சனி, 20 ஜூலை, 2013

பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு கவிதைகள்


சார்லஸ் புக்கோவ்ஸ்கி

அவர்கள், அவர்கள் எல்வோரும் அறிவார்கள்
பாரிஸ் நகரின் நடைபாதை ஓவியர்களைக் கேள்
உறங்கும் நாய் மீதிருக்கும் சூரிய ஒளியைக் கேள்
முன்று பன்றிகளைக் கேள்
பேப்பர் விற்கும் பையனைக் கேள்
டோனிஜெட்டின் இசையிடம் கேள்
பார்பரிடம் கேள்
கொலைகாரனைக் கேள்
சுவர் மீது சாய்ந்திருக்கும் மனிதனைக் கேள்
கேபினெட்டுகள் செய்பவனிடம் கேள்
பிரச்சாரகனிடம் கேள்
ஜேப்படிக்காரனை அல்லது அடகு வட்டிக்காரனை
கண்ணாடி ஊதுபவனை அல்லது உரம் விற்பவனை
அல்லது பல் வைத்தியனைக் கேள்.
புரட்சிக்காரனைக் கேள்
சிங்கத்தின் வாயில் தலையை நுழைக்கும் மனிதனைக் கேள்
அடுத்த அணுகுண்டை வீசப்போகும் மனிதனைக் கேள்
தன்னைக் கிறிஸ்து என்று நினைத்திருக்கும் மனிதனைக் கேள்
இரவில் வீடு திரும்பும் நீலப்பறவையைக் கேள்
கதவிடுக்கில் பார்ப்பவனிடம் கேள்
புற்று நோயில் இறக்கும் மனிதனைக் கேள்
ஒற்றைக் காலுடைய மனிதனைக் கேள்
பார்வையில்லாதவனிடம் கேள்
மழலை பேசும் மனிதனைக் கேள்
அபின் உண்பவனைக் கேள்
நடுங்கும் அறுவை மருத்துவரைக் கேள்
உன் காலடியில் மிதிபடும் இலைகளைக் கேள்
கற்பழிப்பவனைக் கேள்
ட்ராம் வண்டி ஓட்டுபவனை அல்லது
தன் தோட்டத்தில் களைபிடுங்கும் கிழவனைக் கேள்
ரத்தம் உறுஞ்சும் அட்டையைக் கேள்
ஈக்களைப் பயிற்றுவிப்பவனைக் கேள்
நெருப்பைத் தின்பவனைக் கேள்
நீ சந்திக்கும் மிகத்துயரமான மனிதனை
அவனின் மிகத்துயரமான நிமிஷத்தில் கேள்
ஜுடோ பயிற்சியாளனைக் கேள்
யானைகள் மீது செல்பவனைக் கேள்
ஒரு குஷ்டரோகியை, ஒரு ஆயுள் கைதியை,
பாய்ந்து தாக்குபவனைக் கேள்
ஒரு சரித்திரப் பேராசிரியரைக் கேள்
கைவிரல் நகங்களை என்றும் சுத்தம் செய்யாத
மனிதனைக் கேள்
ஒரு கோமாளியைக் கேள்,
அல்லது ஒரு நாளின் துவக்கத்தில் சந்திக்கும்
முதல் முகத்தைக் கேள்
உன் தந்தையைக் கேள்
உன் மகனைக் கேள் அவனின் எதிர்கால மகனைக் கேள்
என்னைக் கேள்
காகிதப் பையில் கிடக்கும் எரிந்துபோன பல்பைக் கேள்
சபலப் பட்டவனை, சாபமிடப்பட்டவனை,
முட்டாளை, அறிஞனை, அடிமைகளை விற்பவனைக் கேள்
கோயில்கள் கட்டுபவனைக் கேள்
காலணிகளே என்றும் அணிந்திராத மனிதர்களைக் கேள்
யேசுவைக் கேள்
நிலாவைக் கேள்
ஒதுக்கிடத்து நிழல்களைக் கேள்
அந்துப் பூச்சியை, துறவியை, பைத்தியக்காரனை
நியூயார்க்கர் பத்திரிகைக்கு
கேலிச்சித்திரங்கள் வரையும் மனிதனைக் கேள்
தங்க மீனைக் கேள்
கால் தாளத்திற்கு நாட்டியமாடும் பெரணிச் செடியைக் கேள்
இந்திய தேசப்படத்தைக் கேள்
ஒரு கருணை முகத்தைக் கேள்
உன் படுக்கைக்கு அடியில் ஒளிந்திருக்கும் மனிதனைக் கேள்
இந்த உலகில் நீ அதிகம் வெறுக்கும் மனிதனைக் கேள்
டிலன் தாமஸுடன் மது அருந்திய மனிதனைக் கேள்
ஜாக் ஷார்க்கியின் கையுறைகளுக்கு
லேஸ் தைத்த மனிதனைக் கேள்
சோக முகத்துடன் காபி அருந்துபவனைக் கேள்
குழாய் ரிப்பேர்க்காரனைக் கேள்
ஒவ்வொரு இரவும் நெருப்புக் கோழிகளை
கனவில் காணும் மனிதனைக் கேள்
விநோதக் காட்சிக்கு டிக்கட் சேகரிப்பவனைக் கேள்
கள்ள நோட்டுக்காரனைக் கேள்
வீதிச் சந்தில் செய்தித்தாள் மீது உறங்கும் மனிதனைக் கேள்
நாடுகளை, கிரகங்களை ஜெயிப்பவர்களைக் கேள்
இப்போதுதான்
ஒரு விரலை வெட்டிக்கொண்ட மனிதனைக் கேள்
பைபிளில் ஒரு புத்தக அடையாளத்தைக் கேள்
தொலைபேசி மணி அடிக்கும்போது
சொட்டுச் சொட்டாய் தொட்டியிலிருந்து ஒழுகும்
நீரைக் கேள்
பொய்ச் சத்தியத்தைக் கேள்
ஆழ்ந்த நீல நிற பெய்ன்டைக் கேள்
பாராசூட்டிலிருந்து குதிப்பவனைக் கேள்
அழகிய, நீந்தும் தெய்வீகக் கண்ணைக் கேள்
விலைமிகுந்த அகாடெமியில் இறுக்கமான கால்சட்டை
அணிந்த பையனைக் கேள்
குளிக்கும் தொட்டியில் வழுக்கியவனைக் கேள்
சுறா மீனால் மெல்லப்பட்டவனைக் கேள்
ஜோடி சேராத கையுறைகளை என்னிடம் விற்றவனைக் கேள்
இவர்கள் யாவரையும்
நான் சொல்லாமல் விட்டவர்களையும் கேள்
நெருப்பை, நெருப்பை, நெருப்பைக் கேள்–
பொய்யர்களைக் கூடக் கேள்
மழை பெய்கிறதோ இல்லையோ,
பனி விழுந்திருக்கிறதோ இல்லையோ
உனக்குப் பிடித்த
எந்த நாளிலாவது எந்த நேரத்திலும்
யாரை வேண்டுமானாலும் கேள்
வெப்பத்தில் வெது வெதுக்கும்
மஞ்சள் நிற வெராண்டாவில் நீ
கால் வைக்கும் போது
இதைக் கேள் அதைக் கேள்
தலைமயிரில் பறவை எச்சம் படிந்த மனிதனைக் கேள்
மிருகங்களைத் துன்புறுத்துபவனைக் கேள்
ஸ்பெயினில் பல காளைச் சண்டைகள் பார்த்த
மனிதனைக் கேள்
புதிய கடிலாக் கார்களின் சொந்தக்காரர்களைக் கேள்
பிரபலமானவர்களைக் கேள்
பயந்தவர்களைக் கேள்
தோல் முற்றிலும் வெளுத்தவர்களைக் கேள்
வீட்டுச் சொந்தக்காரர்களையும், அரசியல் மேதையையும்
முழுப்பணத்திற்கு சீட்டாடுபவர்களையும் கேள்
முழுப்போலிகளைக் கேள்
கொல்லும் அடியாட்களைக் கேள்
வழுக்கை மனிதர்களை, தடித்த மனிதர்களை
உயரமான மனிதர்களை, குள்ளமான மனிதர்களைக் கேள்
பாலுணர்வு குறைவான,
பாலுணர்வு மிதமிஞ்சிய மனிதர்களைக் கேள்
செய்தித் தாள்களில் எல்லா ஆசிரியர் பக்கங்களையும்
படிக்கும் மனிதர்களைக் கேள்
ரோஜாக்களை வளர்க்கும் மனிதர்களைக் கேள்
வலியே உணராத மனிதர்களைக் கேள்
செத்துக் கொண்டிருப்பவர்களைக் கேள்
புல் செதுக்குபவர்களை,
கால்பந்தாட்ட உதவியாளர்களைக் கேள்
இவர்கள் யாரையாவது அல்லது எல்லோரையும்
கேள் கேள் கேள் அவர்கள் எல்லோரும்
சொல்வார்கள் உன்னிடம்:
மாடிக் கைப்பிடிச் சுவரில் உறுமும் பெண்டாட்டியை
ஒரு மனிதன் சகிப்பது அவனுக்கு அப்பாற்பட்டதென்று.

பிரைமோ லெவி-முடிக்கப்படாத வேலை

ஐயா, அடுத்த மாத ஆரம்பத்திலிருந்து
தயவு செய்து என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள்,
மேலும், தேவைப்பட்டால், என் இடத்திற்கு ஒரு மாற்று ஆள்பாருங்கள்.
சோம்பல் காரணமாகவோ, நடைமுறைச் சிக்கல்களாலோ
நான் நிறைய முடிக்கப்படாத வேலைகளை விட்டுக் கொண்டிருக்கிறேன்
நான் எவரிடமோ எதையோ சொல்லியிருக்க வேண்டும்,
ஆனால் என்னவென்றோ, யாரிடமென்றோ இனியும் அறியேன்.
நான் மறந்து விட்டேன்.
நான எதையோ எடுத்துக் கொடுத்திருக்கக் கூடும்தான்.
ஒரு அறிவார்ந்த சொல்,
ஒரு பரிசுப் பொருள்,
ஒரு முத்தம்.
ஒரு நாளைக்கு அடுத்து மறுநாளைக்கு தள்ளிப் போட்டு விட்டேன்.
மன்னியுங்கள் என்னை.
மிச்சம் விடப்பட்டிருக்கும் அந்த கொஞ்ச காலத்தில்
அதை நான் முடித்து விடுகிறேன்.
நான் அஞ்சுகிறேன்,
எனது முக்கிய வாடிக்கையாளர்களைப் புறக்கணித்து விட்டேன் என.
நான் விஜயம் செய்திருக்க வேண்டும்
வெகு தூரத்து நகரங்கள், தீவுகள், யாருமற்ற நிலங்கள்.
நீங்கள் திட்ட வரையறையிலிருந்து அவற்றை அடித்து நீக்கிவிட வேண்டும்
அல்லது எனக்கு அடுத்து வருபவரின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்.
நான் மரங்கள் நட்டிருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை,
எனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்,
அது ஒரு வேளை அழகற்றதாக இருக்கலாம் ஆனால் திட்டத்திலிருந்து விலகியதாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பான ஐயா,
நான் மனதில் வைத்திருந்தேன்
எண்ணிக்கையற்ற ரகசியங்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்குமென்ற ஒரு அற்புதப் புத்தகம்,
அது வலியைக் குறைத்திருக்கும், பயத்தை மட்டுப்படுத்தியிருக்கும்,
சந்தேகங்களைக் கரைத்திருக்கும்,
பல மனிதருக்கு கண்ணீர் மற்றும் சிரிப்பின் பரிசுகளைத் தந்திருக்கும்.
அதன் கோட்டுருவான திட்டத்தினை
என் மேஜை இழுப்பறையில் நீங்கள் பார்க்கலாம்
முடிக்கப்படாத வேலையின் பின்பக்கத்தில்.
அதை முடித்துப் பார்க்க எனக்கு சமயம் அமையவில்லை. படுமோசம்.
அது ஒரு மிக அடிப்படையான விஷயமாக ஆகியிருக்கும்



ஆக்டேவியோ பாஸின் கவிதைகள்

கன்னியாகுமரிக்கு அருகில்

ஒரு லேண்ட் ரோவர்ஜீப் வெள்ளம் நிரம்பிய வயல்களுக்கு மத்தியில் கிடக்கிறது. புதிய பிறப்பெடுத்த வானத்தின் கீழே கழுத்து வரை நீருக்குள் மரங்கள். வெளுத்த, ரத்தநிற பறவைகள் கொக்குகள், நரைகள், நிஷ்களங்கமாய் இந்த நாடகத்தன்மையான பச்சைகளுக்கிடையில், மெலிந்த புத்தியற்ற எருமைகள் நிஜமாகவே தூங்குவது போல் நீராம்பல்களைத் தின்கின்றன. பிச்சைக்காரக் குரங்குகளின் கூட்டம் ஒன்று. ஒரு கூர்ந்த பாறையின் மீது அசாத்திய சமனில் நிற்கிறது மஞ்சள் நிற ஆடு அதன் மீது ஒரு அண்டங் காக்கை கண்ணுக்குப் புலப்படா ஆனால் பீதி இருப்பு எப்போதும், சிலந்தியல்ல, நாகமல்ல பெயரற்றது பிரபஞ்ச அசிரத்தை. அதில் கீழ்மை வடிவமும் கடவுள் போன்றதும் வாழ்ந்து ஒன்றை ஒன்று மறுதளிக்கும்: வெற்றுக்கூட்டம் புவி வெளியின் நிலைப்பின் உள்ளே இரண்டு நாடித்துடிப்பு சூரியன் சந்திரனின் கூடுதல். இருட்டாகிறது. புஷ்பராகத்தின் ஒற்றை வீச்சொளியாய் மீன் கொத்தி. கார்பன் மிஞ்சுகிறது. மூழ்கிய நிலக்காட்சி கரைகிறது. தான் தசையற்ற ஒரு ஆன்மாவா அன்றி திரியும் உடலா? தடங்கிப் போன லேண்ட் ரோவரும் கரைகிறது அவ்வாறே. ஸ்பரிசம்எனது கைகள் உனது உயிரின் திரைகளைத் திறந்து உடுத்துகிறது உன்னை. இன்னும் கூடுதலாகும் நிர்வாணத்தில் உனது உடல்களின் உடல்களைக் களைந்து எனது கைள் கண்டுபிடிக்கின்றன உனது உடலுக்கென வேறொரு உடலை. காதற்பாடல் இந்த திராட்சைக் கொடியின் பிணைந்த விரல்களுக்கு ஊடே ஊற்றும் நீரைவிடக் கண்ணாடியாய் உன்னில் தொடங்கி உன்னில் முடியும் ஒரு பாலத்தை நீட்சிக்கிறது என் எண்ணம் உன்னைப் பார் என் மனதின் மையப்புள்ளியில் நிலைபெற்று நீ வாழும் உனது உடலை விட நிஜமாய் நீ ஒரு தீவின் மீது வாழப் பிறந்திருக்கிறாய். நீரின் திறவு கோல் ரிஷிகேஷிற்குப் பிறகு கங்கை இன்னும் பசுமை. கண்ணாடித் தொடுவானம் உடைகிறது மலை முகடுகளில். நாம் நடக்கிறோம் படிமங்களின் மீது. மேலும் கீழும் அமைதியின் பெரு வெள்ளம். நீல வெளிகளில் வெள்ளைப் பாறைகள் கறுப்பு மேகங்கள் நீ சொன்னாய்: இந்த கிழக்கு தேசம் நீரால் நிறைந்திருக்கிறது அன்றிரவு நான் எனது கைகளை அலம்பினேன் உனது முலைகளில்.


இங்கே

இந்தத் தெருவின் வழியாகும் எனது காலடிகள் எதிரொலிக்கின்றன மற்றொரு தெருவில் அதில் நான் கேட்கிறேன் எனது காலடிகளை இந்தத் தெருவினைக் கடந்து செல்கையில் இதில் பனிப்புகை மட்டுமே நிஜமானது புனித அத்திமரம்*இந்தக் காற்று பழத்திருடர்கள் (குரங்குகள், பறவைகள்) விதைகளைப் பரப்புகின்றனர் ஒரு பெரிய மரத்தின் மத்தியில். பசுமையாய், ரீங்கரித்தபடி, நிரம்பி வழியும் பெருங்கோப்பை சூரியன்கள் அதிலிருந்து அருந்தும் காற்றின் ஒரு குடல். விதைகள் வெடித்துத் திறந்து, செடி பற்றிக் கொள்கிறது வெறுமையின் மீது, தனது மயக்கத் தலைசுற்றலை சுற்றுகிறது. அதில் அது நிமிர்ந்து வளர்கிறது அசைந்தாடி பெருக்குகிறது. ஆண்டாண்டாய் அது வாழ்கிறது ஒரு நேர்க்கோட்டில் அதன் வீழ்ச்சி நீரின் பாய்ச்சல் பாயும் போதே உறைந்து விடுகிறது: காலம் கல்லான மாற்றம். அது தன் வழியை உணர்கிறது, நீண்ட வேர்களை பின்னும் கிளைகளை வீசுகிறது கருப்பு பின்னிய கோர்வையின் பீச்சுக்குழல்கள் தூண்களைத் துளையிடுகிறது ஈரமான காலரிகளைத் தோண்டுகிறது அவற்றில் எதிரொலி சீறி ஒளிர்ந்து இறக்கிறது. தாமிரத்தன்மையாய் அதிர்வு ஒவ்வொரு நாளும் கார்பனாகப் பொடியும் சூரியனின் நிச்சலனத்தில் தீர்வுறுகிறது. போர்க்கருவிகள், கட்டுத்தளம், வளையங்கள் தரை தட்டிய சிறு கப்பலின் கொடி மரம், பாய்மரக் கயிறுகளின் சிக்குப் பின்னல். திரியும் வேர்கள் தொற்றித் தடுமாறி ஒன்றாய்ச் சுருள்கின்றன. அது கைகள் பலவற்றின் புதர் அவை ஓர் உடம்பினைத் தேடுகின்றன, பூமியை அல்ல: அவை ஓர் அணைப்பினைப் பின்னுகின்றன. மரம் உயிருடன் சுவரடைக்கப்படுகிறது. அதன் அடி மரம் உளுத்துப் போக ஒரு நூறு வருஷங்கள் பிடிக்கின்றன அதன் உச்சி: வழுக்கை மண்டை, மானின் உடைந்த கொம்புகள், தோல் இலைகளின் அங்கிக்கு அடியில் இசைக்கும் அலை சுருதி பேதம் செய்கிறது இளஞ்சிவப்பு-மஞ்சள்காவி-பச்சை, தன் முடிச்சுகளிலேயே சிக்கிக்கொண்டு இரண்டாயிரம் வருஷங்கள், அந்த அத்தி மரம் தவழ்கிறது, உயர்ந்து வளர்கிறது, தன் மூச்சை தானே நெரிக்கிறது. *இங்கு குறிப்பிடப்படும் அத்தி மரம், ஆல மரத்தின் வம்சத்தைச் சார்ந்தது. பிப்பால் என்று இந்தியாவின் வடக்கு பிரதேசங்களில் அழைக்கப்படுகிறது. தாவரவியல் பெயர் Ficus Religiosus. புத்தமதத்தினர் இதனை புனித மரம் என்று கருதுகின்றனர். இதன் அடியிலேயே கௌதமன் போதம் அடைந்து புத்தன் ஆனது. கண்ணன் கோபிகாஸ்த்ரீகளின் ஆடைகளை, யமுனை நதிக்கரையில் இம்மரத்தின் மேல் எடுத்து வைத்து விளையாடினான் என்றும் கூறப்படுகிறது
.
மெக்ஸிகோவின் பள்ளத்தாக்கு

ஒளி ஊடுருவும் தனது உடலைத் திறக்கிறது பகல். கண்ணுக்குப் புலப்படாத சுத்தியல்களுடன் என்னைத் தாக்குகிறது சூரியக்கல்லுடன் கட்டப்பட்ட ஒளி. ஒரு அதிர்வுக்கும் அடுத்ததற்கும் நான் ஒரு நிறுத்தம் மட்டுமே: கூர்ந்த, உயிர்ப் புள்ளி. அமைதியாய் நிலை பெற்றிருக்கிறது ஒன்றை ஒன்று புறக்கணிப்பு செய்யும் இரு பார்வைகள் சந்திக்கும் புள்ளியில்- எனக்குள் சந்திக்கின்றன அவை? தூய வெளியும், போர்க்களமும் நான். என் உடல் வழியாக, என் வேறு உடலைப் பார்க்கிறேன். கல் பளிச்சிடுகிறது. சூரியன் என் கண்களைப் பிளந்தெடுக்கிறது. என் வெற்றுக் கண்குழிகளில் இரண்டு விண்மீன்கள் தம் சிவந்த சிறகுகளை மிருதுப்படுத்துகின்றன. சுழல் சிறகுகளின் அற்புதம் மற்றும் ஆக்ரோஷமான மூக்கு. இப்பொழுது பாடுகின்றன என் கண்கள். பாடலுக்குள் கூர்ந்து பார்த்து நெருப்புக்குள் வீழ்த்திக்கொள்.

நான் நகரத்தைப் பற்றிப் பேசுகிறேன்

இன்று ஒரு புதுமை, நாளை பழமையிலிருந்து வந்த சிதைமானம், புதைபட்டு ஒவ்வொரு நாளும் மீட்டுயிர்ப்பு பெற்று, வாழ்ந்தது தெருக்களில், பிளாசாக்களில், பேருந்துகளில், டாக்சிகளில், திரைப்பட அரங்குகளில், நாடக அரங்குகளில், மதுபான விடுதிகளில், ஹோட்டல்களில், புறாக்கூடுகளில் மற்றும் சேமநிலவறைகளில், மூன்று கஜத்திற்கு மூன்று கஜமே உள்ள அறையில் பொருந்தும் அந்த மாபெரும் நகரம், மற்றும் ஒரு பால்வெளி மண்டலத்தைப் போல எல்லையற்றதாய், நம் அனைவரையும் கனவு காணும் நகரம், நாம் அனைவரும் கட்டி, பிரித்துக் கட்டி, மறுகட்டுமானம் செய்கிறோம் கனவு கண்டவாறு, நாம் அனைவரும் கனவு காணும் நகரம், நாம் கனவு காண்கையில் ஓய்வற்ற மாறுதலடையும் நகரம், ஒவ்வொரு நூறுவருடத்திற்கும் ஒரு முறை விழித்தெழுந்து ஒரு வார்த்தையின் நிலையாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறது பிறகு திரும்பித் தூங்கச் செல்கிறது, என்னருகில் உறங்கும் பெண்ணின் விழிமூடிகளிலிருந்து முளைவிடும் அந்த நகரம், மாற்றமடைகிறது, தன் நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளுடன், அதன் வரலாறுகள் மற்றும் பழங்கதைகளுடன், எண்ணற்ற கண்களால் செய்யப்பட்ட ஒரு நீர்பீச்சும் ஃபௌன்ட்டனாய், ஒவ்வொரு கண்ணும் அதே நிலக்காட்சியை பிரதிபலிக்கிறது, காலத்தில் உறைந்து போய், பள்ளிகள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு முன்னால், அரிச்சுவடிகள் மற்றும் எண்களின் முன்னால், பலிபீடம் மற்றும் சட்டத்தின் முன்னால் நான்கு நதிகளாய் இருக்கும் ஒரு நதி, பழத்தோட்டம், மரம், ஆண் மற்றும் பெண், காற்றினால் உடையுடுத்தி– திரும்பிச் செல்ல, மீண்டும் மண்ணுக்குத் திரும்பிச் செல்ல, அந்த ஒளியில் நீராடுவதற்கு, அந்த ஆராதனை விளக்குகளின் கீழ் உறங்குவதற்கு, நீரோட்டம் இழுத்துச் செல்லும் கனலும் மேப்பிள் மர இலையைப் போல் காலத்தின் நீர்களின் மேல் மிதக்க, திரும்பிச் செல்ல–நாம் உறங்குகிறோமா அல்லது விழித்திருக்கிறோமா?–நாம் இதை விட அதிகமில்லை, நாள் உதிக்கிறது, முன் நேரம், நாம் நகரத்தில் இருக்கிறோம், வேறொரு நகரத்தில் வீழ்வதற்கன்றி நாம் கிளம்ப முடியாது, வேறு ஆனால் ஒன்றுபோல், நான் பிரம்மாண்ட நகரத்தைப் பற்றிப் பேசுகிறேன், தினசரி யதார்த்தம் இரண்டு வார்த்தைகளாக உருவாக்குவது  மற்றவை ஒவ்வொன்றிலுமே நாமிலிருந்து வெட்டப்பட்ட ஒரு நான் இருக்கிறது, திசையற்றுத் திரியும் ஒரு நான், நான் இறந்தவர்களால் கட்டப்பட்ட நகரத்தைப் பற்றிப் பேசுகிறேன், அவர்களின் இரக்கமற்ற ஆவிகளால் வாழப்பட்டு, அவற்றின் கொடுங்கோன்மையான ஞாபகத்தினால் கோலோச் சப்பட்டு, நான் வேறு எவரிடமும் பேசாதிருக்கையில் நான் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நகரம், இந்த தூக்கம்வராத வார்த்தைக ளை எனக்கு எழுதச் சொல்லிப் பணிக்கும் நகரம், நான் கோபுரங்களைப் பற்றி, பாலங்கள், புழைவழிகள், விமானத் தளங்கள், அதிசயங்கள் மற்றும் அழிவுகள், அரூப அரசாங்கமும் அதன் ஸ்தூலமான போலீஸூம், பள்ளி ஆசிரியர்கள், சிறைக்காவலர்கள், மதப்பிரச்சாரகர்கள், சகலமும் கொண்ட கடைகள், அங்கே எல்லாவற்றையும் நாம் செலவழித்துவிடுகிறோம், மேலும் அது சகலமும் புகையாய் மாறுகிறது, பழங்களின் பிரமிடுகளுடன் அந்த மார்க்கெட்டுகள், பருவ காலங்களின் மாற்றம், கொக்கிகளிலிருந்து தொங்கிக் கொண்டி ருக்கும் பன்றி இறைச்சியின் பக்கங்கள், வாசனைத் திரவியங் களின் மலைகள், பாட்டில்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட உணவுகளின் கோபுரங்கள், எல்லா சுவைகளும் நிறங்களும், எல்லா வாசனைகள் மற்றும் அந்த எல்லாப் பொருள்களும், குரல்களின் அலைகள்–நீர், உலோகம், மரம், களிமண்–கூட்டப் பெருக்கம் காலத்தின் அளவே பழமையான சச்சரவுகளும் பாராதிருத்தல்களும், நான் கல் மற்றும் பளிங்குக் கட்டிடங்கள் பற்றிப் பேசுகிறேன், சிமெண்ட்டினால் ஆனது, கண்ணாடி மற்றும் எஃகு, நடைவழிகள் மற்றும் கதவுவழிகளிலிருக்கும் மனிதர்கள், தெர்மாமீட்டரில் உள்ள பாதரசம் போல் உயர்ந்து வீழும் எலிவேட்டர்கள், வங்கிகள் மற்றும் இயக்குநர்களின் குழுக்கள், உற்பத்திச் சாலைகள் மற்றும் அவற்றின் மேலாளர்கள், பணியாட்கள் மற்றும் அவர்களின் தகாப்புணர்ச்சிசார் யந்திரங்களும், விழைவு மற்றும் சலிப்பு போல நீளமான தெருக்களின் வழியேயான வேசை வியாபாரத்தின் காலமற்ற அணிவகுப்பு பற்றி பேசுகிறேன், கார்கள், நம் பதற்றங்களின் கண்ணாடிகள், வியாபாரம், பேருணர்ச்சி (ஏன்? எதை நோக்கி? எதற்கான?) போன்றவற்றின் வந்து போதல்கள், எப்பொழுதுமே நிறைந்து போயிருக்கும் மருத்துவமனைகள் பற்றி, மேலும் அங்கே நாம் எப்பபோதும் தனிமையில் சாகிறோம், நான் சில தேவாலயங்களின் குறைவெளிச்சம் பற்றியும் அவற்றின் பலிபீடங்களில் மினுக்கி எரியும் மெழுகுவர்த்திகள் பற்றியும் பேசுகிறேன், புனிதர்களுடனும் கன்னிகளுடனும் உணர்ச்சிமிக்க, கைவிடும் மொழியுடன் ஆறுதலற்றவர்களின் தயக்கமான குரல்கள், ஒரு வளையும் மேஜையில் விளிம்பு உடைந்த தட்டுகளில் ஒரு பக்கவாட்டுப் பார்வை கொண்ட வெளிச்சத்தில் இரவு உணவு பற்றிப் பேசுகிறேன், தம் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் திறந்த வெளிகளில் கூடாரமிடும் கள்ளமிலா ஆதிவாசிகள் பற்றி, அவர்களின் விலங்குகள் மற்றும் ஆவிகள், சாக்கடையில் உள்ள எலிகள், ஒயர்களில் கூடு வைக்கும் வீரமிகு குருவிகள், கட்டிட உச்சிகளின் சிற்பப் பிதுக்கங்களிலும், தியாகிகளான மரங்களில், சிந்தனை செய்யும் பூனைகள், நிலவின் வெளிச்சத்தில் அவற்றின் காமுக நாவல்கள், கூரைஉச்சிகளின் குரூரப் பெண் கடவுள்கள், நமது ஃபிரான்ஸிஸ்கன்கள் மற்றும் பிக்குகளாய் இருக்கும் தெரு நாய்கள், சூர்யனின் எலும்புகளை பிறாண்டி எடுக்கும் நாய்கள், துறவிகள் மற்றும் தன்வினையாளும் சகோரத்துவம், சட்டத்தை அமுல்படுத்துபவர்களின் ரகசிய சதித்திட்டங்கள் பற்றி மற்றும் திருடர் கூட்டங்கள் பற்றி, சமத்துவவாதிகளின் சதிகள் மற்றும் குற்றங்களின் நண்பர்களின் அமைப்பு, தற்கொலையாளர்களின் கிளப், ஜேக் த ரிப்பர், மக்கள் நண்பர்கள் பற்றி, கில்லட்டின்களை சானை பிடிப்பவர்கள், சீசர், மானுட இனத்தின் பெருமகிழ்வு, நான் பக்கவாதம் கொண்ட சேரியைப் பற்றிப் பேசுகிறேன்,  வெடிப்புவிட்ட சுவர், வறண்ட நீர்ஃபௌன்டன், கிறுக்கல் எழுத்துக்களால் நிறைந்த சிலை, நான் மலையளவிலிருக்கும் குப்பை மேடுகள் பற்றிப் பேசுகிறேன், புகை-பனி கலப்பின் வழியாக வடிகட்டி வரும் சூர்யஒளியின் மனசஞ்சலத்தை. . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக