புதன், 28 ஆகஸ்ட், 2013

என்.விநாயக முருகன் கவிதைகள்


கண்ணீர் அஞ்சலி

நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை மின்சார
கம்பத்தில் அவரை பார்த்தேன்

கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்கு கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுக்கொண்டிருந்தன

கண்களுக்கு கீழே
சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
புகைப்படத்திற்கு கீழே
வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
எ‌ன்று அச்சாகி இருந்தது.

இரண்டாவது நாள்
குடும்பத்தினரை காணவில்லை.
நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர்

மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கி கொண்டிருந்தது.

நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்
யாரோ ஒருத்தன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்

இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன
இரண்டு கண்கள்
யாருடையதென்று தெரியவில்லை

ஒருநாள்
அதுவும் மறைந்து விட்டது



விசாரித்தல்

எங்கு பார்த்தாலும்
அன்புடன் விசாரிப்பார்
எனது நண்பர்

சினிமா தியேட்டரில் விசாரிப்பார்
என்ன படம் பார்க்க வந்தீங்களா?
மருத்துவமனையில் விசாரிப்பார்
என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா?
துணிக்கடையில் விசாரிப்பார்
என்ன துணி எடுக்க வந்தீங்களா?
கோயிலில் விசாரிப்பார்
என்ன சாமி கும்பிட வந்தீங்களா?

ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம்.
ஒருநாள் இறந்தும்விட்டார்

ஒருநாள் போயிருந்தேன்
என்ன சமாதியாக வந்தீங்களா?
என்ன சொல்வதென்று தெரியவில்லை.
()()

விவாகரத்து
வழக்கொன்றிற்காக
சாட்சி சொல்ல
நீதிமன்ற வளாகத்தின்
வேப்பமரத்தடியில்
காத்திருந்தபோது பார்த்தது.
ஜில்லென்ற தூறல் காற்றில்
நனைந்த சிறகுகளை
ஒ‌ன்றுக்கொன்று ஆறுதலாய்
கோதிக்கொண்டிருந்தன
தவிட்டு குருவிகள் இரண்டு.
()()()
இன்று முத‌ல்

வழிதப்பிய குறுஞ்செய்தியொன்று
ஒலித்தது.
வேணுகோபால் இறந்துவிட்டான்
உடனே கிளம்பி வா.

உண்மையில் வேணுகோபால்
என்று எனக்கு யாரும் இல்லை.
இன்று முத‌ல்
அந்தக் கவலையும் தீர்ந்தது.


முத‌ல் நிலவு

இறுக மூடிக்கிடக்கும்
அந்தக் குழந்தையின்
கைகளை யாரோ
விடுவிக்கிறார்கள்.

அந்தக் குழந்தை
தன்னோடு கொண்டு வந்த
நட்சத்திரங்கள், நிலவுகள்
உ…ரு…ண்…டோடுகின்றன.

கனவில்
கடவுள் கோபிக்கிறார்.
குழந்தை சிரிக்கிறது.

இரண்டாம் முறையும்
நட்சத்திரங்கள், நிலவுகளை
தருகிறார்.
அது ஒருபோதும்
முதல் நிலவு
முதல் நட்சத்திரங்கள்
போல் இருந்ததில்லை.


யாரும் சொல்லாத கவிதை
இதுவரை யாரும் சொல்லாத
கவிதையை
எடுத்துக்கொண்டு
திரும்பினேன்.

அ‌ங்கே
நீ இல்லை.
நான் இல்லை.
யாரும் இல்லை.
எதுவும் இல்லை.
எதுவுமற்ற அதுவும் இல்லை.

நீட்சி

முன்பொருநாள்
எவனோ ஒருவன்
தன் சதைகளை அரிந்து
கழுகுக்கு போட்டானாம்.
அவனது நீட்சியென்று
அடுக்குமாடி குடியிருப்பின்
என் ஜான்னலூரம்
காத்துக்கிடக்கின்றன
அதே புறாக்கள்.

***********
பாரியின் காலத்திலிருந்து
கிளம்பி வந்த
கொடியென்று
இருசக்கரவாகனம் மீது
படர்ந்தெழுந்திருந்தது.
எடுக்கவா தொடுக்கவா
என்றது
என்னைப் பார்த்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக