செவ்வாய், 16 ஜூலை, 2013

ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்- பாரிமைந்தன்


கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை துவங்கி விட்டது எங்கே போனார்கள் மாணவர்கள்?. சாதிக்கொடுமையில் இளவரசன் இறந்துவிட்டான் எங்கே போனார்கள் மாணவர்கள்?. காவிரிப் பிரச்சனைக்கு ஏன் போராடவில்லை, காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பது பற்றி ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று அடுக்கடுக்காய் கேள்விகளை தமிழ் சமூகம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும் இவர்கள் ஈழத்தமிழர்களுக்காக மட்டும் தான் குரல் கொடுப்பார்களா இங்குள்ள தமிழர்களுக்காக போராட மாட்டார்களா என குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது
உலகமயமாக்கலுக்குப் பிறகு  தமிழகத்தில் தோன்றிய மாபெரும் மாணவர் போராட்டம் என்று சொல்லப்படும் இந்த போராட்டம் மார்ச் ஒன்றாம் தேதி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் தோழர்.விடுதலையின் ஒருங்கிணைப்பில் மெரினா கடற்கரையில் ஒன்றுகூடி பாலகன் பாலச்சந்திரனுக்கு நினைவேந்தல் நிகழ்வினை நடத்தினார்கள். மார்ச் ஐந்தாம் நாள் மதுரை சட்டக்கல்லூரியில்  படிக்கும் புரட்சிகர மாணவர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மதுரையில் நடத்தினார்கள். மார்ச் ஆறாம் நாள் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குத்தித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மார்ச் ஏழாம் நாள் மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்களும் அமெரிக்கன் கல்லூரி  மாணவர்களும் சேர்ந்து மாபெரும் பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் உருவபொம்மையை எரித்தனர். இந்த சூழலில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுபேர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அடிமனதில் தேக்கிவைத்து இருந்த மாணவர்களின் ஆதங்கம் தீப்பிழம்பாய் பற்றி எரியத்துவங்கியது. தமிழகம் முழுதும் பல கல்லூரிகளில் மாணவர்கள் சாகும்வரை உண்ணாநிலை அறப்போராட்டம் மேற்கொண்டனர். பேரணி, ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதசங்கிலி என்று அரசுக்கல்லூரி தனியார் கல்லூரி என்ற பாரபட்சம்  இன்றி எல்லா மாணவர்களும் களத்தில் குதித்தார்கள்.

அங்கிங் கெனாதபடிக்கு எங்கும் போராட்டமாய் தமிழகத்தில் நடந்துகொண்டிருந்த சூழலில் தமிழக அரசு கல்லூரிகளுக்கு காலவரையறை இன்றி விடுப்பு அறிவித்தது. ஆயினும் கொண்டாடித் திமில் பிடித்து வீரம் பேசும் தமிழ் சமூகத்தில் மாணவர்படை வீறுகொண்ட  மறவர் படையாய் களத்தில் நின்றது.

தமிழ் ஈழத்திற்கான மாணவர் குழு சார்பில் தோழர்.திவ்யா அறிவித்த ஆளுநர் மாளிகை முற்றுகையில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டோம். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் தோழர்.தினேஷ் அறிவித்த ஒருகோடி பேர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஆயரக்கனக்கான மாணவர்கள் மெரீனாவில் ஒன்றுகூடியது மிகப் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது.
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் சத்யகுமரன் மற்றும் ஜப்ரி போன்றோர் திருச்சியில் காங்கிரஸ் காரர்களால் தாக்கப்பட்டார்கள். இதற்க்கு பதிலாக சென்னை மயிலை மாங்கொல்லையில் நடக்க இருந்த மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம். அந்த கூட்டத்தை மாணவர்கள் கிளர்ச்சியை காரணம் கூறி அவர்கள் ரத்து செய்தார்கள். தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் மாநிலத் துணை அமைப்பாளர் அய்யாதுரை காவல் துறையால் தாக்கப் பட்டு மண்டை உடைக்கப் பட்டார்.
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் பத்திரிகையாளர்களைசந்தித்த போது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது என்றும், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்ற தீர்மானகளை முன்வைத்தோம். இவை அடுத்தநாளே சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப் பட்டது; தமிழக அரசு மாணவர் போராட்டத்தை உன்னிப்பாக கவனிப்பது அறிந்து இன்னும் தீவிரப் படுத்தினோம். வெவ்வேறு பெயர்களில் பல்வேறு கூட்டமிப்புகளாக தமிழகம் முழுதும் போராடினார்கள்.
                                                                                                                                                 
 இவ்வாறன சூழலில் அணைத்து சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி போராடலாம் என்ற முடிவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு  செய்தனர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை 'குமுதம் ரிப்போட்டர்' இதழ் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் பிளவுபட்டு நிற்பதைப் போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்கியது. சகோதரர். பிரிட்டோ போன்றோர்கள் தி.மு.க பாதிரியார் ஒருவரின் வழிகாட்டுதலில் செயல்படுவதாய் எழுதியதெல்லாம் கண்டனத்திற்குரியது.

தன்னெழுச்சியாய் எழுந்த இந்த போராட்டத்தை சில இயக்கங்களும், சில கட்சிகளும் தங்கள் ஆதரவு மாணவர்களை ஒன்றுதிரட்டும் வேலையில் ஈடுபட்டு பிரித்தாளும் சூழ்ச்சி செய்து அரசியல் சுயலாப நோக்கில் பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டதன் விளைவாக புதிய புதிய பெயர்களில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து போராட்டங்களை அறிவித்து சென்ற மாணவகளை அதன்பிறகு எங்குமே காண முடியவில்லை. தனி ஈழத்தை அங்கீகரிக்கிற இயக்கங்களும் இவ்வாறாக மறைமுகமாக மழுங்கடிக்கும் வேலைகளை செய்தனர். இது மாணவர் போராட்டத்தை கண்டு மிரண்ட கட்சிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே போனது.

எங்களிடம் இரண்டு நிலைப்பாடு இருந்தது. ஒன்று அனைத்து இயக்கங்களையும், கட்சிகளையும் புறக்கணித்து விட்டு போராட்டத்தை முன்னெடுப்பது. மற்றொன்று அனைவரின் ஆதரவோடு பயணிப்பது. மாணவர் போராட்டம் என்பதை பொதுமக்கள் போராட்டமாக அடுத்த தளத்திற்கு நகர்த்துவதற்குள் இந்த போராட்டங்களை உரிமை கொண்டாட நினைத்த சிலரின் செயல்பாடுகள்  ராஜபக்சேவை விட மோசமானதாகவே தோன்றிற்று. ஒன்னரை லட்சம் உயிர்களுக்கு நீதிகேட்டு நாங்கள் போராடுகிறபோது அதற்குள் அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களை என்ன சொல்வது (அவர்களின் முகத்திரை விரைவில் கிழிபடும்).

அப்பழுக்கற்ற தூய உள்ளங்களில் நஞ்சை விதைக்க முயன்றார்கள். இந்திய அரசை மட்டும் அல்ல இந்த வல்லாதிக்க சக்திகளையும் எதிர்த்தும் தான் நாங்கள் போராட வேண்டி இருந்தது.

நெய்வேலி பிரச்சனை துவங்கி பல பிரச்சனைகளுக்கு ஏன் போராடவில்லை என்று கேட்கும் தோழர்களே போராடிய மாணவர்களுக்கு தேவையான உதவிகளை எத்தனை பேர்  செய்தார்கள். பதாகைகள், துண்டு பிரசுரங்கள் துவங்கி உண்ணாவிரதப் பந்தல் வரைக்கும் நாங்களே செய்துகொண்டோம்.  சில இயக்கங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி சில உதவிகளை செய்ததது, சிலர் செய்தார்கள்.

திரும்பத்திரும்ப அவர்களிடமே உதவிகேட்டு  நிற்க முடியவில்லை. மேலும் பொருளாதாரம் இல்லாமல் தமிழகம் முழுதும் ஒரு இயக்கமாக செயல்படுவது  என்பது அத்தனை சாதாரண காரியம் இல்லை. இந்த பொருளாதார சிக்கல் எங்களை ஒரு கையறு நிலைக்கு கொண்டுவந்து விட்டது.

எது எப்படியோ திட்டமிட்டபடி காமன் வெல்த் மாநாட்டுக்கு எதிரான எங்கள் போராட்டம் மீண்டும் தீவிரப் படுத்தப்படும். இதோ டெல்லியின் பிடரியை பிடித்து உலுக்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். விரைவில் பாராளுமன்றம் தமிழக மாணவர்களால் முற்றுகை  இடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக