ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

தள்ளாடி தடுமாறும் நடைகள்- ஏக்நாத் ராஜ்



தள்ளாடி தடுமாறும் நடைகள்-ஏக்நாத் ராஜ்

மூக்காண்டியை இப்படி பார்ப்பது அரிதான காட்சிதான். புதுவேட்டி, சந்தனக்கலர் சட்டை, சவரம் செய்யப்பட்ட முகத்துடன் அவனைப் பார்த்து மாதங்களாகி விட்டது. மடித்துக்கட்டிய வேட்டிக்குள்ளியிலிருந்து தொடைவரை தொங்கும் பட்டாபட்டி டிரவுசருக்குள் பீடிக்கட்டும் தீப்பெட்டியும் தனியாக தெரிந்துக் கொண்டிருந்தது. தோளில் தொங்குகிற, மஞ்சள்நிற கறை கொண்ட வெண்ணிறத் துண்டில், சந்தனம் தடவப்பட்டிருந்தது. நடுவி்ல் உச்சியெடுக்கப்பட்ட எண்ணெய் தடவிய தலையில், இடமும் வலமும் படிக்கட்டுகளைப் போல சுருண்டு மடிந்து இருந்தது முடி. கன்னம் வரை வந்திருந்த கிருதா, அனாதரவாக நின்றிருந்தது இரண்டு பக்கமும்.

பஸ்நிறுத்தத்தில் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிற வேப்ப மரத்தில் ஒரு கையை வைத்துக்கொண்டு மறுகையால் இடுப்பைப் பிடித்தபடி நின்றிருந்தான் அவன். சிறியதுமல்லாமல் பெரியதுமல்லாமல் வளர்ந்திருக்கிற மீசையை திருக்கியிருந்தான். குழந்தையாக இருந்தபோது நேர்த்திக்கடனுக்காக அவன் மூக்கில் ஒரு வளையம் போடப்பட்டிருந்தது. சிறுவயதில் அடிக்கடி ஏதாவது ஒரு நோயின் தாக்கத்தால் பலமிழந்திருப்பான் மூக்காண்டி. அடிக்கடி இப்படி நோய் தாக்குவதால், ஏதாவது சாமி குத்தம் இருக்குமோ என்று ஆண்டி கோயிலில் குறி கேட்கப்போனாள் மூக்காண்டியின் ஆச்சி. அங்கு குறிசொன்னவர், 'மூக்கை கோரப்படுத்தி சாமியை கும்புடு சரியாவும்' என்று அருள் வந்து ஆடி சொன்ன குறியின் பொருட்டு அவன் மூக்கு கோரப்படுத்தப்பட்டது. இதனால் அவன் 'மூக்குவாளி' என்று சிறுவயதில் அழைக்கப்பட்டிருந்தான். இப்போது மூக்கு வளையம் இல்லை. அது போடப்பட்டிருந்த வலது பக்க மூக்கில், கருப்பு நிறத்தில் மக்கிப்போன ஓட்டை, அடையாளமாக இருந்தது. 

அதே இடத்தில் நின்றுகொண்டே, வலப்பக்கமாக அடிக்கடி தலையை நீட்டி நீட்டி, பஸ் வருகிறதா என்றும் பார்த்துக்கொண்டான். தூரத்தில் வருகிற வேன் அல்லது லாரிகளின் சத்தங்கள், பஸ் என்று ஏமாற்றிக்கொண்டிருந்தது.

'
என்ன மூக்கா... வெளியூராடே..?' -போகிற வருகிறவர்கள் கேட்கிற இந்த கேள்விக்கு, தொண்டையை கணைத்துக்கொண்டு பதில் சொல்வான்.

'
ஆமா... விகே.புரத்துல சின்ன மாமன் மவா, சடங்காயிருக்கா. அதான்' என்கிற அவன் சத்தம், கிட்டதட்ட பஸ் நிறுத்தத்தை சுற்றியிருக்கிற பெரும்பாலான வீடுகளுக்கு தகவலாகச் சென்றிருக்கும். அப்படியொரு அவயம் அவனுடையது. சிலருக்கு சத்தங்கள்தான் பலம். சிலருக்கு உருவங்கள். சிலரின் உருவத்துக்கும் சத்ததுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ஆனால், மூக்கனுக்கு இந்த சத்தம்தான் பலம்.

'
சரி, இப்படி வெள்ளையும் சொள்ளையுமா போறானே... சாயந்திரம் இப்படியே வந்துருவானாட்டி, பாப்போம்' என்கிற பெண்களின் கிண்டல்கள் அவனை நேரடியாகவே பல முறை தாக்கியிருக்கின்றன. எந்த இடக்கும் அவனை எதுவும் செய்துவிடாது. 

அதிகாலையில் நான்கு மணிவாக்கில் என்ன மழை, பனியடித்தாலும் சரியாக எழுந்துவிடுவது, மாடுகளில் பாலை கறந்துவிட்டு ஆழ்வார்க்குறிச்சி, செட்டிகுளம், கல்யாணிபுரம், சிவசைலம், கோயிந்தபேரி ஆகிய கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்ப, பகல் பதினோரு மணிக்கு மேலாகிவிடும். வரும் வழியில் ஆற்றில் பால்கேனை நன்றாக கழுவுவான். பிறகு காலை நனைக்கும் தண்ணியில் குளியலை போடுவான். புறப்பட்டு வருவதற்குள் நனைத்த துணிகள் காய்ந்துவிடும். பஸ் நிறுத்தத்தில் இருக்கிற துரையப்பா கடையில் டீ குடித்துவிட்டு, நின்றுகொண்டே நாளிதழ்களை மேம்போக்காக பார்ப்பான். 

''
நேத்து காலைல ஆழ்வாரிச்சுக்கு எம்மெல்லே வந்தாரு... போட்டோவயே போடலையே?'என்பான் பக்கங்களை புரட்டிவிட்டு. பிறகு ஒரு பீடியை பற்றவைத்துவிட்டு சைக்கிளை மிதிப்பான். கருவேலப்பிறை தாண்டியதும் வலப்பக்கம் திரும்பி சைக்கிளை வீட்டின் சுவற்றில் சாய்ப்பான். பூட்டி சாவியை எடுத்துவிட்டு வீட்டுக்குள் போவான். திண்ணை தாண்டிய வீட்டு வாசலுக்கு மேலே, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற கருப்பு வெள்ளை புகைப்படங்களில், மாலையணிவித்து பொட்டு வைத்திருக்கிற மணிமேகலையின் அருகில் அவன் புகைப்படமும் இருக்கும். அவனையறியாமலேயே கண்ணிலிருந்து பொல பொலவென்று தண்ணீர் வரும். வீட்டுக்குள் அம்மாவானவள், கஞ்சி, தண்ணியை வைத்திருப்பாள். ஈராயங்கத்தோடு ரெண்டு சட்டி தின்பான். சாப்பிட்டு ஏப்பம் விட்டதும் குட்டித்தூக்கம். இரண்டு மணி வாக்கில் எழுந்ததும்தான் அவனது உலகம் ஞாபகத்துக்கு வரும். 

அம்மாவானவளுக்கும் அவனுக்கும் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை. பேச்சு வார்த்தைதான் இல்லையே தவிர, மற்றபடி சாப்பாடு உள்ளிட்ட தேவைகளுக்கு பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தான். வேறு தேவைகள் என்றால் பக்கத்து வீட்டு பிரமு மகன், ''ஏண்ணே, ஆச்சிக்கு இருவது ரூவா வேணுமாம்?" என்பான். ஏன், எதற்கு என்ற கேள்வியெல்லாம் கிடையாது. இருந்தால் கொடுத்துவிடுவான்.

வீட்டிலிருந்து நடப்பான். அவனது நடையும் போகிற வேகமும் எங்கு போகிறான் என்பதை தெருவில் இருக்கிறவர்களுக்கு உணர்த்திவிடும். இது ஒன்றும் புதிதில்லை என்பதால், அவர்களுக்கு அது பற்றிய அக்கறை இல்லை. புளியமரங்கள் இருக்கும் சாலையின் எதிரே மரத்தட்டிகளால் மறைக்கப்பட்டிருக்கிற கடைக்குள் போவான். இவனைப்போலவே அங்கு நான்கைந்து பேர் இருப்பார்கள். கடையில் இருக்கும் கோபாலு, 'மணியாச்சே... ஆளை காணும்னு பாத்திட்டிருந்தேன்" என்பான். ஒரு பாட்டிலை வாங்கி அதை மூன்று கிளாஸ்களில் விடுவான். ஒரே மடக்கில் ஒரு கிளாசை முடித்துவிட்டு, பட்டை ஊறுகாயை நக்கிக் கொள்வான். இப்படியே ஒவ்வொரு கிளாசையும் முடித்துவிட்டு, தலையை ஒரு சிலுப்பு. நரம்புகளின் வழியே ஜிவ்வென்று வீரம் தலைக்கேறும். ஜல்லிக்கட்டில் திமுறுகிற காளைகளின் கண்கள் மாதிரி ஆக்ரோஷமாக பார்வை மாறும். கால்கள் தடுமாற ஆரம்பிக்கும். உள்ளேயே சிறிது நேரம் குத்த வைத்து அமர்ந்திருப்பான். ஊறுகாய் காலியான பட்டையை நக்கிவிட்டு, ஸ்ஸ் என்பான். அதற்கு பிறகு அவனால் அங்கு இருப்பு கொள்ள முடியாது. வெளியே வருவான். கால்கள் தள்ளாட தள்ளாடி தடுமாறும் நடை. 

எதிரில் வந்து போகிற யாராவது, 'ஏல, ஏம் இப்படி போற... அந்தா அந்த திண்ணையில உட்காரு' என்றதும் அவன் வார்த்தைகள் வேறு வடிவம் எடுக்கும். ஊரில் புழங்குகிற கெட்டவார்த்தைகள் இவன் வாயின் வழியாக வெளிவந்து சிதறும். இதனாலேயே, உள்ளூர்க்காரர்கள் அவனை எதுவும் சொல்வதில்லை. அவனது திட்டல்கள் எந்த தனிப்பட்ட நபரை பற்றியானதாக இருக்காது. பொதுவானதாகவே இருக்கும். கெட்டவார்த்தைகளை கூட, அடுக்குமொழி போல் பேசுகிற சுபாவம் கொண்ட மூக்கன், சில நேரம் அந்த தெருவில் இருக்கிற கீரைத்தோட்டத்துக்கு முன்பக்கமாக மல்லாந்துவிடுவான். தெம்பாக உணர்கிற சில நாட்களில் கொஞ்சம் அதை தாண்டி கருவேலப்பிறை வாசல்வரை தாங்கும். தரையில் உருண்டு புரண்டு புழுதியோடு அவன் கிடப்பதைப் பார்க்க பாவமாக இருக்கும். மூக்கன் உள்ளாடை அணிவதில்லை என்பதால் அவன் கோலம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துகொள்க.

அந்த வழியாக செல்கிற பெண்கள், இதை கண்டும் காணாமலும் போக முடியாது. 

'
ஏய் செல்லையா, இந்தப் பய வேட்டியை ஒழுங்கா இழுத்து விடுல... குடிகார நாயி கெடக்கு பாரு... கழுதைக்கு கெடந்தால' என்கிற அவர்களின் வார்த்தைகள், எப்போதும் கையில் கம்போடு அலையும் செல்லையாவுக்கு கேட்டதும் வேட்டியை இழுத்துவிடுவான். கிட்டத்தட்ட செல்லையாவுக்கு இது தினசரி வேலையாகவே போய்விட்டது. யார் சொல்லியும் அவன் கேட்கவில்லை. அவனது சித்தப்பா உள்ளிட்ட உறவுகள் பேசிப்பேசி பார்த்தும் அவன் குடியை விடுவதாக இல்லை என்று தெரிந்ததும் அவனை கை விட்டார்கள். 

மாலை ஆறரை, ஏழு மணி வாக்கில் எழுந்திருப்பான். தலை முதல் கால்வரை புழுதி போர்த்தியிருக்கும். விலகி தூரமாக கிடக்கும் வேட்டியை வேகமாக எடுத்து இடுப்பில் கட்டுவான். அக்கம் பக்கம் யாருமிருக்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு துண்டை தேடுவான். அது கொஞ்சம் பின்பக்கமாகவோ அல்லது முன் பக்கமாகவோ கிடக்கும். எழுந்து நிற்கும் போது கால் தடுமாறும். தலையை அங்கும் இங்கும் ஆட்டுவான். வாய்க்காலை நோக்கி நடக்கத்தொடங்குவான்.

இதுவரை என்ன நடந்தது என்பது அவனுக்கு தெரியாது. 'என்னடே உங்க பெரியம்மையே இந்தா ஏச்சு ஏசுன?" என்றாலோ, 'பக்கத்து வீட்டுக்காரை அடிக்கப் போயிட்டியே" என்பதாக யாராவது கேள்வி கேட்டால், 'அப்படியா... ச்சே...ச்சே, நான் போய் அப்படி செய்வனா?' என்பான் சிரித்துக்கொண்டு. வாய்க்காலில் குளித்துவிட்டு, கருவேலப்பிறை டீக்கடை. சுக்காப்பிகுடித்துவிட்டு, வீட்டுக்கு கிளம்புவான். வீட்டுக்கு திரும்பும் முக்குக்கு முன்னால் இருக்கிற பஜனை மட திண்டில் அமர்வான். ஏற்கனவே அங்கு அமர்ந்திருக்கிறவர்கள், '' என்னடே, சாயந்திரம் நல்ல தூக்கம் போலுக்கு" என்று கேலி பேசினால், சிரிப்புதான் அதற்கு பதில்..

மூக்கனின் மனைவி மணிமேகலை தலை பிரசவதுக்கு அவளது ஊரான தென்காசி அருகேயுள்ள புலியூருக்குப் போனபோது மருத்துவமனையில் இறந்துபோனாள். மொத்த ஊரும் கூடி புலியூரில் கதறி அழுத போது, மூக்கன் மட்டும் அவ்வளவாக அழாமல் இருந்தான். எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகுதான் அவனுக்கு வெறுமை புரிந்தது. அழுதான். அழுதுகொண்டே இருந்தான். பதினாறாவது நாள் கழித்து அவனுக்கு இன்னும் அழுகை அதிகமாகியது. மூன்று நாட்கள் அவன் வீட்டை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. 

'
ஏந்தாயி உம் மவன் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்காம்' என்று கேட்கிற பக்கத்து வீட்டுக்காரிகளுக்கு அவளது அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

'
இன்னொரு கல்யாணத்தை முடிச்சு வையி. வேறென்ன செய்ய முடியும். எல்லாம் நம்ம கையிலயா இருக்கு?' என்று சொந்தக்காரிகள் சொல்லிப்போன பின், அதை மூக்கனிடம் அம்மா விவரிக்க, இருவருக்குமான பேச்சுவார்த்தை முறிந்தது அன்றிலிருந்துதான்.

பிறகுதான் குடிக்கத் தொடங்கினான். முதலில் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தவன் , உள்ளூர் கூட்டாளிகள் புண்ணியத்தில் அதை தொடரலானான். குடி அவனை ஆசுவாசப்படுத்தியிருக்க வேண்டும். தினமும் அந்த போதையில் அவன் எதையோ தேடிக்கொண்டிருக்கலாம். அல்லது பேசிக்கொண்டிருந்திருக்கலாம். ஏன், மறைந்து போன அவன் மனைவியிடம் கூட பேசியிருந்திருக்கலாம். 

தூரத்தில் பஸ் வரும் சத்தம் கேட்டது. பாபநாச ரூட்டில் திரும்பி நின்றதும் இடுப்பு வேட்டியை ஒருகையால் பிடித்துக்கொண்டே முன்பக்க வாசலில் ஏறினான் மூக்கன். விசில் சத்தம் கேட்டு பஸ் புறப்பட்டதும் எதிர்கடையில் இருக்கிற சுப்பையாவும் அரைபல்லுவும் போட்டிப் போட்டு பந்தயம் கட்டிக்கொண்டிருந்தனர்.

'
இங்கரு, வீட்டுல போயி தலைய காட்டிட்டு, இதே பஸ் திரும்பிவரும்போது, இங்க இறங்குதானா, இல்லையான்னு மட்டும் நீ பாரு'- இது சுப்பையா.

'
ம்ஹும். போனதும், அங்க உள்ள சாராயக்கடைல ரெண்டு கிளாசை போட்டுட்டு, வீட்டுக்குப் பின்னால விழுந்துகெடந்துட்டு ராத்திரிக்குதான் வருவாம்'- இது அரைப்பல்லு.

குடிக்கிறவர்களை குழந்தையாகவே பார்க்க வேண்டும் என்பான் நண்பன். பல்வேறு பிரச்னை காரணமாக குடிக்க வருபவர்கள், தனது பிரச்னையை யாரிடமாவது கதறி கொட்ட, போதையை பயன்படுத்துகிறார்கள். மனதுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிற ஏதாவது ஒரு பிரச்னை போதையில் கரைந்துவிடுவதாக உணர்கிறார்கள். சென்னையில் டாஸ்மாக் ஒன்றில் குடித்துக் கொண்டிருந்த போது, 'எக்ஸ்கியூஸ் மி, கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?' என்ற பக்கத்து இருக்கை மனிதரை பார்த்ததும், சிரித்தார். ஏதோ ஒரு ஐடி கம்பெனியின் டேக் கழுத்தில். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேசி பேசி, எதிர் இருக்கைக்கு வந்தார். 'உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா சார்..?' என்றவரிடம், 'ஒரு லவ் ஓடிக்கிட்டிருக்கு' என்றான் நண்பன். 'லவ் பண்ணுங்க... ஆனா, கல்யாணம் பண்ணாதீங்க...உங்களை மாதிரிதான் நான்..' -கதை தொடர்ந்தது. பேசி, அழுது, கண்ணீர் விட்டு, சோகமாகி, மகிழ்ந்து, சிரித்து, 'டைம் ஆயிடுச்சு, இன்னொரு நாள் பேசுவோம்... இதுதான் என் கார்டு... எப்ப வேணாலும் பேசுங்க' என்று கிளம்பியவரை அதற்குப் பிறகு பார்க்கவில்லை. வேறு ஏதோ பாரில், யாருடனோ இதே கதையை அவர் சொல்லியிருக்கக் கூடும்.

அவர்களின் உரையாடலை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தபோதுதான், இப்போது நீங்கள் வாசிக்கிற மூக்காண்டி ஞாபகத்துக்கு வந்தான். இங்கு எல்லாமே போதைதான். ஒவ்வொரு போதைக்கும் ஒவ்வொரு பெயர். 
மூக்கனுக்கு சாராயம். உங்களுக்கு வாசிப்பு. எனக்கு எழுத்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக