எச்சில் கரை சிறுசிறு திட்டுகளாக
காய்ந்துக்கிடந்த ரயில் நிலைய சிமென்ட் தரையில் சுருண்டு படுத்திருந்தாள் கோணி
கிழவி. அவள் உடம்பில் ஒரு அழுக்கடர்ந்த பழஞ்சீலை சுற்றப்பட்டிருந்தது. சுமார் ஒரு
மாதத்துக்கும் மேலாக அவளது ரத்தம் உறைந்த வற்றிய உடலை அந்த சீலைபோர்த்தியிருந்தது.அந்த
குடிகாரப்பயல்செல்லமுத்துதான் சீக்குண்டு இறந்துபோன தனது அம்மாவின் சீலை ஒன்றை
கோணி கிழவிக்குகொண்டு வந்து கொடுத்தான். சீலையை கையில் வாங்கியதும் காய்ந்துபோன
மாந்தோளை போன்ற தனது மூக்கு துவாரத்தில் அந்த சீலையை நுழைத்து அதன் மனத்தை முகர்ந்து
பார்த்துவிட்டு, புறப்பட தயாராய் நின்ற ஒரு ரயிலின் கழிவறையினுள் நுழைந்து, அதன்
துருவேறியிருந்த கதவை தாழிடாமல்அவசர அவசரமாககடந்த ஒரு மாதமாக அவளது உடலைத் தழுவிக்கொண்டிருந்த
துணியை விலக்கிவிட்டு செல்லமுத்து கொடுத்த சீலையை சுற்றிக்கொண்டாள்.தனது தாயின்
சீலையில் கோணி கிழவியை பார்த்ததும் செல்லமுத்துவின் முகம் அஷ்டக்கோணலாக சுழித்துக்கொண்டது. கிழவியின் பழைய சீலை அவள்
எப்போதும் தன்னருகில் கிடத்திக்கொண்டிருக்கும் துணி மூட்டையில்
பத்திரப்படுத்தப்பட்டது.
தனது இருப்பையும் மறந்து கோணி கிழவி மிகவும் பிரகாசமான
முகத்துடன் அன்றைய பொழுதில் காட்சியளித்தாள். அவளது மடிந்த தோள்கள் புதுச்சீலையின்
பூரிப்பில் குலுங்கிச் சிரித்தது. கார்ப்புரேஷன்ஸ்கூலில் எட்டாம் வகுப்பு படிக்கும்
செல்லமுத்துவின் இளைய மகன் குமார பூச்சி, ரயில் நிலைய இரைச்சல்களுக்கிடையில் கிழவியின்
காதில் மென்று துப்பிவிட்டுபோயிருந்த “ப்லீஸ் ஹெல்ப் மீ மைச் சில்ட்ரன்ஸ்“ அன்று முழுவதும் அவளது உதடுகளில்
துடித்துக்கொண்டிருந்தது. புதுசீலையும் ஆங்கில வாடையும் கோணி கிழவியை தனது
சகாக்களான ரோஸ் மேரி மற்றும்முத்துபேச்சியிடமிருந்தும் பிரித்துக் காட்டியது. மிக
நீண்ட நாட்களுக்கு பிறகு கோணி கிழவி அன்று நிம்மதியாக ரயில் நிலைய சிமென்ட்
தரையில் எச்சில் கரை பதிந்த தடமாக தேடி உடல்சரிய கண் அயர்ந்தாள்.
கோணி கிழவியிடம் தனது சகாக்களால் கூட
புரிந்துகொள்ள முடியாத செயல் அது. ஒரு முறை ஆர்வத்தை அடக்க மாட்டாமல் ரோஸ் மேரி
கிழவியிடம் கேட்டேவிட்டாள் “ அது சரி
கெழவி, நானும் வந்த நாளுலிருந்து உன்ன பாக்குறேன், அதென்ன மனுச எச்சி பட்ட இடத்துல
உனக்கு அப்படி ஒரு சொகம் “ ரோஸ் மேரியின் இந்த கேள்வி கிழவியின் காதுகளில்
ஊடுருவிய நொடியில் தனது தடித்த உதடுகளை பிரித்து, வெற்றிலை கரை அப்பிக்கிடந்த
கறுத்த பல்லை வெளியே நீட்டி கொல்லென சிரித்தே விட்டாள்“ அது இல்லடி கொமரி, ஊரிலே
எனக்கொரு மொவன் இருக்கான், பேரு கர்ணன். விட்டா நாளுக்கு ஒரு பொண்டாட்டி
கட்டுறாப்ல திடமான பய. அப்பன் இல்லாத பயனுட்டு என் மாறாப்லயே முடிஞ்சு வளத்த பய.
சின்ன புள்ளையில அஞ்சு நிமிஷம் பயல தனியாவிட்டுட்டா போதும் வீல் வீல்ன்னு மண்ணுல
உழுந்து பொரள ஆரம்பிச்சிடுவான். அப்படியே வாரி அணைச்சு என் ரத்தினமே கண்ணுறங்கு,
ராசாவே நீ ஓரங்குனுட்டு வாய்ல ரெண்டு முத்தம் கொடுத்தாபோதும் கம்முனு தூங்க
ஆரம்பிச்சிடுவான் “ கோணி கிழவி பல வருடங்களுக்கு முன் நகர்ந்து சென்று விட்டதாக
தோன்றியது ரோஸ் மேரிக்கு.
“ ஏண்டி மேரி, உனக்கு பொறப்பு எதுவும் இருக்காட்டீ
“ நினைவு சுழலிலிருந்து மீண்ட கிழவி கேட்டாள்.
“ ஏதேது, புள்ள பொறப்பா, அதுக்கு எவன தேடுறது.
நமக்கு வயிறுதான் புள்ளயும் புருஷனும். அத நெறப்பிக்கிட்டா போதும், தனி சுமையா
எதுவும் வேணாம் ” கண்களை அகல விரித்து பதிலுரைத்தாள் ரோஸ் மேரி.
“ புள்ள பொறப்ப எல்லா பொம்பளையும்
அனுபவிக்கனும்டீ, அது ஒரு தனி சுகம். அதுக்குதான எல்லா பொம்பளையையும் கடவுள்
படச்சிருக்கான். எம் புள்ளயோட எச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்டீ, அதுல ஒரு வாசனை
இருக்கு. அது லேசுல பிடிபடாது. ஒவ்வொரு தடவ எம் புள்ளைய தூக்கி முத்தம்
கொடுக்கும்போது அவன் எச்சி என்னோட உதட்டுல ஊறும்போது உள்ளாரா ஒரு கிளுகிளுப்பு
உண்டாகும்பாரு, அதுதான் தாய்மைங்கிறது. அதுக்கு நிகரா என்னடீ இருக்கு “ மனதின்
பெருங்கனத்தை இறக்கி வைத்த திருப்தியில்காலை நீட்டி தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டாள் கிழவி.
“ அது என்னுமோ போ கெழவி, ஆண்டு அனுபவிச்சிட்டு
நீ பேசுற, நானும் கேக்குறேன். நமக்கு இந்த புள்ளகில்லலாம் எதுவும் வேணாம், காலைல
எழுந்து நாள் முழுக்க அம்மா அக்கா அண்ணானுட்டு கெஞ்சி கூத்தாடி அவனவன்காலுல
உழுந்து காசு சேக்கனும், இருட்டினதும் நல்லா குடிச்சிட்டு நிம்மதியா தூங்கனும்,
அதுதான் எனக்கு தெரிஞ்ச வாழ்க்க. என் அப்பன் பழக்கின வாழ்க்க, இதுல பெருசா எனக்கு
எதுவும் குறை வந்தது இல்ல” என்று சொல்லி முடிக்க ரயிலின் பெருத்த அலறல் ஒலி
உரையாடலை துண்டித்தது. ரோஸ் மேரி எழுந்து ரயிலை நோக்கிவேகமெடுத்து ஓடினாள். கோணி
கிழவி தன் பிள்ளை குறித்த நினைவுகளை சுழல விட்டு அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
குடிகார
பயல் செல்லமுத்துவுக்கும் அவனது இளைய மகன் குமார பூச்சியைபோலவே கோணி கிழவியின்
மீது கொள்ளை பாசம். தினமும் அந்தி சாய்ந்த வேளைகளில் பாட்டிக்கு தனது
வீட்டிலிருந்து குமார பூச்சி சாதத்தையும், டாஸ்மார்க்கிலிருந்து செல்லமுத்து
சாராயத்தையும் வாங்கி வந்துவிடுவார்கள். நாள் தவறாமல் அரங்கேறும் நிகழ்வு இது. மிக
எதிர்ச்சையாக தாய் கோழியின் மென் சிறகுகளில் அடைக்கலம் புகும் சிறு குஞ்சைப்போல
கோணிக்கிழவி அவர்களின் நேசமிகு கரங்களுக்குள் அடைபட்ட நாளிலிருந்து அரங்கேறும்
நிகழ்வு அது. குமார பூச்சியின் பாட்டி
இறந்த சில நாட்களே ஆகியிருந்தபோதுதான்அப்பன் மூலமாக கோணி கிழவியின் அறிமுகம்
கிடைத்தது. காய்ந்து போன முடி கற்றையும், உலர்ந்துபோன சதையுமாக மனித உருவத்துக்கு
அப்பாற்ப்பட்டவளாகவே கிழவி குமார பூச்சிக்கு துவக்கத்தில் தோன்றியதால்,
கிழவியிடமிருந்து தள்ளியே அவன் இருந்தான். ஆனால் நாட்கள் நகர நகர அவர்களுக்கான
இடைவெளி மெல்ல நொறுங்க துவங்கியது. அவள் அவனையும், அவன் அவளையும் எதிர்பார்க்கும்
நாட்கள் ரயிலை போலவே வேகமாக விரைந்து வந்து அவர்கள் முன்னால் நின்றன. கோணி
கிழவிக்கு அப்படி பெயர் வைத்ததே குமார பூச்சிதான்.
பலமுறை அப்பனிடம் அரித்து பார்த்தும் கோணி பாட்டியின் அறிமுகம் குறித்து
வாய்திறக்காதவன், முழு போதையில் மூழ்கி திளைத்த
ஒரு நடு இரவில் குடிசையிலிருந்து எழுந்து ரயில் நிலையத்திற்கு வந்து ஆழ்ந்த
நித்திரையில் இருந்த கிழவியின் முன்னால் கண்கள் கலங்கி நின்றபோதுதான், அப்பன்
பின்னாலேயே வந்து பார்த்த குமார பூச்சிக்கு அவர்களின் அறிமுகம் குறித்து ஓரளவுக்கு
தெரியவந்தது. “ ஆத்தா தாயீ, நீ ஒன்னியும் கவல படதா, உனக்கு நல்லது கெட்டது செய்ய
உம் புள்ள நான் இருக்கன், என்னைக்கும் நீ கண்கலங்கக் கூடாது. ஏன் அழுவுற, பெத்ததே
கொல்ல பாக்குதுன்னா, இப்பல்லாம் உலகத்துல பாதி பெத்தவங்கள புள்ளங்கதான் கொள்ளுதுங்க,
நீ மட்டும் என்ன விதி விலக்கா, நீ பெத்ததாவது உன்ன கோணியில கட்டி இங்க கொண்டு
வந்து எம் மடியில கொட்டிட்டு போயிருச்சுன்னு சந்தோஷப்படுவியா, யாரும் இல்லன்னாதான்
அழுவுனும், நான் இருக்கன், எம் மகன் இருக்கான், நாளைக்கு எம் மகனும் என்ன இதே போல
கோணில கட்டி ஆத்துலயோ, கொலத்துலயோ போட்டுரும், அப்போ நானும் உன்ன போலதான்
போத்திக்க துணி இல்லாம கிடப்பேன். ஆனால் அதெல்லாம் பெருசு இல்ல, உருசு
துடிச்சிக்கிட்டு இருக்குங்கிறதே போதும், மத்ததெல்லாம் மசிருக்கு சமம். பணம்,
சொந்த பந்தம், இதோ இந்த துணி, ஆவ்வ் த்த்தூ “ எச்சிலை குழைத்து கிழவியின் அருகில்
துப்பிவிட்டு போதையில் அதன்மீதே விழுந்து புரண்டான். குமார பூச்சிக்கு அரையும்
குறையுமாக ஏதோ கொஞ்சம் விளங்கியது.
மறுநாள் பள்ளியில் குமார பூச்சியின் நினைவில் முன் தின இரவு அப்பன்
குடிபோதையில் உளறியதே மீண்டும் மீண்டும் எழுந்து இம்சித்துக்கொண்டிருந்தது. மாலை
கிழவியிடம் சென்று அவளது கையை இறுக பற்றியபடி அமர்ந்தவன் “ கிழவி உன்ன யாரோ கோணில
கட்டி இங்க வந்து போட்டுட்டாங்களா “ என்று அப்பாவியாக கேட்டான்.
அவனது இந்த கேள்வி அவளுக்கு அந்நியமாக
தோன்றியது, இவனுக்கு இதெல்லாம் செல்லமுத்து சொல்லி இருப்பான் என்றே கிழவி
நினைத்திருந்தாள். “ யாரோ இல்ல குமாரு, பத்து மாசம் நான் சுமந்து பெத்த புள்ளதான்
“ என்று சொல்லி சிரித்தாள்.
குமார பூச்சி தனது கேள்வியால் கிழவி எப்படியும்
அழப் போகிறாள் என்றே எதிர்பார்த்தான். ஆனால் அவனது எதிர்பார்ப்பில் எச்சில்
துப்பிய கிழவி சிரிக்கத் துவங்கினாள். “ எல்லா புள்ளைகளும் தட்டாம செய்றதுதான்,
எம் புள்ள மட்டுமா செஞ்சான். ஈ கடிக்காம, எறும்பு கடிக்காம நல்லாதான் அவனை
வளத்தேன். கர்ணன்னு பேருக்கு தக்க உடம்பு அவனுக்கு. ரொம்ப நல்ல மனசுக்காரன்.
உனக்கு ஒன்னு தெரியுமா குமாரு, எனக்கு அவன்கிட்ட அவனோட எச்சிதான் ரொம்ப
பிடிக்கும். சின்ன வயசுல அவன் அழும்போதெல்லாம் முத்தம் கொடுப்பேன், முத்தம்
கொடுக்குற மாதிரி பாவுல செஞ்சிட்டு வாய இழுத்துக்கிட்டா, சட்டுனு கோவத்துல எம்
மூஞ்சில எச்சிலை குழைச்சு துப்புவான், ஹ்ஹ்ஹாஹா “ வெடித்து சிரித்தான் கிழவி அது
நாள் வரையில் அப்படி ஒரு சிரிப்பை கண்டதில்லை அவன்.
“ அப்படி துப்ப ஆரம்பிச்சவன்தான் இதோ கடேசியா இங்க கொண்டுட்டு வந்து
போட்டுட்டு போகும்போது கூட துப்பிட்டுதான் போனான். முதல்ல எம் புருசன் என்மேல
துப்பினான், நட்ட நடு ரோட்டுல கைக் கொழந்தையோட என்ன தனியா விட்டுட்டுபோனதும் ஊரே
ஒன்னுகூடி துப்புச்சு, அப்புறம் நான் பெத்த மவன் துப்பினான். அவன் இழுத்துவந்தவ
துப்பினா, அவள பெத்தவங்க துப்பினாங்க, இப்படி எல்லாருமா சேந்து துப்பி துப்பி
எச்சில் என் உடம்புலேயே ஊரிடுச்சு. எச்சில் படாத தரைய பாத்தா ரொம்ப பயமா இருக்கு.
உண்மைய சொல்லன்னுன்னா மனுஷ பொறப்பே எச்சில்லதான் தொடங்குது, ஆனால் நான் எச்சில்ல
கிடந்து உருள்றது மட்டும் உங்களுக்கு தப்பா தெரியுது “ என்று மீண்டும் ஒரு முறை
கிழவி சிரித்தாள்.
“ அதுசரி பாட்டி, உன்ன ஏன் உம் மொவன் கோணில
கட்டி கொண்டுவந்து போட்டான் ” பாட்டியின் சிரிப்பு அவனுள் உண்டாக்கிய அதிர்வு
அடங்காமல் கேட்டான் குமார பூச்சு
மீண்டும் ஒரு முறை உரக்க சிரித்த கோணி கிழவி “
என்ன எப்படியாவது கண்காணாத இடத்துல விட்டரனும்னு அவன் பொண்டாட்டி ரொம்ப நாள்
முன்னாடியே அவன்கிட்ட சொல்லிட்டா, அது எனக்கும் தெரியும். அதனால அவங்களுக்கு
சிரமம் கொடுக்காம நானே அங்கிருந்து போயிடலாம்னு முடிவு பண்ணியிருந்த நேரத்துல, எம்
மகன் என் கிட்ட வந்து ‘எம் பொண்டாட்டிக்கு உன்ன சுத்தமா புடிக்கலமா நீ எங்கயாவது
போயிடேன்’ன்னான். நான் போக தயார்தான் ஆனால் நான் எங்க போக?, எனக்கென்ன புள்ள
ரெண்டா, மூணா. நான் பெத்தது ஒன்னே ஒன்னு அதுவும் விரட்டியடிச்சா நான் எங்க போக
நீயே சொல்லுன்னேன். ‘ அதெல்லாம் நீ கவல படாதம்மா, தொலை தூரத்துல என் பிரண்டு
ஒருத்தன் இருக்கான், அவன் கிட்ட உன்ன அனுப்பி வைக்கிறேன்’னு சொன்னான். சித்தன்
போக்கு சிவன் போக்குன்னேன். எம் மகன் என்னையே இங்க கொண்டுவந்து போட்டுட்டு
போயிட்டான். நான் ரயில்ல ஏறும்போதும் கோணியால எல்லாம் மூடுல. அது நான்
தூங்கினதுக்கு அப்புறம்தான் நடந்திருக்கு. நான் கோணியிலயே கிடந்து சாகனும்னு
நெனச்சிருக்கான், பாவம் மகன் ஏமாந்துட்டான். ரயில் மறைவில் தண்ணி அடிக்க வந்த ஒங்க
அப்பன் கண்ணுல பட்டதால நான் பொழச்சேன். எல்லா கொழந்தையும் கருப்பை பொறக்குற
மாதிரி, நான் இந்த கோணி பையில் ரெண்டாவது முறையாக பொறந்திருக்கிறேன் “சொல்லிவிட்டு
கிழவி சிரிக்க, குமார பூச்சியின் கண்கள் பளபளத்து தாழ்ந்தன. அவன் எதுவும்
சொல்லாமல் அங்கிருந்து எழுந்து வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான்.
எச்சில் கரை சிறுசிறு
திட்டுகளாக காய்ந்துக்கிடந்த ரயில் நிலைய சிமென்ட் தரையில் சுருண்டு
படுத்திருந்தாள் கோணி கிழவி. அவள் உடம்பில் செல்லமுத்து கொடுத்திருந்த சீலை
அழுக்கடர்ந்த சுற்றப்பட்டிருந்தது. குமார பூச்சி மெல்ல அந்த அதிகாலை வேளையில்
அவளருகில் வந்து அமர்ந்து அவள் முகத்தையே உற்றுப்பார்த்தான். பின் மெல்ல அவளது
முகத்தை உயர்த்தி கிழவியின் தடித்த உதட்டில் முத்தம் கொடுக்க, எங்கோ வெகு தொலைவில்
மனித சந்தடிகள் அற்ற ஒரு பெரு வெளியில் பறவைகளுக்கு மத்தியில் கிழவியும் அவனும்
மிதந்துக்கொண்டிருப்பதாக தோன்றியது அவனுக்கு. நிலவொளியும், நட்சத்திரங்களும்
தொட்டுவிடும் தூரத்தில்தான் இருப்பதாக எண்ணி காற்றின் தீரா இரைச்சலில் தன்
கையையிட்டு துலாவினான். கோணிக்கிழவி நீந்தும் பாதையில் அவனும் நீந்தி சென்றான்.
இன்னும் நீண்ட நேரம் அங்கு சஞ்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் போல தோன்றினாலும்,
சட்டென்று அவளது முகத்தை கீழிறக்கி வைத்துவிட்டு அவள் காதில் கிசுகிசுத்தான் “ இனி
நான்தான் உனக்கு அம்மா “ கையில் மறைத்துக்கொண்டுவந்திருந்த அம்மாவின் புது சீலை
ஒன்றை கிழவியின் தலைமாட்டில் வைத்துவிட்டு விர்ரென்று எழுந்து வீட்டை நோக்கி
நடந்தான்.
பள்ளியில் அன்றைய நான் முழுவதும் குமார பூச்சிக்கு அதே நினைப்புதான். கிழவி
என்ன நினைத்திருப்பாள்?. அவள் முகத்தை இப்பவே பார்க்க வேண்டும் போலிருந்தது
அவனுக்கு?. அந்த சுருங்கி இடுங்கிய கண்களில் என்ன விதமான உணர்வுகள் பிதுங்கி
நின்றிருக்கும்?. அவனது மனம் சலசலத்துக்கொண்டே இருந்தது. மாலை பள்ளியின் இறுதி மணி
அடித்ததும் கிழவியை காண வேகமெடுத்துஓடினான். அங்கே வழியில் குமார பூச்சி கிழவியின்
தலைமாட்டில் வைத்துவிட்டு வந்த சீலையை ரோஸ் மேரி அணிந்து நிற்பதை கண்டு வியப்படைந்தான்.
குமார பூச்சி தன்னையே குறுகுறுவென்று பார்ப்பதை உணர்ந்த ரோஸ் மேரி “ என்னப்பா
அப்படி பாக்குற “ என்று வினவ, அவன் “ இந்த.... சீ..லை “ என்று நடுங்கும் விரலை
அவள் முன் நீட்டினான்.
“ ஒஹ் அதுவா, உனக்கு விஷயம் தெரியாதா, நம்ம கோணி
கிழவி தலை மாட்டுல இந்த சீலை கிடந்துச்சு, யாரோ பாவப்பட்டு அங்க வச்சிருக்காங்க,
அதுதான் செத்துப்போச்சே, சரி நாமளாவது கெட்டிக்கலாம்ன்னு எடுத்துக்கிட்டேன்,
நானும் பாவம் தான “ என உதட்டை பிதுக்கி சிணுங்க குமார பூச்சியின் கண்களில் குளம்
குளமாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. உலகில் யாராலும் நேசிக்கப்படாத,
எல்லோரையும் நேசிக்க மட்டுமே தெரிந்த ஒரு கிழவியின் எச்சில் குமார பூச்சியின்
உதடுகளில் பிசுபிசுத்துக்கொண்டிருந்தது.
----------------------------- ராம் முரளி
.................................................................................................
15 – சி, ஹாஸ்டல் டைப், வட்டம் –10, நெய்வேலி - 607801 கைப்பேசி: 9942798104
…………………………………………………………………………………………………………………………………………………………………
விகடனில் மாணவப் பத்திரிகையாளனாக பணியாற்றியவன், எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் தீராக்
காதல் கொண்டவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக