டலினியை யோகப் பயிற்சி வாயிலாக மேலெழுப்பி பேரின்பத்தை(ecstacy)யும் இறைநிலை*யையும் அடைவதே அதன் நோக்கம். இதில் புலன் கடந்த ஆற்றல் பெறும் சடங்குகள் (occult retuals) எதுவும் கிடையாது. வழிபாடுகள் மட்டுமே உண்டு. இது வெள்ளை மாந்தரீக (white magic) பிரிவில் அடங்கும். காளி, ஷக்தி மற்றும் பைரவி வழிபாட்டைக் கொண்ட இடது (வாம/கௌலா) மார்க்கம் தீவிரப் போக்கு கொண்டது. மைதுனம் (பாலியல் சடங்கு) மூலம் குண்டலினியை மேலெழுப்பி பேரின்பத்தையும் இறைநிலையயும் அடைவதே அதன் செயல் முறை. இந்த சமய மரபு (sect) நிர்வாணமாகத் திரிதல், பாலியல் சடங்குகளை மேற்கொள்ளுதல், மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், மிருக பலி மற்றும் மனித பலி கொடுத்தல், மனித (பிண) மாமிசம் புசித்தல், சுடுகாட்டில் பிணங்களோடு தியானித்தல், எலும்புகளையும் கபாலத்தையும் அணிதல், மாந்த்ரீக சக்திகள் பெறுவதற்காக அமானுஷ்ய சடங்குகளைச் செய்தல் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. இது கருப்பு மாந்தரீக (black magic) பிரிவில் அடங்கும்.

தமிழ் சித்தர்கள், காஷ்மீர பண்டிட்கள் போன்றவர்கள் தட்சிண (வலது) மார்க்கத்தினர். அகோரிகள், காபாலிகர்கள், கௌலர்கள் போன்றவர்கள் வாம (இடது) மார்க்கத்தினர்.

இடது மார்க்கம் துறவு வாழ்க்கையைப் புறக்கணித்து மெய்யுணர்தல் (mystisism) வழியை மேற்கொள்வது. லோகாயத (mundane) வாழ்வில் ஈடுபட்டபடியே மோட்சத்தை அடைய முடியும் என்பதே அதன் மையக் கோட்பாடு. அதை அடையாளப்படுத்தும் விதமாகவே அது பஞ்ச மகார (pancha mahara) தத்துவம் எனப்படும் சடங்கை மேற்கொள்கிறது. மத்யம் (மது), மாமிசம், மல்ஸ்யம் (மீன்), முத்ரா (முத்திரை), மைதுனம் (கலவிச் சடங்கு) ஆகியவையே பஞ்ச மகாரங்கள்.

மைய ஓட்டத்திற்கு மாறாக இயங்கும் வாமாச்சார தாந்த்ரீகம் வேத மறுப்பின் பாற்பபட்டது என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் வேதங்கள் முழுமையையும் அது எதிர்ப்பதில்லை. அவற்றின் உயரிய கருத்துக்களையும், பேருண்மைகளையும் ஏற்றுக்கொள்கிறது. ஜாதிக் கருத்துகள், உயர்வு-தாழ்வு பேதங்கள், ஒழுக்க விழுமியங்கள், ஆச்சார (orthodox) அனுஷ்டானங்கள் போன்றவற்றை மட்டுமே மறுக்கவும் எதிர்க்கவும் செய்கிறது. இதனால் பொதுவாக அடித்தட்டு மக்களுக்கானதாகவும், தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கானதாகவுமே இருந்து வருகிற அது உயர்தட்டு மக்களால் – குறிப்பாக ஆச்சார ப்ராமணர்களால் வெறுத்து ஒதுக்கப்படுவதாகவும் இருக்கிறது.

ஷாராஜின் நவீன தாந்த்ரீக ஓவியங்கள் இடது மார்க்கமான வாமாச்சாரத்தின் சமயக் கொள்கைகளை (doctrine) அடிப்படையகாகக் கொண்டவை. தன்னிலான எதிர் கவிஞரிலிருந்து தன் மூலாதாரங்களை எடுத்துக்கொண்ட ஒரு தாந்த்ரீக ஓவியர் இடது மார்க்கத்தை மேற்கொள்வது ஆச்சரியமானதல்ல. மேலும் அவர் இன்னமும் கடவுள் மறுப்பாளரே என்பதால் இதுதான் அவருக்குப் பொருத்தமானதாகவும் இருக்க முடியும்.

“நான் ஷாக்தன். ஆனால், பொதுச் சமய மரபிலோ, தாந்த்ரீக சமய மரபிலோ உள்ளபடியாக அல்ல. சித்தாந்தப்படியாக மட்டுமே. ஆன்மீக அறிவியல்வாதி என்ற முறையில் எனது ஷக்தி வழிபாடு என்பது எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் ப்ரபஞ்ச ஷக்தியை (cosmic energy) உணர்தலும் வெளிப்படுத்தலுமே. இதில் ஆன்மீகமும் உண்டு; அறிவியலும் உண்டு. வெறுமனே அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த ஷக்தி அணுக்களும் (atom) மூலக்கூறுகளுமாக (molicule) மட்டுமே எஞ்சும். நான் அறிவியல்வாதியே (sciencist) தவிர விஞ்ஞானி  (scientist) அல்ல. மேலும், அடிப்படையில் நான் படைப்பாளன். கலையில் (கவிதை, ஓவியம் எதுவாயினும்) அறிவியலைப் பயன்படுத்தலாம். ஆனால், வெறும் அறிவியல் மட்டுமே கலையாகிவிடாது. அதற்கு ஆன்மீகத்தின் துணை தேவைப்படுகிறது. எனவேதான் ப்ரபஞ்ச ஆற்றலான (cosmic power) குண்டலினி சக்திக்கும், ப்ரபஞ்ச இருத்தலின் (cosmic existence) மும்மை மூலாதாரங்களான (trinity sources) படைத்தல்-காத்தல்-அழித்தல் ஆகிய ஆற்றல்களுக்கும், உயிர்கள் அனைத்திலும் , உயிரும் உருவமும் அற்றவையிலும் கூட உள்ள அடிப்படை முக்குணங்களான சத்வ – ரஜோ – தமோ – குணங்களுக்கும் இந்து மதத்தில் கொடுக்கப்பட்டுள்ள உருக்கொடுப்பு(embodiment)களான கடவுள் உருவங்களையும், மற்ற உருவகங்கள் (metophers) மற்றும் குறியீடுகளையும் (symbols) அதனதன்படியே பயன்படுத்துகிறேன்” என்கிறார் ஷாராஜ்.

சமகால நவீன தாந்த்ரீக ஓவியங்களான இவை தாந்த்ரீகத்தின் வெறும் விளக்கச் சித்திரங்கள் (illustrations) அல்ல. இயல் கடந்த ஆராய்வு  மனம் (metaphysical mind) கொள்ளும் மெய்யுணர்வு(mysticism)களும், ஆன்மீக தரிசனங்களும் (spiritual visions), அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான மெய்ம்மை(reality)களும், படைப்பு மனத் தோற்றங்களும் (creative phantacy) சார்ந்த படைப்பாக்கங்களே. உள்ளடுக்குகள் மிகுந்த – 10 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை விளக்கப்பட வேண்டியதாக உள்ள – இவ்வோவியங்கள் ஆழ்ந்த பொருள் கொண்டவை; ஆன்மீக விழிப்புணர்வை வலியுறுத்துபவை; ஆழ்நிலை தியானத் தன்மையை தன்னகத்தே கொண்டவை.

ஆனால், தாந்த்ரீகம் குறித்து அறியாதவர்களுக்கு முதல் பார்வையில் இவை ஏற்படுத்துவது பலத்த அதிர்ச்சியையே. காரணம் அவற்றில் இடம்பெறும் கடவுள் – கடவுளிகளின் (பொதுவாக சிவன் - ஷக்தி/காளி) நிர்வாணத் தோற்றங்கள், பாலியல் சித்தரிப்புகள், பாலியல் சார்ந்த படிமங்கள் ஆகியவை. குறிப்பாக சிவனின் கபாலம், ஷக்தி/காளியின் யோனிக் கண், யோனித் தாமரை, நிலவின் முலைகள், முலைக் கொம்புகள் போன்றவை. இந்த இணையதளத்தை வடிவமைத்தவரும், ஷாராஜின் நெருங்கிய உறவுக்கார இளைஞருமான ஜீவன் குமார் விஷ்வகர்மன், இவ்வோவியங்களில் ஒன்றிரண்டைப் பார்வையிட்டதுமே, “கலை உலகில் ஓர் அகோரி!” என்றார்.

அந்த ஒற்றை வரி மதிப்பீடு மிகச் சரியானது என்கிறார் ஷாராஜ்.

“கோரா (gora) என்றால் இருள் என்று பொருள். அகோரா (agora) என்றால் இருளை விலக்குதல் என்று பொருளாகும். அகோரி என்பதற்கு இருளை விலக்கி வெளிச்சத்தைக் கொண்டு வருபவர் என்று பொருள். அந்தப்படி பார்க்கும்போது நிச்சயமாக நானும் ஓர் அகோரிதான். மக்களின் மனதில் அறியாமை என்கிற இருள் இன்னமும் இருக்கிறது. தமிழ் சித்தர்கள் சொல்வது போல, அவர்கள் தங்களுக்குள் இருக்கும் கடவுள் நிலைகளை அறியாமல், வெளியே இருக்கும் கடவுள் உருவங்களை வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். நானும் எனது ஓவியங்களும் எல்லா மனிதர்களிலும் உள்ள கடவுள்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம். தட்சிண மார்க்கத்தவர்களான சித்தர்கள் தங்கள் பாடல்களில் செய்ததைத்தான் வாமாச்சாரத்தைச் சேர்ந்த நான் எனது ஓவியங்களில் சமகாலத்துக்குத் தக்கபடி செய்துகொண்டிருக்கிறேன்.

“மற்றபடி கடவுள்களின் நிர்வாணம் மற்றும் பாலியல் சித்தரிப்புகள் இந்து மதத்திற்குப் புதிதல்ல என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. கஜுராஹோவிலும் கோனார்க்கிலும் மட்டுமல்ல, இந்தியாவெங்கிலும் அனேக சிவ-விஷ்ணு ஆலயங்களில்  கோபுரங்களிலும், கருவறை தவிர்த்த பிற பகுதிகளிலும் ஹார்ட்கோர் பாலியல் படங்களை மிஞ்சக் கூடிய வகையிலான, கடவுள்களின் பாலியல் லீலைகளைக் காட்டும் தாந்த்ரீக சிற்பங்களையும் சுதைகளையும் காணலாம். இந்து மதம் பாலியலை விலக்கப்பட்ட கனியாக்கவில்லை. பாலியல் மூலம் பேரின்பத்தை, இறைநிலையை அடையலாம்; அடைய வேண்டும் என்றே அது வலியுறுத்துகிறது. சைவம் மற்றும் ஷாக்தத்தின் அடிப்படையே அதுதான். கோவில் கருவறையில் ஆண்குறி(லிங்கம்)யையும், பெண்குறி(யோனி-பீடம்)யையும் பூஜித்து வழிபடுவதுதானே சைவம்! மதத்தில் இல்லாத ஒன்றையோ, மதத்திற்குப் புறம்பானதையோ நான் வரையவில்லை. தாந்த்ரீகத்தில் இருப்பதை சமகாலத்துக்குத் தக்கபடி அறிவியல் மற்றும் உளவியல் மயமாக்கவும், அதன் உட்பொருள்களை ஆழப்படுத்தவும்தான் செய்திருக்கிறேன்.”

வாஸ்தவம்தான்! வாமாசார மார்க்கமே நிர்வாணத்தையும் பாலியல் சடங்குகளையும் அடிப்படையாகக் கொண்டது எனும்போது அதன் ஓவியங்கள் வேறெப்படி இருக்கும்? ஆலயங்களில் உள்ள நிர்வாண மற்றும் பாலியல் சித்தரிப்புச் சிலைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படித்தான் ஷாராஜின் நவீன தாந்த்ரீக ஓவியங்களையும் பார்க்க வேண்டும். அவற்றில் நிர்வாணம் மற்றும் பாலியலை மட்டும் பார்த்தால் உங்களுக்குள் அவை மட்டுமே உள்ளன என்று அர்த்தம். அவற்றைக் கடந்து உட்பொருள்களைக் காண முடிந்தால் உங்களுக்குள் தரிசனங்கள் துவங்கிவிட்டன என்று அர்த்தம்.

.............................................................................................................
அடிக் குறிப்பு : * இறைநிலை நான்கு வகைப்படும்.
               1. சாலோக்யம் - இறை உலகில் வாழ்தல்
               2. சாமீப்யம் - இறை அருகில் இருத்தல்
               3. சாரூப்யம் - இறை உருவை அடைதல்
               4. சாயுஜ்யம் - இறையுடன் கலத்தல்

வேதாளம் - அரங்கன் தமிழ்


முருங்கை மரத்து
வேதாளத்தை
விக்ரமாதித்தன்
பிடிக்கச் செல்வதாய்
சொல்லும் போதே
உடலில்
நுழைந்து விடும்
திருவிழா
உற்சாகம்

வேதாளத்து கதையோடு
வேதாளம் சொல்லும்
கதையும் சேர்த்தால்
இரட்டை மகிழ்ச்சி

கதை சொல்லி
விடை கேட்கும்
வேதாளத்தின்
இக்கட்டான
இறுக்கத்திற்கு
உடல் வேர்த்து
உள்ளங்கை மிட்டாய்
கரையும்..

பதிலளிக்க மறுத்தால்
தலை வெடித்து
சிதறுமென
பயமுறுத்துகையில்
அனிச்சை செயலாய்
காதுகளை மூடிக்கொள்ளும்
கைகள்

மீண்டும்
மரம் ஏறிக்கொள்வதாய்
முடியும்
வேதாளத்தின் கதை
மற்றுமொரு நாளின்
உற்சாக திருவிழாவின்
துவக்கம்

குளிர் பான
உறிஞ்சுதலோடு
விசைப் பலகையில்
நடனமாடும்
விரல்களால்

கணிணித்திரையில்
கண் படுபவரையெல்லாம்
துப்பாக்கியில் சுட்டு
முன்னேறுகிற
காணொளியோடு
விளையாடும்
அண்டைவீட்டு சிறுவனிடம்

வேதாள விக்கிரமாதித்தன்
கதை தெரியுமா.?
என்று கேட்டால்.
இணையதள முகவரி
இருக்குமா.?

என கேட்கிறான்