சேருமிடம்
எரிச்சலாக இருக்கிறது
ஆரத்தழுவ
யாரையாவது அடிக்க வேண்டும்
குத்திக் கிழிக்க வேண்டும்
எலி பாஷாணம், கயிறு, தூக்க மாத்திரை
எதுவும் தேவையில்லை
அன்பை வெறுப்பை எல்லாவற்றையும்
நிராகரிக்கிறேன்
எனக்கில்லை
நெடிய தீஜூவாலைகள்
உடல் திறனற்றுப் போனேன்
புதுமைப் பித்தன் குபரா பாரதி
பல உதாரணங்கள் உண்டு
அழகானவர்கள் சாதித்தவர்கள்
சிறுவயதில் இறந்திருக்கிறார்கள் -
எதையும் உருவாக்கவில்லை
அசிங்கத்தைத் தங்கள்
அசிங்கமான வாழ்க்கைக்கு விட்டுவிட்டு
வாழ்வும் தற்கொலையும் மரணமும் அற்புதமானது
கிழங்கள் பூங்காக்களில் நடை பழகிக் கொண்டிருக்கட்டும்
வாய்பிளந்து குறட்டை விட்டுத்
தூங்குபவன் தலையில் ஓங்கிப் போடு
பிறகு குளிப்பது உனக்குப் பிடித்திருக்கலாம்
காலம் என்னை முடித்துவிட்டது
கடவுளோ அல்லது வேறு யாராவதோ
தயவுசெய்து என்னை ஆசிர்வதியுங்கள்
முடியாத இரவு
முன்பின் தெரியாத ஊரில்
கட்டிங் கட்டிங்காக அரை போத்தல் குடித்துவிட்டேன்
வழக்கம் போல்
போதையில் என் அறை
இருக்குமிடம் மறந்துவிட்டது
சரியாகக் காயாத ஜட்டிகளும் பனியன்களும்
அலங்கோலமாகக் கிடக்கும் அறையது
அருகிலிருக்கும் வைன் ஷாப்பில் நுழைந்து
கட்டிங் ரம் வாங்கினேன்
தண்ணீர் கலந்திருப்பான் போல ராஸ்கல்
இன்னொரு கட்டிங் வோட்கா வாங்கினேன்
பாழாய்ப்போன கடையில் லிம்கா இல்லை
200 மில்லி செவன் அப் ஊற்றிக்
குடித்துக் கொண்டிருக்கையில்
வருகிறாள் என் ஆதர்சக் காதலி
வாயில் எடுத்துக் கொள்ள
200 ரூபாய் கேட்கிறாள்
அவள் அணிந்திருந்த
நைட்டி போன்ற ஆடையிலிருந்து
துர்நாற்றம் வீசுகிறது
தொட்டுக் கொள்ள இருந்த வேர்க்கடலையை
அவளுக்குக் கொடுக்கிறேன்
பைத்தியக்காரனோ அல்லது கொலைகாரனோ
என என்னைப் பயமுடன் பார்க்கிறான் கடைப் பையன்
கடை அடைக்கும் நேரம் வேறு
இப்போது என் அறை ஞாபகம் வர
கடைப் பையனையும்
அவளையும் அங்கேயே விட்டுவிட்டு
தள்ளாடியபடி
என் அறைக்குத் திரும்புகிறேன்
வெளிநாட்டு நண்பன் கொடுத்திருந்த
ஃபிரெஞ்ச் வைன் இருக்கிறது மேசையில்
கொலைகாரக் காதலியுடன் நடனம் ஆடியபடி
மெல்லப் பருகுகிறேன்
சிரித்துக் கொண்டே காதல்
இறந்து போனது
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி
மதிலில் இருந்து தாவப்போகும்
பூனையைப் போல் மரணத்திற்குக் காத்திருக்கிறேன்
என் மரணமல்ல -
வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்
என்று தத்துவம் பேசி
மனைவிக்கு ஒன்றும் விட்டுச் செல்லாத
என்னுடைய கையாலாகாத்தனமே
அதிகம் துன்புறுத்துகிறது
அவளருகில் படுத்திருந்த இரவுகளில்
என்னை வெளிப்படுத்த ஆசைப்பட்டிருக்கிறேன்
அவளுடன் போட்ட பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத
சண்டைகளைக்கூட இப்போது நினைக்கையில்
சுகமாயிருக்கிறது
நாளைக் காலை
என்னுடைய வெளிறிய உடலைப் பார்ப்பாள்
உலுக்குவாள்
என் பெயர் சொல்லி அழைப்பாள்
ஆனால் நான் பதில் சொல்ல மாட்டேன்
எப்போதும் அவளிடம் சொல்லத் தயங்கிய
வார்த்தைகளை இப்போது சொல்ல நினைக்கிறேன் :
நான் உன்னைக் காதலிக்கிறேன் கண்ணே
குடிகாரர்கள் நிரம்பிய ஊர்
மாலைநேரத் தார்ச்சாலையில்
கட்டிடங்களின் நிழலில்
போதையில் கிடக்கிறது வண்ணத்துப் பூச்சி
பறக்க எத்தனிக்கிறதா
புரண்டு படுக்கிறதா
சரியாகத் தெரியவில்லை
சிக்னலை நோக்கி விரையும் வாகனங்களின்
ராட்சசச் சக்கரங்களிடமிருந்து
எப்படித் தப்பிக்குமோ
மனசு கிடந்து அடித்துக் கொள்ள
அதன் மஞ்சள் நிறத்தைக் கையிலேந்தி
பொத்திப் பாதுகாத்துப்
பறக்க விடுகிறான்
தடுமாறியபடி
முகம் மழிக்காத குடிகாரனொருவன்
தன் சின்னஞ்சிறு ரெக்கைகளின் வனப்பை
ஊருக்குக் காட்டியபடி
பறந்து கொண்டிருக்கிறது
வண்ணத்துப் பூச்சி
போதையில்
(ரமேஷ் வைத்யாவிற்கு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக