திங்கள், 15 ஜூலை, 2013

வலிப்பு - சிறுகதை: அரங்கன் தமிழ்


நண்பனின் அப்பா என்று எனக்கு முதலில் அறிமுகமானவர் பாபுவின் அப்பா.. சண்முகம் என்று நாமகரணம்… பெருமாள் கோவில் வீதியில் தள்ளுவண்டியில் சகல ரகத்திலும் வாழைப்பழம் விற்பவர்… கைலியும் முண்டா பனியனுமான உருவத்தில் இப்போதும் ஞாபகத்திலிருப்பவர்..!
பாபுவின் குடும்பம் எங்கள் தெருவுக்கு குடியேறியபோது என்னுடைய  நாலாம் வகுப்பிலேயே பாபுவும் சேர்ந்திருந்தான். ஒரு ஞாயிற்றுக் கிழமையில் பெருமாள் கோவில் வழியே பராக்கு பார்த்தபடி நடந்து கொண்டிருந்த என்னை வாழைப்பழ வண்டியின் பின்னிருந்து ” அழைத்தவர் பாபுவின் அப்பா..
”கண்ணு.... இங்க வா..”
”என்னங்க..? நான் அருகினேன்..
”கண்ணு.. நீ பாபுவோட தானே ஸ்கூல்ல படிக்கிற..?”
”ஆமாங்க.. நீங்க பாபு அப்பாதானே..?”
”ஆமாப்பா.. போன வாரம்தான் உங்க தெருவுக்கு புதுசா குடி வந்துருக்கோம்..”
”ம் தெரியும்ங்க.. அந்த மளிகை கடைக்கு பக்கத்துல. பச்சை பெயிண்ட் வீடு....”
”தம்பி.. ஒரு விஷயம்..” குரலில் தயங்கினார்..
”என்னாதுங்க..?”
அது வந்து தம்பி.. என் பையனுக்கு எப்பயாவது வலிப்பு வரும்… நீ அவன் கூடத்தானே படிக்கிற.. ஸ்கூல்ல எப்பயாவது அப்படி ஆச்சுன்னா நீ கொஞ்சம் பக்கத்துல இருந்து பார்த்துக்கோப்பா..”
எனக்கு தெரியும்… நாலைந்து முறை வகுப்பறையிலேயே அவனுக்கு அப்படி நிழந்திருக்கிறது… ஆரோக்கிய சாமி வாத்தியார் உடனே ஸ்கூல் மணியடிக்கிற கம்பியை கொண்டுவரச்சொல்லி அவன் கையில கொடுத்து ஆசுவாசப்படுத்துவார். ஒரு மணி நேரத்திற்க்குள் சரியாகிவிடுவான்.. மாதம் இரண்டு முறையேனும் இப்படி நிகழும்.. வகுப்பு களேபரமாகும்.. ஆரோக்கியசாமி வாத்தியார் அமைதிப் படுத்துவார்.. பாபு மயக்கத்தில் இருக்கும் போதுதான் அவர் சொல்வார்..!
”இந்த நிலைமையிலயும் இந்த பையன் படிக்க வர்றான்னா எவ்வளவு ஆர்வம்னு பாருங்கடா.. இவனை பார்த்தாலே உங்களுக்கு நல்லா படிக்க தோணும்..”
பாபு எனக்கு வகுப்புத் தோழன் என்பதைத் தவிர நெருக்கம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.. ஆனால் அவன் அப்பா என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கேட்ட நிமிடத்திலிருந்து பாபு மீதான பரிவை தவிர்க்க முடியவில்லை..
”சரிங்க.. நான் அவன் பக்கத்துலயே உட்கார்ந்துகிறேன்… நான் பார்த்துக்கறேன்..”
”ரொம்ப சந்தோஷம் கண்ணு… பாபு மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கான்.. டாக்டர் கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு சொல்லிருக்கார்.. நீ கூட இருக்கும் போதெல்லாம் அவனை பார்த்துக்கோ..!”
அப்போது அவர் முகம் தெளிவாயிருந்த்தைப் போல்த்தான் எனக்குத் தோன்றியது..!  கையில் ரெண்டு வாழைப்பழம் எடுத்துக்கொடுத்தார்..
”சாப்பிடு கண்ணு. சிறுமலை மலைவாழைப்பழம்.. ஒடம்புக்கு ரொம்ப நல்லது....”
அதன்பிறகு பத்தாவது வரைக்கும் பாபுவும் நானும் ஒன்றாகவே படித்தோம்.. விளையாடினோம்.. பாபு அப்பா என்னையும் தன்மகனைப் போலத்தான் நடத்தினார்.. சனிக்கிழமை இரவுகளில் எங்கள் வீட்டில் உரிமையாய் பர்மிஷன் வாங்கி நிறைய சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறார்.. ஒரு முறை தியேட்டரில் கூட பாபுக்கு வலிப்பு வந்த்து.. அவர் பதட்டமடைந்தாலும் நான் இயல்பாக சமாளித்த்தாக அடுத்தநாள் காலையில் சொன்னார்...!
பக்கத்தில் இருப்பதால் வலிப்பு வரும்முன் அவனுடைய பிரத்தியோக அறிகுறிகள் எனக்கு அத்துபடி.. வகுப்பு ஆசிரியரிடம் உடனே சொல்லி தயார்படுத்துவேன்.. வலிப்பு வரும்போது அவனுக்கு தேவையாக இருக்கும் இறுக்கமான பிடிமானத்திற்க்கு ஒரு கம்பியை தயாராக வைத்திருப்பேன்… தண்ணீர் பாட்டில் உட்பட…
மாதம் இருமுறை நிகழும் வலிப்பு கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.. பத்தாவது முடிக்கும் போது பாபு முழுமையாக குணமடைந்திருந்தான்..
பத்தாவது முடிந்த கையோடு பாபுவின் குடும்பம் விழுப்புரத்திற்க்கு குடியேறியது..! மனது கனத்துப் போய் வெறும் முகவரியை பறிமாறிக் கொண்டு பிரிந்தோம்.. பாபுவின் அப்பா என் தலையில் கைவைத்துக் கொண்டு
”கண்ணு.. நல்லா படிப்பா.. அடிக்கடி லெட்டர் போடு.. பாபுவும் உனக்கு லெட்டர் போடுவான்..” சொல்லிய போது அவருக்கு கண் கலங்கியிருக்க வேண்டும்..!
பாபுவுடனான நட்புறவு பனிரெண்டாம் வகுப்பு முடியும் வரை  கடித் தொடர்பில் தொடர்ந்து கொண்டிருந்த்து..!
பாபு எப்போதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் வாழைப்பழம் சகிதமாய் வீட்டுக்கு வந்துவிட்டு சாயங்காலம் திரும்புவான்..  ஒரு தடவை பாபுவின் அப்பாவும் கூட வந்திருந்தார்….
”நல்லா இருக்கியா கண்ணு…?” அவரது ட்ரேட் மார்க் ”கண்ணு” வை நான் கடைசியாக அன்றுதான் கேட்டேன்..! அது கொஞ்சநாள்… அவர்கள் அங்கிருந்து காட்பாடிக்கு குடியேறியதும் தொடர்பற்றுப் போன எங்கள் நட்பு கால வெள்ளத்தில் தொலைந்தும் போனது…!

இன்று சென்னையில் சாயங்கால மழைச்சாரலுக்கு டீ சாப்பிட ஓதுங்கிய போது பாபுவை சந்தித்தேன்… ஆள் மாறியிருந்தான்.. கன்னங்கள் தடித்து, பிரெஞ்ச் தாடி வைத்திருந்தான்.. லேசான தொப்பை மெல்ல எல்லை கடந்திருந்த்து.. பக்கத்தில் நின்றிருந்த அவன் மனைவிக்கு மேடிட்ட வயிறு…. ஏழாவது மாதமாக இருக்கலாம்.. இயல்பான அடையாளத் தடுமாற்றத்திற்க்குப் பிறகு இருவருமே புரிந்து கைகுலுக்கிக் கொண்டோம்..
”மாப்ளே.. எப்படிடா இருக்கே..? ஆளே மாறிட்டீயே..?” பாபுதான் முதலில் கேட்டான்.. பழகியது வரை பேர் சொல்லியே அழைத்தவன் ”மாப்ளே.. என விளித்தது… மகிழ்ச்சியாகவே இருந்த்து..! என்னால்தான் ”மாப்ளை” வழக்குக்கு அவசரமாக மாறமுடியவில்லை..
பரஸ்பரம் விசாரிப்புகள் வேலை குறித்தெல்லாம் பேசிக் கொண்டோம்.. பாபு முகத்தில் புன்னகை குறையவேயில்லை..! நான் தொடர்ந்தேன்..
”அப்பா எப்படிடா இருக்காரு..?”
”அப்பா செத்து ஒரு வருஷம் ஆயிடுச்சு மாப்ளே… நீங்கல்லாம் எங்க இருக்கீங்கன்னே தெரியல மாப்ள..அதான் தகவல் சொல்ல முடியல..” அவனது குரல் கம்மியது…
”போடாங்க… நாங்க முப்பது வருஷமா அதே வீடலதான்டா இருக்கோம்.. காரணம் சொல்றான் பாரு..” காலம் கொஞ்சம் உணர்வுகளை மழுங்கடித்திருந்தலும் அவர் இப்போது இல்லை என்கிற எண்ணம் மனதுக்குள் எதோ செய்தது.. மெல்ல என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்..
”எப்படிடா இறந்தாரு..? என்ன ஆச்சு..?”
”வலிப்பு வந்துடுச்சு மாப்ளே… ரெண்டு வருஷமாவே அவருக்கு இருந்துச்சு…. ”
”நீங்க யாரும் கவனிக்கலயா..?”
”அன்னைக்கு நாங்க யாரும் வீட்ல இல்ல மாப்ளே... கோயிலுக்கு போயிருந்தோம்… ரொம்ப தீவிரமாகி.. வாயில நுரையெல்லாம் வந்து… நாங்க  வீட்டுக்கு வந்து சேர்றதுக்கு முன்னாடியே………”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக