திங்கள், 15 ஜூலை, 2013

மொழிகளைக் கடந்தது சினிமா- இயக்குனர் மகேந்திரன் நேர்காணல்- கி.ச.திலீபன்

“நம்ம மக்களுக்கு நாம காட்டறதுதான் சினிமா. நாம இது வரைக்கும் உண்மையான சினிமான்னா என்னன்னு காட்டவே இல்லை. நானே 8 ஆண்டுகளாத்தான் உலக சினிமாக்களைப் பார்த்துக்கிட்டிருக்கேன். கொரியன், ஈரானிய படங்களைப் பார்த்தப்பதான் உண்மையான சினிமான்னா என்னன்னே தெரிஞ்சுக்கிட்டேன். இந்திய சினிமா மேடை நாடக வடிவில்தான் இன்னமும் இருக்கு. கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகமே வியந்து பாராட்டுற மாதிரியான ஒரு தமிழ் சினிமா வரணும்ங்கிறதுதான் என் கனவு” என்கிறார் இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் திசைகளையே புரட்டிப்போட்டவர். நீண்ட இடைவெளிக்குப் பின் சத்யராஜை வைத்து ஒரு படம் இயக்க உள்ளவருடன் நாம் மேற்கொண்ட நேர்காணல்....

இனமுழக்கம், துக்ளக் பத்திரிக்கைகளில் பணிபுரிந்திருக்கிறீர். ஒரு பத்திரிக்கையாளராய் இன்றைய பத்திரிக்கைகளின் நிலைப்பாடு குறித்து?

அன்னைக்கு பெரும்பாலான பத்திரிக்கைகள் கல்கி போன்ற பெயர் பெற்ற எழுத்தாளர்களின் தொடர்கதைகள், சிறுகதைகளை அதிமுக்கியத்துவத்தோடு வெளியிட்டு வந்தன. இன்றைய பத்திரிக்கைகளில் இலக்கியத்திற்கான இடம் வெறுமனே இருக்குன்னுதான் சொல்லத்தோணுது. அன்னைக்கு இருந்த அளவு இன்னைக்கு இலக்கியவாதிகள் இல்லையா? இல்லை என்ன பிரச்சனைன்னு தெரியலை. எந்தப் பத்திரிக்கையை எடுத்துக்கிட்டாலும் சினிமா நடிகைகளோட படம்தான் இருக்கு. சினிமா பேட்டிகளே பத்திரிக்கைகளை நிறைச்சிருக்கு. அன்னைக்கு சினிமா விமர்சனங்களும், பேட்டிகளும் இருந்தது. ஆனா அதையும் தாண்டி இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதை தப்புன்னும் சொல்லலை. சினிமாவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாதுன்னுதான் சொல்றேன், அதுக்குத்தான் சினிமாவுக்குன்னே தனியா பத்திரிக்கைகள் இருக்கே. அந்தக்கால ஓவியர்களை ஒப்பிடும்போது இந்தக்கால ஓவியர்களுக்கு சிறுகதைக்கு எந்த உணர்வில் ஓவியம் வரையணும்ங்கிறதே தெரியறதில்லை. நான் இப்போ கல்கி, சாண்டில்யன், புதுமைப்பித்தன் நூல்களைத்தான் மறு வாசிப்பு செஞ்சுக்கிட்டிருக்கேன். அன்றைய பத்திரிக்கைகள் இலக்கியத்தை மக்களிடம் சேர்த்தது போல் இன்றைய பத்திரிக்கைகள் அந்தக் கடமையிலிருந்து விலகிவிட்டதாகத்தான் நான் நினைக்கிறேன்.

கமர்ஷியல் படங்களின் கதை வசன கர்த்தாவாகிய உங்களை கலைப்படங்கள் நோக்கித் திருப்பியது எது?

சினிமாத்துறைக்குள்ள வர்ற ஒவ்வொருத்தரும் சினிமாவை விரும்பி மிகப்பெரிய கனவுகளோடதான் வருவாங்க. ஆனா நான் தமிழ் சினிமாவை வெறுத்தவன். தமிழ் சினிமா உண்மைக்குப் புறம்பா இருக்குங்கிறதை ரெண்டு ஹாலிவுட் படம் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். அழகப்பா பல்கலைக்கழகத்துல எம்.ஜி.ஆர் முன்னாடி தமிழ் சினிமாவின் முரண்பாடுகளைப் பத்தி பேசினேன். என் பேச்சு சிறப்பா இருக்குன்னு அவரே பாராட்டினார். சென்னைக்கு நான் சட்டம் படிக்கத்தான் வந்தேனோ தவிரா சினிமாவுக்காக இல்லை. இனமுழக்கம் பத்திரிக்கையில் சேர்ந்து எம்.ஜி.ஆரின் நெருக்கம் கிடைச்சு பட வாய்ப்புகளும் வந்தது. நானும் ஆரம்பத்தில் கமர்ஷியலா வசனங்கள் எழுதிக்கிட்டிருந்தேன். தமிழ் சினிமா மீதான என்னோட கோபம்தான் முள்ளும் மலரும் படம். பாட்டே இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன் ஆனா இதனால தயாரிப்பாளர் நஷ்டமடைவாங்கங்கிற நிர்பந்தத்தால பாட்டு வெச்சேன் ஆனா டூயட்டை அறவே தூக்கிட்டேன். வழ வழன்னு வசனங்களே இருக்கக்கூடாதுன்னு வசனங்களையும் ரொம்ப சுருக்கினேன். இதனால ப்ரொட்யூசர் என்ன சபிக்கக் கூட செஞ்சார். இளையராஜா ரீரெக்கார்டிங்ல இந்த அளவுக்கு அசத்துவார்னு நான் நினைக்கவே இல்லை. படம் வெளிவந்து வெற்றியும் பெற்றது. ரஜினிக்கு அந்தப்படம் ஒரு திருப்பு முனையாவும் அமைஞ்சது.

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க இயலாத காரணம்?

அது ஏன் முடியாம போச்சுன்னு எம்.ஜி.ஆருக்குத்தான் தெரியும். எம்.ஜி.ஆரிடம் தொடர்பு உண்டாகி அவர் வீட்டுக்குப் போயிருந்த போது பொன்னியின் செல்வன் நாவல் பாகங்களை எடுத்துக்கிட்டு வந்து என் கையில கொடுத்தார். இந்த நாவலை திரைக்கதையா எழுதிக்கொடுங்கன்னு சொன்னார். எனக்கு திரைக்கதைன்னா என்னன்னு பரிச்சயம் கிடையாது. இருந்தாலும் முயற்சிப்போம்னு கொண்டு போய் திரைக்கதை எழுதிக் கொடுத்தேன். சீக்கிரம் எழுதிட்டீங்களேன்னு பாராட்டினார். அதோட சரி அது ஏன் படமாக்க முடியலைங்கிற காரணம் எனக்குத் தெரியாது.

ஏன் நாம் தேவ.அலெக்சாண்டராகவே இருந்திருக்கக் கூடாது என எப்போதாவது நினைத்ததுண்டா?

 எதுக்கு நினைக்கனும், தேவ.அலெக்சாண்டர் ஒரு கிறித்துவப் பெயர். அது ஆங்கிலப் பெயரா இருக்கிறதால எனக்கு அந்நியப்பட்டு நிற்கிற மாதிரியான ஒரு உணர்வு வந்தது. என்னோட பேர் பொதுவான பெயரா இருக்கனும் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிடற மாதிரி இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். மதுரை அழகப்பா கல்லூரி ஹடில்ஸ் ப்ளேயர் மகேந்திரன் எனக்கு பிடிச்சவர். அதனால அவர் பெயரையே வெச்சுக்கிட்டேன். தமிழ் நாட்டில் தமிழ் பேரோட வாழலாம்னு நான் எடுத்த முடிவு சரியானதுதான். நாம என்ன பேர்ல இருக்கோம்ங்கிறது முக்கியமில்லை என்ன செய்றோம்ங்கிறதுதான் முக்கியம்.

தற்கால ரஜினி- கமலை எப்படிப் பார்க்கிறீர்கள்

ரஜினி- கமல் ரெண்டு பேரும் அன்றைக்கு எப்படி கலைக்காக உழைச்சாங்களோ அதே மாதிரி இன்றைக்கும் ஓய்வில்லாம உழைச்சுக்கிட்டிருக்காங்க. ரெண்டு பேருமே ஜெயிச்சுட்டோம்ங்கிறதுக்காக ஓய்வெடுத்துக்கிறது இல்லை.

கமல்ஹாசனை வைத்து படம் எடுக்க நினைத்ததுண்டா?

நான் கதை, வசனம் எழுதிய படத்தில் அவர் நடிச்சிருக்கார். அதன் மூலமா எனக்கும் அவருக்கும் நல்லதொரு நட்பு மலர்ந்தது. அவர் ஒரு படத்தை இயக்க சொன்னார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால இயக்க முடியாம போச்சே தவிர மற்றபடி காரணங்கள் எதுவுமில்லை.

உங்களது படங்களில் மிளிர்கிற எதார்த்தத்தை தற்போதுள்ள எந்த இயக்குநரிடம் பார்க்கிறீர்?

எனக்கு மட்டும்தான் சினிமா தெரியும் எதார்த்தம் தெரியும்னு இல்லை. நம்ம தமிழ் சினிமாவிலும் திறமையான ஃபில்ம் மேக்கர்ஸ் இருக்காங்க. ஆனா அவங்க தொடர்ந்து முயற்சி செய்ய மாட்டேங்குறாங்க. ஒரு படம் வெற்றி பெற்றதும் அடுத்த படம் பெரிய நடிகர்கள் பெரிய பட்ஜெட்னு வணிக ரீதியா போயிடுறாங்க. எதார்த்தத்துலயே அழகு, அழகற்றதுன்னு ரெண்டு பிரிவு இருக்கு. நிறைய பேர் அழகற்ற எதார்த்தத்தைக் காட்டுறாங்க. எனக்கு முன்னாடியே அந்த நாள் போன்ற படங்கள் பாடல்கள் இல்லாம சினிமா பாதையில் மாற்றா எடுக்கப்பட்டிருக்கு. வசனங்கள் மேலோங்கி நின்ற காலங்களில் ரங்கராவ், டி.எஸ். பாலய்யாவின் நடிப்பு எவ்வளவு எதார்த்தமா இருந்தது. தமிழ் சினிமாவில் டூயட் வைக்கிற வரைக்கும் அது எப்படி எடுத்தாலும் எதார்த்தப் படம் ஆகாது. காதலிக்கிறவங்க யாருங்க டூயட் பாடிக்கிட்டிருக்காங்க. நானும் முழு எதார்த்தவாதி கிடையாது நானும் மிகப்பெரிய தப்பு பண்ணியிருக்கேன் என்னோட படங்கள்ல பாட்டு வெச்சிருக்கேன். ஜானி படத்தில் ஸ்ரீ தேவி பாடகி அந்தப் படத்தில் பாட்டு வெச்சது தப்பில்லை. ஆனா மத்த படங்கள்ல பாட்டு வெச்சது என் தப்புதான்.  நானும் குற்றவாளிதான். என்னைக்கு பாட்டு இல்லாம படம் எடுக்கிறனோ அன்னைக்குதான் நான் முழு எதார்த்தவாதி.

சினிமாவுக்கு மொழி உண்டா?

சினிமாவே ஒரு மொழிதான். நாம உலக சினிமாக்களை சப் டைட்டில் இல்லாம கூட பார்த்து நம்மால் புரிஞ்சுக்க முடியும். ஏன்னா சினிமாவுக்கு மொழி ஒரு தடையே இல்லை. ஆனா நம்ம இந்திய சினிமாவை பார்க்கவே தேவையில்லை காதால கேட்டாலே போதும் ஏன்னா இங்க வசனங்களாவே நெறஞ்சிருக்கு. சினிமாவில் இப்படித்தான் திரைக்கதை அமைக்கணும்ங்கிற வரைமுறை, இலக்கணம்னு எதுவுமே கிடையாது. பல விதமான சினிமாக்கள் இருக்கு யாருக்கு எதுல  ஈடுபாடு இருக்கோ அந்த விதமான சினிமாக்களை எடுக்கிறாங்க. அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதை விஷுவலா கொடுக்கிறாங்க அது அவங்க சுதந்திரம்.

சமீப காலத்தில் திரைப்படம் எடுக்கத் தூண்டிய நாவல் எது?

அன்றைய கால நாவல்கள் கொடுத்த தாக்கத்தை போல இன்றைய இலக்கியங்கள் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தலை. சமீப காலத்தில் எந்த நாவலும் என்னை படம் எடுக்கத் தூண்டலை.

சினிமா என்பதற்கான அடிப்படை வணிகம்தான் இப்படி இருக்கும்போது வணிக சினிமா என்கிற பிரிவு தேவைதானா?

பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகரைப் போட்டு எடுத்தும் கூட எத்தனையோ படங்கள் கண் முன்னாடி படு தோல்வி அடையுறதை பார்த்துட்டுதானே இருக்கோம். எல்லாமே வணிக சினிமாதான்.  எந்த சினிமாவா இருந்தாலும் கதையமைப்பு நல்லா இருக்கணும். இல்லைன்னா எப்பேர்ப்பட்ட நடிகர்கள் நடிச்சாலும் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. இது எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே அப்படித்தான்.

நவீன இலக்கியங்களை வாசிக்கிறீர்களா? அது குறித்து உங்களது பார்வை?

நவீன இலக்கியங்கள் என்னதான் சொல்ல வருதுன்னு எனக்குப் புரியலை. நான் யாரையும் குறிப்பிட விரும்பலை. இதோ மறுபடியும் சாண்டில்யனின் கடல் புறா நூலை வாசிக்க ஆரம்பிச்சுட்டேன். மலையாள நாவல்களின் மொழிபெயர்ப்புகளை வாசிச்சுக்கிட்டிருக்கேன். தமிழை விட மலையாளத்தில் இலக்கியம் வலுவா இருக்கு. மலையாள நாவலைக் கூட உரிய உரிமம் வாங்கி படமா என்னால் எடுக்க முடியும்.

சி சென்டர் திரையரங்கங்கள் தற்போது காணாமல் போய்விட்டதே?

இன்றைய திரைச்சூழலில் நிறைய பின்னடைவுகள் இருக்கு. இதுவும் ஒரு பின்னடைவுதான்.
                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக