.இந்த விசயத்தை எந்த இடத்திலிருந்து துவங்கலாம் என்று தெரியவில்லைதான்.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவமாகையால் ஓல்டு ஈஸ் கோல்டு என்றே மனதில் இத்தனை காலம் கிடப்பில் கிடந்து இப்போது பகிர்ந்து கொள்ள நேரம் வந்துவிட்டது. பீடிகை எல்லாம் பலமாய்த்தான் இருக்கிறது விசயத்திற்கு வா என்கிறீர்களா? இதோ -
சென்னிமலையில் ஊர் முழுவதும் கைத்தறி மற்றும் விசைத்தறியின் கடக்கடக் சப்தம்தான்.இரவு பகல் என்று ஊரே அந்த சப்தத்தில்தான் உறங்கும்,விழிக்கும். விஜயமங்கலம் ரயில் நிலையத்திற்கு அருகேயே எனது வீடு என்பதால் இரவு முழுக்க விரைவு வண்டிகளின் தடதட சப்தம் எனக்குத் தாலாட்டு. என்னை சந்திக்க வரும் வெளியூர் நண்பர்கள் இரவு முழுதும் தூக்கமின்றி தவிப்பார்கள். என்னுங்க கோமு... ரயில் தலை மேல ஏறிப் போறாப்லயே இருக்குது என்பார்கள். விசயத்திற்கு வருவோம். சுற்று வட்டாரங்களில் 15 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தெல்லாம் சைக்கிளிலோ பேருந்திலோ பயணம் செய்து சென்னிமலை குறுநகருக்குள் பணி செய்து ஊர் திரும்பிப் போவார்கள் பணியாளர்கள்.
அப்படி சைக்கிளில் நெசவிற்காக சென்னிமலை சென்று வந்து கொண்டிருந்தவர் தான் எலையாம் பாளையம் சின்னச்சாமியண்ணன். இப்போது அவருக்கு வயது 58 நடக்கிறது. 1200 வாக்குகள் கொண்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் இரண்டு முறை வேட்பாளராய் நின்று, இரண்டு முறையும்
குண்டு பல்ப் சின்னமே பெற்று,இரண்டு முறையும் 43வாக்குகளை பெருவாரியாகப் பெற்றவர். ஓட்டு சேகரிக்க மக்களிடம் சென்றால்தானே வாக்கு எண்ணிக்கை கூடும். இவர் போகவே மாட்டார். ஓட்டு கேட்க கூட்டமாய் போலாம்னு சொல்லுவீங்க! சாப்பாடு போடச் சொல்லுவீங்க, சாராயம் வேணும்பீங்க, ஊர்வலம் போகலாம்னுவீங்க! லாரி ஏற்பாடு பண்ணும்பீங்க! மைக்செட் கட்டணும்பீங்க! போஸ்டர் அடிக்கணும்பீங்க! பீங்க! பீங்க! எவங்கிட்ட இருக்குது மொதலு?இரும்பு கரும்பாச்சு,இட்டாறியும் பள்ளமாச்சுன்னு நான் தலையில துண்டு போட்டுக்கணும் என்பார்.
இந்த முறை எலக்சன்ல நிற்கலைங்ளாண்ணா?என்று குட்டி காட்டில் செம்மறி ஆடுகள் பதினைந்து உருப்படிகளை மேய்த்துக் கொண்டிருந் தவரிடம் கேட்டேன்.வயசாயிடுச்சு தம்பி... நின்னாலும் 43 ஓட்டு கெட்டி இன்னிக்கும் எனக்கு, என்றார் நரைத்த மீசையைத் தடவிக் கொண்டே.எனக்கு சட்டென்று பழைய கவிதை ஒன்று ஞாபகத்தில் வந்தது. நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால் உதிர்ந்த பூக்களும் ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக் கொள்ளும். மு.மேத்தாவின் வரிகள் என்றுதான் ஞாபகம்.
சென்னிமலையில் வண்டிப் பேட்டை ஒரு பிரதான இடம்.அங்குதான் தியாகி குமரனின் சிலையும் இருக்கிறது.எதிரே கொமரப்பா துவக்கப் பள்ளியின் நேர் எதிர்க்கே பெண்கள் மேல் நிலைப்பள்ளியும் இருக்கிறது.சின்னச் சாமியண்ணன் போண்டா பிரியர்.தறி நெய்துவிட்டு வந்த களைப்பில் இரண்டு போண்டாவும்,ஒரு டீயையும் போட்ட பிறகு சைக்கிளெடுப்பது தினசரி வழக்கம். அன்றும் அப்படியே!கல்லாவில் காசைக் கொடுத்துவிட்டு சைக்கிள் நிறுத்திய இடம் வந்தவர் அதிர்ந்து நின்றார்.இவர் போண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த பொன்னான நேரத்தில் இவரது சைக்கிள் தேர்ந்த சைக்கிள் திருடனால் களவாடப் பட்டுவிட்டது.
கையில் வெறும் சாவியை வைத்துக் கொண்டு பச்சை கலர் சீட்டுகவர் போட்ட ஹெர்குலஸ் வண்டி... பார்த்தீங்ளா? யாராச்சும் எடுத்துட்டு போறதை பார்த்தீங்ளா?கண்ணு மூடி முழிக்கிறதுக்குள்ள காணாமப்போச்சே!என்று சுற்றிலும் இருப்பவர்களிடம் புலம்பலை ஆரம்பிக்க அவர்களோ தங்கள் உதடுகளை பிதுக்கிக் காட்டிவிட்டு,ச்சோ ச்சோவென உச்சுக்கொட்டி கவலை காட்டினார்கள். காலையில யார் முகத்துல முழிச்சேன்? வர்றப்ப பூனை குறுக்கே போச்சோ? இல்லை செம்பூத்து போச்சோ? இல்லை விறகுச்சுமை எதிர்க்கே வந்துச்சோ?என்ற எண்ணங்களில் ஏரீஸ் பஸ் ஏறி எலையாம்பாளையம் வந்து விட்டார். விடிய விடிய தூக்கமும் இல்லை.
காலையில் பேருந்திற்காய் காத்திருந்த சின்னச்சாமியண்ணனிடம் பேருந்தில் உள்ளூர்வாசிகள் ஏது அதிசயமா இருக்கே என்று வினவிய சமயம் அண்ணன் தன் கவலையை அவர்களிடம் இறக்கி வைத்தார்.அவர்களோ ப்பூ இவ்ளோதானா விசயம்? இதற்காகவா சொங்கு முறிந்த மாதிரி இருக்கீங்க? கவலையே பட வேண்டாம் என்றவர்கள் சென்னிமலை வந்து இறங்கியதும் அண்ணனை கையோடு கூட்டிக்கொண்டு கிழக்கே அரச்சலூர் செல்லும் பாதையில் சென்றார்கள்.குறுகிய வீதியில் சந்து சந்தாய் கூட்டிச் சென்றவர்கள் ஒரு வீட்டின் முன் தோராயமாய் நின்று, வேலா டேய் வேலா! என்று குரல் கொடுத்தார்கள்.
வேலன் இவர்கள் குரலுக்காய் வெளிவரும் அரவமே கேட்கவில்லை. பதிலாக பத்து வயது பொடியன் பள்ளிச் சீருடையில் விரல் சூப்பிக் கொண்டு வீட்டின் கதவருகே வந்து யார்? என்று பார்த்தான்.
""அப்பனும் நானும் சோறு உண்டுட்டு இருக்கோம்'' என்று சொல்லி விட்டு வீட்டினுள் மறைந்து போனான். வேலன் வெளிவர ஐந்து நிமிடம் ஆயிற்று. வெளி வந்தவன் இவர்களை குழப்பமாய் பார்த்தபடி, என்ன விசயம் சொல்லுங்க? என்றான்.
"நேத்து சாயந்திரம் வண்டிப் பேட்டைல அடிச்சியே ஹெர்குலஸ் சைக்கிள்... அதைக் குடுத்துடு...நாங்க கிளம்புறோம்.வேற மறுபேச்சி ஒன்னும் வேண்டாம்.நம்ம பயதான்... சைக்கிள் சென்னிமலைய வுட்டு எங்கீம் போயிருக் காதுன்னு அண்ணனை கூட்டி வந்துட்டேன். அலம்பல் பண்ண வரலை'' என்றார் முத்துச் சாமியண்ணன்.
"இதென்ன அலும்பா இருக்குது உங்ககூட, எங்கயோ போற ஆத்தா எம்மேல வந்து ஏறாத்தாங்கற கதையா சைக்கிளை
காணம்னா தடம் போட்டுக் குடுத்துட்ட மாதிரே தரூவா எம்படகிட்டயே வர்றீங்க? போலீஸ் ஸ்டேசன்ல நான் இனி சாவும் முட்டும் சைக்கிள் தூக்கமாட்டன்னு எழுதிக்குடுத்து ஒரு வருசத்திற்கும் கிட்ட ஆயிப்போச்சுங்க எஜமான். நான் இப்பல்லாம் சைக்கிள் தூக்குறதை உட்டுட்டேன். டி.வி.எஸ். மொபெட்தான் தூக்குறேன். ரெண்டு பணம் உண்டுனா கிடைக்கிறதப் பார்ப்பாங்களா வுட்டுட்டு...எதுக்கும் ஊடு தேடி வந்தட்டீங்க...நான் சொன்னேன்று வேண்டாம்...
மேலப் பாளையத்துல சென்னின்னு என்ற சோடே ஒருத்தன் இருப்பான்.அவன்தான் இன்னும் சைக்கிள் தூக்குறான்.அவனைப் போய் விசாரிங்க எஜமான். உங்க சைக்கிள் எங்கீம் போயிருக்காது...போங்க கெடச்சுடும்''.வேலன் இவர்களைத் தாட்டிவிட அரை மனதாய் இவர்களும் மீண்டும் வண்டிப் பேட்டை நோக்கி நடந்தார்கள்.
வண்டிப் பேட்டையிலிருந்து நேர் மேற்கே ஊத்துக்குளி செல்லும் பாதையில் இவர்கள் சென்றார்கள்.சென்னியின் வீட்டை இவர்கள் கண்டு பிடிப்பதில் அப்படி ஒன்றும் காலதாமதம் ஏற்பட வில்லை. ஊரின் கடைகோடியில் இருந்தது சென்னியின் குடிசை. இவர்களின் குரல் அழைப்பில் சென்னி தூக்கச் சடவில் எழுந்தவன் கண்ணில் உள்ள பீழையைத் துடைக்காமல் குடிசையிலிருந்து வெளி வந்தான். சூரியனின் ஒளி அவன் கண்களை கூசச் செய்தது!வலது கை விரல்களை படுகிடை விதமாய் வைத்து யார் எவர் என்று அடையாளம் பார்த்தவன் போதை தெளியாதவனாய் இருந்தான்.
""சாமி நீங்களா?'' என்றவன் பொடக்காலி சென்று முகம் கழுவிக் கொண்டு வந்தான்.
"சாமியத் தெரியுமே! எலையாம் பாளையத்துக்காரருதான நீங்க! இந்த இத்துப் போனவனைத் தேடி காத்தால வந்திருக்கீங்க! என்ன விசயமுங்க?'' என்றான் சென்னி.
"அடப் பாப்புரு, நீதான சென்னிங்றவன்? நேந்து சாயங்காலம் தூக்குனியே சைக்கிளு... அது எம்படதுடா!'' என்றார் சின்னச் சாமியண்ணன்.
"சாமி அது உங்குளுதா? தெரிஞ் சிருந்தா கிட்டக்கூட வந்திருக்க மாட்டனுங்களே!'' என்றவன் தலையை பிப்பு வந்தவன் போல சொறிந்தான்.
"என்றா மண்டையச் சொறியுறே? சைக்கிள் எங்கே?''
"அப்பவே சைக்கிள் கடையில உட்டுட்டனுங்ளே சாமி... அக்கு வேறா ஆணிவேறா இந்த சுடிக்கு பிச்சு வீசி இருப்பானுங்ளே அவன்க. அதான் என்ன பண்றதுன்னு தெரியில''.
"மூட்டிக் குடுக்கச் சொல்லிட லாம்டா... எந்தக் கடைல வுட்டே? லட்சுமிலயா?''
"போனது வந்ததை மாத்தி ஓவராயல் பண்டி மாட்டச் சொல்லிடலாம் மாமா'' என்றான் கூட வந்த வலசு.
"சாமி பிரிச்ச வண்டிய மூட்ட அவன்க இரநூத்தி அம்பது ரூவா கேப்பானுங்களே!''
"குடுத்துட்டாப் போச்சு... மேல் சொக்கா போட்டுட்டு வாடா போலாம்''.
"சாமி மேல ஒரு நூறு ரூவா குடுத்துருங்க''.
"அது எதுக்குடா?''"இல்ல சிரமப்பட்டு அடிச்சேன்... எனக்கு ஒன்னுமில்லாம போயிடுமாட்ட. அப்புறம் நாளையும் பின்னி அந்தக் கடைக்கி போவ முடியாமப் போயிடும்''.
"மண்டையச் சொறியாதடா, வா போலாம்!'' அவனை இழுக்காத குறையாய் இழுத்துப் போனார்கள்.இப்படியாக சின்னச்சாமி யண்ணனுக்கு திருடுபோன சைக்கிள் கைக்கு கிடைத்தது.அதன்பின் சைக்கிளின் முன் சக்கர வீலிலும் பூட்டு மாட்டி இரண்டு சாவி வைத்துத்தான் ஓட்டினார்.சைக்கிளை இப்போது யாரும் முக்கிய பயண ஊர்தியாக மதிப்பதில்லை தான். பெட்ரோல் விலை உயர்வு காரணமாக உள்ளூரில் சிலர் தேடிப் பிடித்து பழைய சைக்கிள் வாங்கியிருக்கிறார்கள்.
ரேசன் கடை,மளிகைக் கடை செல்ல டிவியெஸ்ஸில் பர்ர்ர் எனச் சென்றவர்கள் சைக்கிளில் செல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.ஒரு லிட்டர் எண்ணெய் ஊத்தினால் நாற்பது கிலோ மீட்டரோ என்னமோதான் கிடைக்குது பங்காளி...பொழப்புக்கு சிப்காட் போனா கரண்ட் இன்னிக்கி இல்ல நாளைக்கி வான்னு தாட்டி உட்டுடறாங்க! ஒன்னும் கட்டுப்படி ஆகலை.அதான் சைக்கிளை எடுத்துட்டேன்.கிறீச் கிறீச்சுன்னு பெடல்கட்டைக தான் கத்துதுக...தேங்கா எண்ணெய் ரெண்டு நாளைக்கி உட்டம்னா சத்தம் நின்னுடும்.
வேலைவெட்டி எதுவுமில்லாமல் இருக்கும் நான் என் பஜாஜ் டிஸ்கவரை எடுக்கும் போதெல்லாம் முக்கியமான வேலைக்காகத்தான் வண்டியை எடுக்கிறேனா? என்று கேட்டுக் கொள்கிறேன். கொரியர் வந்திருக்கு என்று மிஸ்டுகால்தான் வரும். அதை வாங்கி வர ஆறு ஆறு பனிரெண்டு கிலோ மீட்டர் கணக்கு ஆகிறது.வந்த கொரியர் என்ன அவ்வளவு முக்கியமா? என்று பார்த்தால் அது அதைவிட கடுப்பை வரவழைக்கிறது. எந்தக் கொரியராக இருந்தாலும் ஆபிஸிலேயே போட்டுவிடுங்கள் பத்திரமாய்! என்று சொல்லிவிடுகிறேன். ஒரு கதை அனுப்ப வேண்டும் என்றால் சர்ர்ர் என்று கிளம்பியவன் இரண்டு மூன்று பத்திரிக்கைக்கு எழுதி கவர் போட்ட பிறகு தான் கிளம்புகிறேன்.வந்து கிடப்பில் கிடந்த கொரியர் கவர்களை அந்த சமயத்தில் பெற்றுக் கொள்கிறேன்.ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடிக்கும் வித்தைதான். சமீபமாக ஜெராக்ஸ் ஒரு பக்கத்திற்கு 1ணீ ரூபாயாக விலை ஏற்றம் நடந்து விட்டதால் அந்த வெட்டி வேலையை நிறுத்திவிட்டேன். பொறுக்கித் திங்கிற கோழிக்கு மூக்கைத் தறிச்சுட்ட மாதிரி, வெசியமங்கலத்துலயா இருக்கீங்க? வர்றப்ப ஒரு கிலோ தக்கோளி வாங்கிட்டு வந்துருங்க,என்று மின்சாரத்தின் குரல் அலைபேசியில் வரும். வாழ்க்கையை புதிதாய் வாழப் பழக வேண்டியிருக்கிறது.
சென்னிமலை குறுநகரத்தில் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது.எலையாம்பாளையம் சின்னச்சாமியண்ணன் அன்றைய நாளில் மூன்று மணிக்கு தறியிலிருந்து இறங்கி விடுவார். வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்கென்றே இரண்டு பெரிய துணிப் பைகள் வெள்ளி அன்று கொண்டு வருவார்.இது எப்போதும் வழக்கமான ஒன்று தான். அன்று நடந்த சம்பவமோ இனி எப்போதும் அவருக்கு நடக்காத சம்பவம்.காய்கறிகளை வாங்கி பையை நிரப்பிக் கொண்டவர் கடைசியாய் செங்கீரைக் கட்டுகள் மூன்றை வாங்கி சைக்கிளின் ஹேண்ட்பாரில் மாட்டியிருந்த பையில் நேராக ஓரளவு நிற்குமாறு செருகிக் கொண்டு கிளம்பினார்.
குறுநகரில் செல்வி துணிக் கடலைத் தாண்டுகையில் துண்டு இரண்டு எடுத்துப் போகும் யோசனை வந்துவிடவே சைக்கிளை துணிக்கடல் முன் ஸ்டாண்டு போட்டு நிறுத்தினார். வீட்டில் இருக்கும் துண்டுகள் பொத்தல் விழுந்தும் நார் நாராய்க் கிழிந்தும் போய்விட்டபிறகு அதை குளித்தபின் எடுக்கையில் எல்லாம் வேறு வாங்க வேண்டும் என்ற யோசனை தான். இன்றுதான் சாத்தியமாகிறது.
சைக்கிளை கீரைக் கட்டோடு நிறுத்தியவர் சென்னிமலை ஆடுகள் கூட்டத்திற்குப் பயந்தார். சென்னிமலையில் போஸ்டர் மேயும் ஆடுகள் அதிகம். எதை வேண்டுமானாலும் அவைகள் உண்ணும். அவற்றின் வயிறுகள் எந்த நேரமும் வண்ணான் தாழி போலவே இருக்கும். யார் வளர்க்கிறார்கள்?யாருடைய செல்லப் பிராணிகள்?இரவு நெருங்கும் சமயம் தங்கள் எஜமானர் வீடுகளுக்கு அவைகள் சென்றுவிடுகின்றனவா?ஒன்றும் தெரியாது. அதேபோல் குரங்குகளின் தொந்தரவு ஊர் முழுக்கவும்தான். வீட்டின் கூரைகளில் கூட்டமாய் லாவகமாய் ஓடும் அவைகளை யாரும் அதிசயமாய் பார்ப்பதில்லை.அவைகள் களவாட வீட்டினுள் நுழைகையில் தான் தடிகொண்டு விரட்டுவார்கள்.
சின்னச்சாமியண்ணன் ஆடுகளை அந்த வீதி முழுக்கத் தேடினார்.வீதியில் அவைகள் இருப்பதற்கான அடையாளமே இல்லை.அப்பாடா!மனதில் நிம்மதியை உணர்ந்தபடி துணிக்கடலின் படிகளில் கால் வைத்து மேலே ஏறினார்.
""வாங்க ஐயா!'' என்று வாட்ச்மேன் உயர்ந்த கண்ணாடிக் கதவை உள்ப்புறமாகத்தள்ளி அழைத்தார்.இவரும் உள் நுழைந்தார். துண்டு வேண்டுமென்ற விசயத்தை சிப்பந்திகளிடம் சொல்ல அவர்கள் கலரா? வெள்ளையா? என்று கேட்டு கலர் துண்டுகளை டஜன் கணக்காக இவர் முன் விரித்தார்கள்.
சின்னச்சாமியண்ணனின் பார்வை வெளியே நின்றிருக்கும் தன் சைக்கிளின் மீதே அடிக்கடி சென்று கொண்டிருந்தது. துண்டை விரித்துக் காட்டிய பெண்கள் இருவரும் வெளிய என்ன? என்று பார்த்து குழப்பமானார்கள்.பச்சை நிறத்தில் இரண்டு துண்டுகளை எடுத்துக் கொண்டவரிடம், வேற வேட்டி, அண்டர்வேர் வேணுங்ளா ஐயா? என்றனர். மறுக்கா வர்றப்ப பாத்துக்கலாம் என்றவர் தன் சைக்கிளை நோக்கிப் பார்த்தவர் அதிர்ந்தார்.
வெள்ளை நிற ஆட்டுக்கிடாய் ஒன்று இவர் சைக்கிளின் ஹேண்ட்பாரில் முன்னங்கால்கள் இரண்டையும் வைத்து கீரைத் தழைகளை சுவையாய் அசை போட்டபடி இருந்தது.கடைக்குள்ளிருந்தே
""ஏய்! உச்சு உச்சு!''என்று லுங்கியை மடித்துக் கொண்டு நேராக விரைவாய் நகர்ந்தார்.பனால் என்ற சப்தமுடன் கண்ணாடி பாளம் பாளமாய் விழுந்து நொறுங்கின. அண்ணன் தலையில் காயம்பட்டு சட்டையில் ரத்தச் சிதறலோடு படியிறங்கி ஆட்டை விரட்டினார்.
"உனக்குத்தான் சந்தைபோயி கீரை வாங்கிட்டு வந்தனா நானு?'' சப்தத்தில் பக்கத்து பக்கத்து கடைகளிலிருந்து ஆட்கள் கூடிக் கொண்டனர்.
""யோவ், கண்ணாடி விலை என்ன தெரியுமா? காசைக் கீழ வச்சுட்டுப் போய்யா'' கடை ஓனர் ஆரம்பித்தார்.
""என்ன காசா? மண்டை ஒடஞ்சு ரத்தம் போயிட்டு இருக்குது...இவுனுக்கு காசு அவுக்கோணுமாம் நானு!நீ குடு காசு... பழனிச்சாமி டாக்டர் கிட்ட போய் தெய்யல் போட்டு மருந்து வெச்சு கட்டீட்டு போணும்'' என்று அண்ணன் கத்தல் துவங்கியது.வேப்பங்காய்க்கு பாவக்காய் சாட்சி சொன்னாப்ல அண்ணனுக்காக பத்துப் பேரு பேசப் போக துணிக்கடல் ஓனரு அண்ணங்கையில ஐநூறு குடுத்து தாட்டி உடாத குறையா அனுப்பி வச்சாரு.
இப்பிடியாப்பட்ட சின்னச் சாமியண்ணன் ஆடுகள் ரெண்டு ரயில் தண்டவாளத்துக்கு குறுக்க ஓடுதே,ரயிலு வேற வருதே,மொதலு வீணாப் போயிருமேன்னு விரட்ட ஓடி தடுக்கி விழுந்து ரயில்ல அடிபட்டு செத்துப்போன சம்பவத்தை சொல்லுறப்ப கொஞ்சம் மனசுக்கு சங்கட்டமாத்தான் இருக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக