ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

காணி நெலம் - வீடு சுரேஸ்குமார்




ராமசாமி வரப்பு வழியாக நடந்தார், செருப்பு இல்லாத கால்களில் மூன்று நாள் முன் பெய்த மழையில் துளிர்த்து இருந்த அருகம்புல் குளிர்ச்சியாய் வருடியது,அந்த குளிர்ச்சியை ரசிக்கும் மனோபாவத்தில் இல்லை அவரின் மனது, ஓரத்தில் இருந்த தன் பாட்டனின் சமாதியில் வந்து உக்கார்ந்தார், மாடத்தில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது, தோட்டம் ஒரு நாலு ஏக்கர் இருக்கும், பரம்பரையாக கட்டிக்காத்த பூமி. ராமசாமியின் தகப்பனார் தன் தந்தையின் ஆசைப்படியே அவர் வாழ்ந்த பூமியில் தன்னை புதைக்க வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றியிருந்தார்...ஒரு கோவில் மாதிரி அதைக் கட்டியிருந்தார், யாராவது ஒருவர் மாடத்தில் தினம் விளக்கு வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள், பறந்து விரிந்த தோட்டத்தில் வெயிலில் வருபவர்களும், பண்ணையாட்களும் இளைப்பாறுவது அந்த சமாதி திண்டில்தான்.
சமாதியை சுற்றி மாமரம், கொய்யா மரம், செம்பருத்தி செடி, சிறு நெல்லிக்காய் மரம், என பல மரங்களும் ஒட்டியபடி கிணறும் இருப்பதால் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். கிராம மக்கள் வீட்டுக்குள் எப்பொழுதும் முடங்கிக் கிடக்க விரும்புவதில்லை, வயல் வேலையில்லாத தருணங்களில் ஆலமரத்தடி,அரசமரத்தடி, துண்டை போட்டு தூங்குவார்கள், ஒரு சிலர் கட்டம் போட்டு ஆடு, புலி ஆடுவார்கள், எதாவது வெட்டியாகப் பேசிக்கொண்டிருப்பார்கள், கடுமையாக எந்த அளவுக்கு உழைக்கின்றார்களோ அதே மாதிரி சுகவாசிகளாக இருப்பார்கள், அமைதியான அந்த இடம் அந்த கிராம மக்களின் ஓய்வு கழிக்கும் இடமாக இருந்தது, மாலை நேரங்களில் வயது வந்த இளைஞர்கள் தன் கூட்டாளிகளுடன் சிரித்து பேசிக் கொண்டிருப்பார்கள் பெரும்பாலும் பெண்கள் விசயமாக இருக்கும் அந்த திண்டில்தான் இராமசாமி அமர்ந்தார். நடந்து வந்த களைப்பு தந்த வியர்வை முகத்தில் ஆங்காங்கே பூத்திருந்தது.

தோளில் போட்டிருந்த துண்டால் முகத்தில் இருந்த வியர்வையை துடைத்தார் ராமசாமி, பொட்டென்று மடியில் ஒரு சிறுநெல்லிக்காய் மரத்தில் இருந்து விழுந்தது, மரத்தின் தண்டுகளில் பாசி போல் ஏராளமான நெல்லிக்காய் ஏராளமாகக் காய்த்திருந்தது, இந்த ஊர்லயே இவங்க தோட்டத்து கிணறு தண்ணீர் கல்கண்டு மாதிரி இனிக்கும், அந்த தண்ணியில வளருகின்ற மா, கொய்யா, நெல்லி எல்லாமே நல்ல இனிப்புதான், ”கிணற்று ஊத்தம் மேற்கு தொடர்ச்சி மலையில தொடங்குகிறது அதனாலதான் என சொல்லுவாங்க, மோட்டார் போட்டா தண்ணிய இறைச்சு குடிச்சா அவ்வளவு இனிப்பா இருக்கும், வரப்பு ஓரத்தில இருக்கின்ற தென்னமரத்தில இளனி, தேங்காய் அதைவிட ருசி.

மடியில் விழுந்த நெல்லிக்காயை எடுத்துப் பார்த்தார், இளம் பச்சையும், மஞ்சளும் கலந்து இருந்தது, பழுக்க தொடங்கியுள்ளது என்று அர்த்தம், நாக்கில் எச்சில் ஊற வாயில் போட்டுக் கொண்டார். இனிப்பும் புளிப்புமான ஒரு சுவை நாக்கை வருட கண்ணை மூடி அந் சுவையை அனுபவித்தார், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு வனதேவதையின் கோவிலுக்கு வருடத்திக்கு ஒரு முறை ஊர்மக்கள் வசுவன்(மண்ணால் செய்யப்பட்ட குதிரை),பாத்திரம், பண்டம், எல்லாம் தூக்கிக்கொண்டு, மத்தாளம் அடித்துக்கொண்டு காட்டுவழியாக சென்று ஆடு, கோழி வெட்டி பொங்க வச்சு அங்கியே எல்லாத்தையும் சாப்புட்டுட்டு வருவாங்க, ராமசாமி சின்ன வயசுல அப்படிப் போன சமயத்துல காட்டுக்குள்ள நல்லா வளந்து நின்ன சிறுநெல்லிக்கா மரத்தின் கீழே இருந்துவிழுந்த விதையில் முளைத்த ஒரு நாத்த புடிங்கி கையில வைச்சிக்கிட்டாரு பெரிசுக எல்லாம் அட முட்டாப்பயனே காட்டுநெல்லி கசக்குன்டா தூரத்தால எறிஎன்றார்கள் ஆனாலும் கொண்டு வந்து நட்டினார்... இந்த மண்ணின் மகிமையா... இல்ல தேன் மாதிரியான தண்ணீரின் மகிமையான்னு தெரியலை! கல்கண்டுமாதிரி இனிப்பும், புளிப்பும் கலந்த கலவையா இருந்தது.

ராமசாமிக்கு கல்யாணம் பண்ணியது நல்ல பெரும்போக்கான குடும்பம் ஒரே பொண்ணு நாச்சாயாள். இரண்டு பேருக்கும் இடையில சண்டை, சச்சரவு இல்லாத அருமையான வாழ்க்கை…. அவங்க சந்தோசத்துக்கு சாட்சியா இரண்டு பெண் புள்ளைக பிறந்தது, வயசுக்கு வந்து கல்யாணம் செய்யற நிலையில இருக்கிறப்ப மூத்த பொண்ணு திடீர்ன்னு தலையவலிக்குதுங்கப்பா என கதற மாட்டுவண்டி கட்டி பெரியாஸ்பத்திரி போறதுக்குள்ள தல தொங்கி உசிர விட்டிருச்சு, வயலுக்கு அப்பனுக்கு சோறு கொண்டு போகயில பேய் அடிச்சிருச்சுன்னு பெரிசுக உச்சு கொட்டிச் சொல்ல படிச்சவங்க மூளைக்காய்ச்சல் அப்படின்னு சொன்னாங்க,இருக்கிற ஒரே பொண்ணை நல்லா பாசமா வளர்த்து படிக்க வைச்சு டவுன்ல கட்டிக்கொடுத்துட்டாரு மருமகனும் நல்ல தங்கமான பையன் டவுன்ல கடை வியாபாரம்ன்னு நல்ல வசதியா இருக்காங்க, அவங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க நாச்சாயா சந்தோஷமா போனவங்க மிதமிஞ்சிய மகிழ்ச்சியில தூங்கினவங்க காலையில பிணமாத்தான் இருந்தாங்க... ஒத்தை மனுசனா போன ராமசாமிய தோட்டத்தை வித்திட்டு டவுன்ல வந்து இருக்கச் சொல்ல ராமசாமியும் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கிறார் ஆனால் தோட்டத்தை வித்துட்டு போக மனசில்ல... கட்டிக்காத்து வெள்ளாமை பண்ணிய பூமிய கொடுக்க எந்த விவசாயிக்கும் மனசு வராது ஆனா இருக்கும் சூழ்நிலை அந்த நிலையை நோக்கி நகர்த்துகின்றது ஒவ்வொரு விவசாயும் சதுரங்க ஆட்டத்தில் படையினை இழந்து நகரும் ராஜா போலத்தான்.. தென்னைமரத்தில் ஏறி மட்டையை வெட்ட ஆள் கிடைப்பதில்லை, விவசாய வேலை செய்ய ஆள் இல்லை சொகுசான நூறு நாள் வேலைத்திட்டம், கிராமங்களை சுற்றி உருவாகும் பஞ்சு மில்கள், கூட்டம் கூட்டமாக வரும் பனியன் கம்பனிகளின் பேருந்துகள், இதற்கு என்று ஆள் பிடிக்கும் தரகர்கள்.

காலையில் ஆறு மணிக்கு வந்து ஐந்து மணியோடு முடியும் விவசாய வேலையில் வெயிலில் வாட விரும்பாத பல மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயருகிறார்கள், ஆள் கிடைக்காதாலும் மழை பொய்ப்பதும், அதிகம் பெய்வதும் விவசாயின் குரல்வளை நசுக்கப்படுகின்றது, “ச்சீ கருமம்டா சாமீ! என இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட்காரங்களிடமும், தொழில் நிறுவனங்களிலும் விற்று விட்டு சென்று விடுகிறார்கள், ராமசாமிக்கு அந்த மாதிரி தன் நிலத்தை விற்க விருப்பமில்லை தன் நிலத்தை விவசாயம் செய்ய விருப்பமுள்ள ஒருவரிடம் விற்கவே ஆசைப்பட்டார், தரகர் மொட்டையப்பனிடம் விவரமா கூறிவிட்டு வந்துதான் இளைப்பாற அமர்ந்திருக்கின்றார். இங்க பாருப்பா மொட்டையப்பா...! நல்ல வெள்ளாமை பண்ணுறவங்களுக்குத்தான் நான் தோட்டத்தைக் கொடுப்பேன்!அப்படி நல்ல ஆளா இருந்தா சொல்லு என்றார்..! மொட்டையப்பனும் சரி சொல்றேன் என்றார்.

மெல்ல எழுந்து நடந்து வீட்டை நோக்கி நடந்தார்...தோட்டத்தினை அடுத்து சிறு ஓடை ஒன்று இருக்கின்றது அதைக்கடந்து மண் படிகளில் ஏறி தெருவில் நடந்தார் தெருவே வெறிச்சோடிக்கிடந்தது மனதில் குழப்பம், இயலாமை எல்லாம் சேர உடம்பு சோர்வாக இருந்தது, தளர்வுடன் நடந்து வீட்டையடைந்தார், கதவை திறந்து சட்டையை கழற்றி வைத்து விட்டு துண்டை விரித்து ஆசாரத்தில் அப்படியே படுத்தார்.

அப்படியே தூங்கிக்கொண்டிருந்தவர் எவ்வளவு நேரம் தூங்கினார் என்று தெரியவில்லை...கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து மெதுவாக நடந்து கதவை திறந்தார், யாரோ ஒருவன் கறுப்பாக நின்று கொண்டிருந்தான், யாருப்பா நீ? என்ன வேனும்? என்றார். அய்யா! சாமீ நான் காடப்பட்டி மாதரிங்க உங்க மச்சான் கனகு கவண்ட்ரு காலமாயிட்டாருங்க...சாமீ சேதி சொல்ல வந்தம்முங்க..! என்றான், மொபைல் போன் இருந்தும் இந்த தூதுவர்கள் இன்னும் கிராமத்தில் இருக்கின்றார்கள், இவர்களுக்கு கூலிக்கோ, பணத்திற்கோ போவது கிடையாது அந்த ஊர்ல பெரிய காரியம் ஆனா ஒவ்வொரு ஊராப் போய் செய்தி சொல்லுவாங்க...அவங்க கொடுக்கிற காச வாங்கி்க்குவாங்க, அதுல கிடைக்கிற காசுல சாயங்காலம் சாராயமமோ, பிராந்தியோ காசுக்கு தக்க சாப்பிடுவாங்க, ”சரிப்பா நான் பின்னாடியே வருகிறேன் என்று டவுசரில் இருந்த பணப்பையை எடுத்து பிரித்து ஒரு பத்து ரூபாய் கொடுத்தார், பணப்பை அடுக்கில் இருந்த நல்ல கொளுந்து வெற்றிலையை பார்த்தவன் நாக்கில் எச்சில் ஊற வாய்க்கு ரண்டு வெத்தலை கொடுங்க....! சாமீங் என்றான்.  இரண்டு வெற்றிலையும், வெட்டுப்பாக்கு இரண்டு துண்டும் கொடுத்தார், துண்டு புகையிலையில் கொஞ்சம் பிய்த்து தர... வாயில் போட்டுக்கொண்டு கும்புடு போட்டு விட்டு போய் விட்டான்...கனகுவைப்பற்றி யோசித்தார் எம்பட வயசுதான் ஆவுது இரண்டு வருசத்துக்கு முன்னாடி தாங்கமுடியாத வயத்து வலிக்குதுன்னு, ஈரோட்டு ஆஸ்பத்திரியில பார்த்தப்ப புற்றுநோய்ன்னு சொல்லிட்டாங்க, எந்த கெட்டபழக்கமும் கிடையாது! நல்ல மனுசன், நல்ல உழைப்பாளி! பத்து பேரை தூக்கி வீசுர பலம்,கொஞ்சம்...கொஞ்சமா...மருத்துவத்திற்காக நிலம், இருப்பு பணம், சேமிப்பு எல்லாம் கரைந்து இன்று ஆளும் போயிட்டாரே! இனி அந்த குடும்பம் என்ன பண்ண போகுதோ?” வாய் விட்டே புலம்பி விட்டார்.

மறுபடியும் சட்டையை மாட்டிக்கிட்டு தோல் செருப்பை மாட்டிக்கிட்டு கிளம்பினார், பெரும்பாலும் செருப்பு போடுவதில்லை ராமசாமி! ஆனால் இப்ப போகிற இடம் கரடு முரடான சரியான சாலை கிடையாத ஊர், பன்னண்டு மணி பஸ்ஸைப் புடிச்சா...ஒரு வெத்தலைய மெல்ற நேரத்தில கொண்டு போய் உட்டுடுவான் அங்கிருந்து நடந்து போனா ஒரு மைலு தூரந்தா! மெதுவாக வீதியில் இறங்கி பஸ் நிற்கும் பிள்ளையார் கோவிலை நோக்கி நடந்து போனார். 

அங்க நல்ல வெள்ளையும்...சொள்ளையுமா... குடை புடிச்சுகிட்டு கருப்புசாமி நின்னிட்டுருந்தான் ஊருக்குள்ள பணம் பவுசு உள்ள ஆளு. என்ன ராமசாமி? கனகு பெரிய காரியத்துக்கா..?” என்றான், “ஆமாங்க...என்றார் இராமசாமி. நல்ல மனுசன்.....எல்லாம் ஒன்னாமன்னா பழகிட்டோம்! அப்புறம் நான் கேள்விப் பட்டேன் தோட்டத்தை குடுத்துட்டு டவுன்ல மருமகனோட இருக்கப் போறதா உண்மையா!?” என்றான் கருப்புசாமி பீடிகையுடன், ”எச்சிலை விழுங்கினார் ராமசாமி! தலையை மட்டும் ஆட்டினார் சுரத்தேயில்லாமல்... நானே உங்கிட்ட வந்து பேசலாம்மின்னு இருந்தேன்... நம்ம கூட்டாளிக்கு பேசி முடிக்கலாம்மின்னு நாலு ஏக்கர் தோட்டம், கிணறு நல்ல தங்கமான பூமி, பத்து லட்சத்துக்கு குறையில்லாம போவும், என்ன முடிச்சிடலாமா? இந்த வாரத்துக்குள்ள தோட்டத்தை பாக்க வரச்சொல்லட்டுமா..?” என்றான்! பதில் சொல்லாமல் சிந்தனையில் இருந்த ராமசாமி...என்ன பதிலைக் காணம் என்ன ராமசாமி என்ன சொல்லுமய்யா.. என்றான்குரலை உயர்த்தி...! ராமசாமி பதில் சொல்ல வாயெடுத்த பொழுதில் டவுன் பஸ் புழுதியை வாரியிறைத்தபடி வந்து நின்றது இருவரும் ஏறி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

பேருந்து கிளம்பியதும் அருகில் அமர்ந்த கருப்புசாமி! ராமசாமியின் பதிலுக்காக அவர் முகத்தைப் நோக்கினார், தொண்டையை கனைத்து குரலைச் சரி செய்த ராமசாமி வெள்ளாமை பண்றதா இருந்தா மட்டும் கொடுப்பேன் வேற விவகாரம்ன்னா வேண்டாமுங்க என்றார்!

அட...அவரு நம்மூர்ல தோட்டம் வேணும்ன்னு ரொம்ம நாளாக் கேட்டுக்கிட்டு இருக்காங்க வெள்ளாமைக்குத்தான் பெரிய பணக்காரங்க உனக்கு கூட தெரியும்ன்னு நெனைக்கிறேன் ஈரோட்டுகார சத்தியமூர்த்தி என்றார்!

பிராந்தி கடை சத்தியமூர்த்தியா..?” என்றார்..!

அட ஆமா அவரேதான்...! எம்பட பங்காளிதானே அவரு கோயலுக்கு வந்தப்ப பாக்கச் சொன்னாப்ல……..

சரி நான் யோசனை பண்ணிச் சொல்றேன் என்றார்.

சத்தியமூர்த்தியைப் பற்றி ஊருக்கே தெரியும் பரம்பரையே சாராயக்கடை கள்ளுக்கடையின்னு நடத்தினவங்க...!தனியார் கடையிருக்கையில பல கடை நடத்தி பணம் சம்பாதிச்சு பெரிய ஆளா ஆயிட்டாரு….. இன்னிக்கு கவர்மெண்ட் கடைய எடுக்கவும் வேறவேற தொழில்ல இறங்கிட்டாங்க...முறையா சில வியாபாரம்,முறையில்லாம பல வியாபாரம்ன்னு தில்லுமுல்லான ஆளு...! ஏனோ அந்த மாதிரி ஆளுக்கு நிலத்தைக் கொடுக்க விருப்பமில்லை...! இராமசாமிக்கு. கிராமத்து மக்களுக்கு இருக்கும் ஒரு பழக்கம் நிலம், வீடு, வாகனம் போன்றவற்றை தனக்கு பிடித்தவர்களிடமே விற்பனை செய்வார்கள், நகரம் போல யார் வந்து கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள், அதுவும் இராமசாமியின் ஊரில் ஜாதிக் கட்டுப்பாடும் உண்டு வேறு ஜாதியினருக்கு கொடுக்கக்கூடாது என்று, அந்த கட்டுபாட்டை இதுவரை யாரும் மீறியதும் கிடையாது.

இறங்கும் இடம் வந்தவுடன் இருவரும் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்... கருப்புசாமி விடாமல் நிலத்தை பிராந்திக்கடைக்காரனுக்கு முடிப்பதிலே குறியாக இருந்தார், பலவாறு சொல்லியபடி வந்தார், மேல வேனும்ன்னாலும் வாங்கிக்கலாம் என மனதை கரைக்கப் பார்த்தார் ஆனால் ராமசாமி வெடுக்கென்று அடுத்தவர் மனம் நோகும்படி பேசி பழக்கமில்லாதவர் என்பதால் நான் நல்லா யோசனை பண்ணி மருமகன்,மகளிடம் கேட்டு பதில் சொல்லுவதாய் அவரின் நிலம் பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இருவரும் கனகு வீட்டையடைந்தனர் நெருங்க...நெருங்கவே கொட்டுச் சத்தமும் அழுகுரலும் கலவையாகக் கேட்டது. கனகுவின் மகன் வெளியே சோகமாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு கை கொடுத்து விட்டு போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள். சிறிது நேரம் கழிந்த பிறகு ஒரு பெரும் கூச்சலும் சலசலப்பும் ஏற்ப்பட்டது.....

பெறுங் கூச்சலுடன் ஒரு கூட்டம் வந்தது, புரியாமல் அனைவரும் நிற்க கறுப்பாக முரட்டு மீசையுடன் வந்தவன் ஒருவன் கூட்டத்தினை தலைமை ஏற்று வந்தவன் தனபாலன்! வட்டிக்கு பணம் கொடுத்து பல விவசாய நிலங்களை வளைத்து போட்டவன்! மிக மோசமான ஆளு! கனகு மகன் சின்னராசுவின் முன் வந்து நின்றான்....மணலை அரைத்த மாதிரி கரகரப்பான குரலில் ஏண்டா...? உன் அப்பன் வாங்குன பணத்துக்கு ஒடக்கா மொட்டுடாத காட்டை என் தலையில கட்டிக்கிட்டு! இப்ப காட்டுல உங்கப்பன பொதைக்கப்போறேன்னு ஊருக்குள்ள சொல்லிகிட்டு திரியிறியாம கேணக்கூதி! பொணத்தைப் பொதைக்க சுடுகாடு இருக்குல்லோ….. வக்கில்லையின்னா அனாதை பொணம் அப்படின்னு சொல்லு பஞ்சாயத்துகாரன் பொதைச்சுக்குவான் தாயோலி! பிச்சக்காரன் பொணத்தை பொதைச்சா எவன் வாங்குவான் எம்பட காட்டை...என்று வார்த்தைகளில் நெருப்பை அள்ளி வீசினான்!

சின்ராசுக்கு கோபம் தலைக்கு ஏற...! கண்கள் சிவக்க! அவன் சட்டைய கொத்தாக பிடித்தான்...எடேய்....ஒங்மொம்மலோக்கா நயச்சியமா பேசி வட்டி மேல வட்டி போட்டு உதவற மாதிரி நடிச்சு எங்க பூமிய புடிங்கனதும் இல்லாம...எங்கப்பனை பிச்சக்காரன்னு சொல்றியா...?” எனப் பாய இருவரும் கட்டி உருண்டனர். அனைவரும் கூடி இருவரையும் பிரித்து அமர வைத்தனர். 

இராமசாமி ஏன்டா..! தனபாலா....கனகு கட்டிக்காத்த பூமியிடா...! அதுல பொதைக்கறதுல என்ன தப்பு இப்ப உனக்கு சொந்தமா ஆனாலும்.... அவனோட ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான காடு! வெறும் கரடா கிடந்தத ஒத்தை ஆளா கல்லு சுமந்து, மண் சுமந்துஇந்த மாதிரி உருவாக்கியது அவன் பொணத்தை ஒரு ஓரமா பொதைக்க கூட வக்கில்லையோ…?” என காட்டமாக கேட்டார்....


ஏன்.....உன்ற தோட்டத்துல உங்க பாட்டனை பொதைச்ச இடத்துல கொண்டு போய் பொதைக்கிறது....?” என்று ஏறுக்குமாறாக கேட்க ராமசாமி ஏதோ சொல்ல வாயெடுக்க.. கருப்புசாமி அவரை அமர்த்திவிட்டு, ”இங்கபாருப்பா தனபாலா மாமன், மச்சனன் ஊர்ல கொண்டு போய் புதைக்க முடியுமா? அது நல்லதுக்கு இல்ல....நீ ஓரமா வேலி ஓரமாக் கூட பொதைச்சுக்கிறோம்கனகு கடைசி ஆசையா சாகும் போது சொல்லிட்டு செத்துபோயிட்டான்டா...உன்கிட்ட நிலத்தை பறி கொடுத்ததை இவனும் கனகுகிட்ட சொல்லலை...!கொஞ்சம் மனசு வைப்பா என்றார்! சாகப்போற மனுசனின் ஆசையப்பா என்றான்!

அதெல்லாம் ஆவாது கருப்பு! அப்படி பொதைச்சா...காடு வெல போவாது, நான் கோர்ட்டுல ஸ்டே வாங்கிட்டேன், போலீஸை கூப்பிட்டு சொல்லிப் புடுவேன் சுட்டு..புடுவாங்க...சுட்டு என மிரட்டினான்!

யார்...யாரோ கூறியும் மசியாத அவன் தன் பரிவாரங்களுடன் சென்று விட்டான்...! சில மணி நேரத்தில் ஒரு வேன் நிறைய போலீஸ் வந்து கத்தை பணத்தையும் சீமை சாராயபுட்டியும் வாங்கிய இன்ஸ்பெக்டர் விரைப்பாக நிற்க...வேறு வழியில்லாமல் ஊர் சுடுகாட்டுக்கு தூக்கிக்கொண்டு போனார்கள்...சின்னராசு மண்ணில் அழுது புரண்டான்! அதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?


பெரிய காரியம் முடிந்து ஒரு வாரங்களுக்கு பிறகு ஒரு மாலை வேளையில் மருமகன் சன்முகம் புல்லட்டில் மனைவி குழந்தையுடன் வந்தான், ராமசாமிக்கு பேத்தியை பார்த்ததும் கண்களில் கண்ணீர் மினுக்கியது. வாரியணைத்துக் கொண்டார்எழுவது வயது கிழவன் தன் பேத்தியிடம் குழந்தை போல் மாறி விளையாடினார், தன் மகளின் வடிவில் பெரும்பாலான ஆண்கள் தன் தாயினை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள், பேத்தியின் வடிவில் இறந்த தன் மனைவியே மறுபிறப்பாக பிறந்ததாக நினைப்பார்கள்.., அவர்களின் சிரிப்பும் சின்ன செயல்களும் அவர்களை ஞாபகப்படுத்தும் போது நினைவுகள் பின்னோக்கிச் சுழற்றும்!

வாரத்துக்கு அல்லது இரண்டு வாரத்திக்கு ஒரு முறை ஞாயிறு இல்லாவிட்டால் இடைநாளில் மகளும், மருமகனும் டவுனில் இருந்து வரும் பொழுதே கறி எடுத்துக் கொண்டு வருவார்கள்...சமைத்து  தாங்களும் உண்டு தோட்டத்தில இருக்கிற கொஞ்சம் காய்கறி, தேங்காய் எடுத்துகிட்டு போவாங்க, "கிழவனுக்கும் கறிச்சோறு தின்னமாதிரியும் ஆச்சு...!" என்று வருவார்கள் இன்றும் அது போலவே வந்தார்கள்மற்ற நாளில் கூழையோ கம்பையோ குடிக்கும் இராமசாமியும் இந்த மாதிரி சமயங்களில் கொஞ்சம் காரமா கறியும் சோறும் உண்டுக்குவாரு!

அரிசியை உலையில் போட்டு கொதித்துக் கொண்டிருக்க...வாங்கி வந்த கறியை ஒரு சட்டியில் வெந்து குழம்பு வாசனையை காற்றில் பரவ விட்டுக்கொண்டிருந்தது... நாசியில் சுவாசித்ததும் வயிறு ஏங்கியது... கறிச்சோறுக்காக...சிறிது நேரத்தில் தயாராக வீட்டின் கிணற்றடியில் இருந்து மூணு தலவாழை இலையை அறுத்து வந்தார் இராமசாமி பகுமாணமாக தண்ணீர் விட்டு துடைத்து விட.. சுடுசோறு வைக்க இலை வாசத்துடன் கறி மணந்தது...மருமகனும்,ராமசாமியும் உண்டார்கள்…. அவர்கள் உண்டபின் பேத்திக்கு ஊட்டிவிட்டு மகளும் உண்டுட்டு எல்லாம் கழுவி மீதி குழம்பை ராத்திரிக்கு சாப்பிட்டுக்கங்கப்பாஎன ஒரு சட்டியில் ஊற்றி வைத்தாள்.

உண்ட களைப்பு தீர கயிற்று கட்டிலில் ராமசாமி உக்கார்ந்து கொள்ள எதிரே ஒரு நாற்காலிய போட்டு மருமகன் சன்முகம் உக்கார்ந்தான். நல்ல அந்தியூர் வெத்தலையை மருமகனுக்கு இரண்டு பாக்கோடு கொடுத்தார்தானும் வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார், வெத்தலையை மென்று கொண்டே மருமகன் பேசஆரம்பித்தான்…. தோனுங் தோட்டத்தை சத்தீமூத்தி கேட்கறாராம் நீங்க பதில் ஏதும் சொல்லலையா...? போன வாரம் கருப்பனை சந்தையில பார்த்தேன் சொன்னான்.... என்றான்.

இராமசாமி மெல்ல எழுந்து வெத்தலையை வெளியே துப்பிவிட்டு சொம்பு தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து விட்டு வந்தார்...எனக்கு அவுனுக்கு தோட்டத்தை குடுக்க விருப்பமில்லைங் மாப்ள....என்றார்!

நீங்க என்னங்...! சொளையா பத்து லச்சத்துக்கு மேல முடிச்சு தர்றங்கறான்...! இந்த ஊர்க்காரன் ஆருங் இந்த விலைக்கு முடிப்பானுக...!எல்லாம் வானம் பார்த்த பூமிய வெச்சிக்கிட்டு இருக்காங்க...! கொடுத்துடலாங்க நான் அடுத்த வாரம் அவங்களை வரச் சொல்லிட்டேனுங் நீங்க இங்க ஒத்தையீல்ல இருந்து என்ன பண்ணப் போறீங்க...?” அவனுக்கு நிலத்தை விற்க ஆவலுடன் கொஞ்சம் வேகமாகவே பேசி விடவே....!ராமசாமிக்கு மலை உச்சியில் ஒரு கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவன் அது உடைந்தால் எப்படி பதறுவானோ அந்த நிலையை அடைந்தார்.

பணம் பெரிசுன்னு வித்துட்டாங்க நாளைக்கு அவன் அதை வாங்கி சாராய குடோன் போடுவானுங்க! கூறு போட்டு விப்பானுங்க...அதை பாக்கற சத்தி வன்னார ஆத்தா மேல சத்தீம்மா எனக்கு இல்லைங்க மாப்ள..... இந்த ஊருக்கு பொழைக்க எங்க அப்பன், ஆத்தா என்னை கூட்டிக்கிட்டு வர்றப்ப எனக்கு பத்து வயசுங்க...! குத்தகைக்கு ஒரு காட்ட ஓட்டிக்கிட்டு கொஞ்சம்...கொஞ்சமா...காசு சேத்தி எங்க அப்பனோட அப்பாரு கொடுத்த கொஞ்ச காசுலயும் இந்த புளுதியும்,சரளைக்கல்லுமா கிடந்த காட்டை  நாங்க மூனு பேரும் கல் சுமந்து, மண் சுமந்து, கிணறு வெட்டி தோட்டமா மாற்றி ஊரே மெச்சுபடி வாழ்ந்த பூமியய்யா அது எங்க அப்பாருவை அங்கதான் பொதைச்சிருக்கோம்! அந்த மண்ணுக்கு எங்க வியர்வைய உரமா போட்டு  வளர்த்த பூமியய்யா....பூமி....போன வாரம் செத்து போன கனகுகவுண்டன் பொனத்தை அவன் நிலத்தில பொதைக்க கூட முடியலை...எல்லாருக்கும் தெய்வம் சும்மா கும்புடறதுக்கு மட்டும்தான்..! ஆனா விவசாயிக்கு மட்டும் உழைக்கிறதுக்கு...! நெலம்தான் தெய்வம்! நெலம் கொடுக்கிற எந்த பொருளையும் யாரும் உருவாக்கிற முடியாதுங்க காய்கறி, தண்ணீ, தங்கம், வெள்ளி,எதை உங்களால சொயமா தயார் பண்ண முடியும் மாப்ள...! என் பொணமும் அந்த மண்ணுலதான் மாப்ள பொதைக்கனும்...! இல்லையினா என் கட்டை வேகாது.. வேகாது சாமீ........!என பேசிய ராமசாமி குலுங்கி... குலுங்கி....அழுதார்....எதற்கும் கலங்காத தன் அப்பன் அழுவதை வியப்பாக பார்த்தாள் மகள். எதுவும் பேசமுடியாமல், ஆறுதலும் சொல்லமுடியாமல் அவரின் ஆதங்கத்தின் கங்குகள் சுட்ட காரணத்தினால் வெளியே எங்கயோ பார்த்தபடி நீண்ட நேரம் விக்கித்து உக்காந்திருந்தான் சன்முகம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக