நானும்
பாண்டியனும் 11-ம் 12- வகுப்புக்கு ரெண்டு வருஷம் ஒன்றாகவே சென்று வந்தவர்கள்..( ஒன்றாகவே ”படித்தவர்கள்” என்று சொல்ல மனசாட்சி இடம் கொடவில்லை..)
எனக்கும்
அவனுக்குமான சில பொதுவான சில விஷயங்களே எங்களது நட்பிற்க்கு ஆதாரமாயிருந்தது… அவனும் நானும் கவிதை கிறுக்கி உலக இலக்கியம் படைப்பதில் ஆர்வமாயிருந்தோம்… இருவரும் தமிழ் வகுப்பில் துாங்காமல் இருப்போம்..
பாண்டியனின்
தனித்துவம் அவனது ஹேர்ஸ்டைல்.. நடுவகிடெடுத்து பத்து நிமிடத்துக்கு ஒருமுறை அழகாய் சீவி ப்ரமாதபடுத்துவான்..(விஜயகாந்த் ரசிகன்..)
நான்
வர்ணனை இலக்கிய கவிதை படைத்துக்கொண்டிருக்க (வானம் நீலம்… எவ்வளவு நீளம்..?)
அவன்
காதல் இலக்கிய கவிதை படைத்துக் கொண்டிருந்தான்..( கண்கள் கலந்தோம்.. கரப்பம் இல்லாமல் கவிதைக் குழந்தை பிறந்தது..)
அவன்
காதல் இலக்கியம் படைப்பதற்க்கு காரணம் இருந்தது… அது பள்ளியிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்த பெண்கள் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் ப்ரியா..( பெயர் மாற்றப்படவில்லை…)
நமக்கு
அவ்வித கொடுப்பினை இல்லாததால் நான் சாதா இலக்கியம் படைக்க நேந்து விடப்பட்டேன்.... (எனது எல்லா விண்ணப்பங்களும் தயவு தாட்சண்யமின்றி எல்லா பெண்களாலும் நிராகரிக்கப்பட்டது..)
காதலியை
சந்திக்க தன்னைவிட சுமாரான பையனை கூட அழைத்தச்செல்லும் ஆகம விதிப்படி.. மேற்படி அந்த பெண்ணை சந்திக்க தினமும் பாண்டியன் என்னை அழைத்துச்செல்வான்..
ஒரு
தீயணைப்பு நிலையத்தின் வெளியிலிருக்கும் மரத்தடியில் நின்று கொண்டு இருட்டும் வரை பேசிக் கொண்டிருப்பார்கள்.. ப்ரியா அடிக்கடி பாண்டியனின் தலைமுடியை விரல்களால் கோதிவிடுவாள்… ( டேய்.. அவளுக்கு எங்கிட்ட ரொம்ப பிடிச்சதே என்னோட ஹேர்ஸ்டைல்தானாம்….) நான் மரியதையான இடைவெளியில் தள்ளி நின்று கொண்டு வாகன கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருப்பேன்..
ஞாயிறு
தவிர எல்லா நாட்களிலும் அந்த சந்திப்பு நிகழும்.. காத்திருக்கும் நான் கடுப்பின் உச்சத்தில் இருப்பேன்… ஒரு முறை பாண்டியனிடம் கேட்டும் விட்டேன்…
”ஏண்டா.. நீ மட்டும் அந்த பொண்ண பார்க்க என்னை கூட்டிட்டு போற.. அந்த பொண்ணு மரியாதைக்காவது கூட ஒரு பொண்ணை கூட்டிட்டு வரவேணாம்..?”
பதிலேதும்
இல்லை…
அவர்களது
தெய்வீக சந்திப்புக்கு காத்திருப்பதை விட கொடுமையானது அந்த பெண்ணை சந்தித்த பிறகு அடுத்த நாள் நண்பர்களிடத்தில் பாண்டியன் விவரிக்கும் அலப்பபறைகள்..
”நான் எழுதுன கவிதைய படிச்சுட்டு அடுத்த வைரமுத்து நீதான்னு சொன்னாடா..?”
”யார் சொன்னாலும் உன் ஹேர்ஸ்டைலை மட்டும் மாத்திடாதன்னு சொன்னாடா..?”
நான்
அப்பவே கோவிலுக்கு போவதையெல்லம் நிறுத்திவிட்டேன்…
இருந்தாலும்
பாண்டியன் அந்த பெண்ணின் மீது நிறைய நம்பிக்கையும் நிறைய காதலுமாய் வெகு நேர்மையாகவே இருந்தான்.. மனதளவில் ப்ரியாவை வருங்கால மனைவியாகவே நினைத்துக் கொண்டிருந்தான்..
நாளொரு
சந்திப்பும் பொழுதொரு கவிதையுமாய் இருந்த அந்த காதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது…
ப்ரியாவின்
வீட்டுக்கு விஷயம் தெரிந்து போய் பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தி விட்டார்கள்.. கையோடு ஒரு மாப்பிள்ளையையும் பார்த்து கல்யாணத்துக்கு நிச்சயம் செய்து விட்டார்கள்…
பாண்டியனுக்கு விஷயம்
தெரிந்ததும் உடைந்து போனான்… அதைவிட ப்ரியா கல்யாணத்திற்க்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பது அவனுக்கு பேரிடியாக இருந்தது… அவளை வற்புறுத்தி கடைசியாக ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது…(நான் தான்..)
”எங்க அம்மா அப்பா பேச்சை மீறமுடியல.. அதனாலதான்…. ” என்று தொடங்கி முழ நீளத்துக்கு ப்ரியா பேசிய வசனத்தை (வீட்லயே எழுதி குடுத்துருப்பானுகளோ..?) பாண்டியன் எந்த சலனமுமின்றி வெறுமையாக கேட்டுக்கொண்டிருந்தான்… அவள் போனதும் அழுதான்… ஒரு வழியாக நண்பர்கள் எல்லோரும் அவனை தேற்றினோம்..
சரியாக
ப்ரயாவின் கல்யாண தினத்தன்று பாண்டியன் காணாமல் போய்விட்டான்.. எல்லோரும் தேடியும் கிடைக்கவில்லை.
. எங்களுக்கெல்லாம் ஒரே பயம்.. (தற்கொலை ஏதும் பண்ணிகிட்டானோ..?)
சாயங்காலம்
திருச்சி பஸ்ஸிருந்தது இறங்கிய போது அவனை பிடித்தோம்..
தலையை
மொட்டையடித்து
முழுக்க சந்தனம் தடவியிருந்தான்..
”எங்கடா போனே..?” எல்லோரும் கேட்டோம்..
”இன்னையிலிருந்து அவ வேற ஒருத்தரோட மனைவி… இனிமே அவ விரும்பிய தலைமுடியும் எனக்கு தேவையில்லை.. அதான் சமயபுரம் கோயிலுக்கு போய் மொட்டை அடிச்சிட்டேன்.. இனிமே என் வாழ்க்கை முழுக்க மொட்டையோடதான் இருப்பேன்..” என்று லாஜிக்கே இல்லாமல் ஒரு மொக்கை காரணம் சொல்லி சபதம் போட்டான்…
சரி
மொட்டைதானே அடிச்சான்.. எப்படியோ உயிரோட இருக்கானே.. அது வரை சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டோம்…
அதுதான்
நான் பாண்டியனை கடைசியாக பார்த்தது… அதன் பிறகு நான் வேலை நிமித்தமாக சென்னை வந்துவிட்டேன்….
பாண்டியன்
வெளிநாட்டுக்கு
சென்று விட்டதாய் நண்பர்கள் சொன்னார்கள்….
அப்புறம்
அடிக்கடி அவனைப்பற்றிய செவிவழி செய்தி வரும்…
ஒருமுறை
தொலைபேசி அவன் திருமணத்துக்கு அழைத்தான்.. என்னால் போக இயலவில்லை.. திருமணம் முடிந்ததும் வெளிநாட்டுக்கே மனைவியோடு சென்றுவிட்டாய் பிறகு தெரிந்து கொண்டேன்..
அதன்
பிறகு அவனைப்பற்றி மறந்தே விட்டேன்.. பதிமூன்று வருடங்கள் ஓடிவிட்டது…
நேற்று
காலை ஒரு அலைபேசி அழைப்பு..
”டேய்… நான் பாண்டியன் பேசுறண்டா… எப்படி இருக்க..?”
நான்
சட்டென குரல் அடையாளம் கண்டுபிடித்து
”டேய்.. பாண்டி.. எப்படிடா இருக்க..? எவ்வளோ நாளச்சு“ உற்சாகமானேன்..
”நாலு நாளைக்கு முன்னாடிதான் ஃபாரின்லருந்து வந்தண்டா…. நம்ம பசங்கள பாரக்கத்தான் இப்போ ஊருக்கு வந்துட்டு இருக்கேன்.. நீ ஊர்ல தானே இருக்க…”
”ஆமாம்.. நான் பசங்களுக்கு சொல்லிடறேன்.. நீ எதுல வர்ற..?”
”ட்ரெயின்ல.. வைகை எக்ஸ்பிரஸ்.… ஸ்டேஷனுக்கு வந்துடறியா..?”
நான்
ரயில்வே ஸடேஷனில் காத்திருந்தேன்…
வைகை
எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது…
நாகரீகத்தின்
உச்சமாய் செழுமையுடன் கையசைத்தபடியே படு ஸ்டைலாக ரயிலிலிருந்து இறங்கிய பாண்டியன்..
பளபளவென
ஒரு முழுநிலவைப் போல மொட்டையடித்திருந்தான்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக