வெள்ளி, 19 ஜூலை, 2013

காலச்சுமை -வா.மு.கோமு



பண்புடன் தளத்தில் வெளிவந்த சிறுகதை :காலச்சுமை


- சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா

- வா.மு.கோமு

எப்போ ஆரம்பிச்சுது என்பது பற்றியான பழைய ஏட்டுச்சுவடிகள் காணாமல் போய்விட்ட படியால், ஆதாம் ஏவாள் ஆப்பிளை கடிச்சுத் தின்னுட்டே, பாம்பு வடிவில் இருந்த சாத்தான் தன்னோட மரத்துல இருக்கிற ஜெர்ரி பழத்தையும் சாப்பிடச் சொல்லி கேட்க, ஏவாள் சரியென்று ஜெர்ரிப் பழத்தையும் சாப்பிட்டு விட, சாத்தான் எஸ்கேப் ஆகிவிட்ட நாளுக்கு பின் வந்த மார்கழி மாதத்தில் துவக்கப்பட்டதாக கருதப்படுகிற இந்த இதழ், பின் வந்த மாதங்களில் மாசா மாசம் காலம் தவறாமல் மிகச் சரியாக தேதி ஒன்றில், தற்போது உலகம் முச்சூடுமே, செவ்வாய் கிரகம் ஒன்னே ஒன்னு தான் பாக்கி என்கிற நிலையில், தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் கொஞ்சம் பேர்களிடம் மட்டுமே, பத்திகள், கதைகள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய சர்ச்சைகள் இப்படி மாத்தி மாத்தி, அந்தக் கொஞ்சம் பேர் மட்டும் சாவுறமுட்டும் எழுதி எழுதி எழுத்தார்வத்தை தீர்த்துக் கொள்ளும் பலவர்ண முக ஆளுமை கூட்டிக் கொண்ட இதழ் காலச்சுமை.


தோழர் பெரியசுவாமி, சுள்ளிமேட்டு ராமசாமியின் வெளிவராத படைப்புகளை அவிங்களே மண்டியைப் போட்டு எழுதிட்டுப் போனாப்பிடி, தேர்ந்த எழுத்துப் பொறியாளர்களை வைத்து எழுதச் செய்து, இதுவரை வெளிவராத படைப்பு என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்து, தமிழில் பொறுக்கி எடுத்து படைப்பு என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்து, தமிழில் பொறுக்கி எடுத்து வெளியிடும் இதழ். தமிழகத்தின் மீலை முடுக்கிலெல்லாம் இருக்கும் கிறுக்கு வெள்ள (சாராயம்) கடைகளிலும், மற்றும் எரிபொருள் விற்பனை நிலையங்களிலும், மிகப்பெரிய திருத்தளங்களிலும், பியூட்டி பார்லர்களிலும், பைனான்ஸ் நிறுவனங்களிலும், சுங்கச் சாவடிகளிலும் என்று திரும்பின பக்கமெல்லாம் கிடைக்கும் ஒரே பயங்கரமான மாத இதழ் காலச்சுமை.

வாரக்கூலி, தினக்கூலி, ஆபிஸ்கூலி, பென்சன் கூலிக்கு செல்லும் இலக்கிய ஆர்வலர்கள் காலச்சுமை இதழை மாதம் மாதம் தங்களின் அடையாள அட்டையை கிறுக்குவெள்ளக் கடைகளில் காட்டு மூன்று ரூபாய் குறைவாக கொடுத்து இதழை வாங்கிச் சென்று இந்தோனியாவில் குண்டுகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த சமயம் இடிபாடுகளுக்கிடையே கிளம்பிய மார்க்மன் என்கிற புயல் எழுச்சிக்கவிஞர் பற்றியும், அயல் தேசத்தில் அனாயசமாக சிறுகதைகளை புரட்டிப்போட்டு தலைக்கீழாக எழுதிய சிக்கின் சிறுகதை ஒன்றையும், மாக்மால் தீவில் சமூகத் தொண்டாற்றி அரசியலில் ஈடுபட்ட சகோதரி இர்பினின் கள்ளக் காதலர்களின் திருட்டுத்தனங்கள் பற்றியும், இப்படியான அயல் தேச சமாச்சாரங்களை தாங்கிய தமிழ் இதழான காலச்சுமை படித்து அமைதியாகக் கிடக்கும் மூளைக்குள் தீயைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

வாசகர்களுக்கான திட்டமாக முதலில் எங்களிடம் நேரடியாக ஒரு வருட சந்தாவை எங்களது அலுவலகத்தில் கட்டுபவர்களுக்கு, எங்களிடம் கைவசமுள்ள காதுகுத்து நிபுணரைக்கொண்டு உங்களுக்கு எறும்பொன்று கடித்து வைத்தாற் போன்ற சின்ன வலியுடன் துவாரமிட்டு, தொங்கட்டான் மாட்டி அனுப்பி வைக்கின்றோம். கூடவே மொட்டையையும் அடித்து விட விருப்பமுள்ளவர்கள் முன்னூறு ரூபாய்க்கு எங்கள் நிறுவன வெளியீடுகள் சிலவற்றை வாங்கி, மண்டைக்கு சந்தனமும் பூசிச் செல்லுமாறு பணிக்கிறோம்.

காலச்சுமை பதிப்பகத்தின் வெளியீடுகளை தமிழகத்தில் உள்ளவர்கள் வாசித்துப் பயன்பெற விரும்பினால், பதிப்பக முகவரிக்கு எந்த எந்த புத்தகங்கள் தேவை என்கிற தகவலையும், உங்களது முழு முகவரியையும் அனுப்பினால் போதுமானது. எமது நிறுவனத்திலிருந்து உங்கள் முகவரிக்கு புத்தகக் கட்டோடு ஒரு ஆள் நேரடியாகவே வந்து சேருவார். அவர் தான் எங்கள் நிறுவனத்தின் தங்கமகன். அவரிடம் புத்தகத்திற்கான விலையையும், பயணச் செலவையும் தந்து அனுப்பி வைக்க வேண்டுகிறோம். இந்த .பி.பி முறையானது காலச்சுமை பதிப்பகத்தாரிடம் மட்டுமே. இந்த .பி.பி முறையால் புத்தகம் எவ்விதத்திலும் தவறிவிடும் வாய்ப்பு இல்லை. இதில் வாசகர்கள் சந்தேகம் கொண்டால் டபுள் .பி.பி முறையை உறுதியாக நம்பலாம். அதில் தங்கமகன்கள் இருவர் உங்கள் இல்லம் தேடி வந்து, நீங்க வெளியூர் சென்றிருந்தாலும் வரும் வரை வீட்டுத் திண்ணையில் காத்திருந்து கொடுத்து வருவார்கள்.

எங்களது சிறப்புத்திட்டதில் உங்கள் வீட்டின் பத்திரம், அல்லது நிலப்பத்திரம் அல்லது நகைகளை எங்களிடம் வைத்து, வருடம் வருடம் நாங்கள் வெளியிடும் வெளியீடுகளை முழுமையாக பார்சலாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் இதுவரை தமிழகத்தை சார்ந்த 3000 வாசகப் பெருமக்கள் இணைந்து, தங்களது சொத்துபத்துக்களை அளித்து, காலச்சுமை இதழை மாதம் தவறாமல் இலவசமாகப் பெற்று அறிவு வளர்ச்சியடைகிறார்கள். சொத்துபத்து இல்லாத அறிவுத் தேடல் விரும்பும் வாசகர்கள் தங்களது விரைகளில் ஒன்றை எங்களிடம் சமர்ப்பித்து திட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம். இத்திட்டத்திற்கான ஆள் பிடிப்புப் பணியில் இறங்குபவர் ஐந்து ஆட்களை இத்திட்டத்தில் இணைக்கும் பணியை செவ்வனே செய்து முடித்ததும், எங்களது செலவில் அவர் விரும்பும் வெளிநாட்டுக்கு ஒருவாரம் அனுப்பி வைக்கிறோம்.

காலச்சுமை 2008 வெளியீடுகள்

பதிமூன்று இரவுகளின் கதை (நாவல்)
கவிநி கமலா

நாவல் முழுவதும் ஒரு தனித்தீவில் நடைபெறுகிறது, வெளிநாட்டில் இப்படி ஒரு நாவல் வெளிவந்திருந்தால் நாவலாசிரியை தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டி நாடு விட்டு நாடு செல்ல வேண்டி இருந்திருக்கும். தமிழில் இந்த நிலை இதுவரை இல்லை. பின் நவீன பிரதிகளில் காணக்கிடைக்கும் உடல் சார்ந்த பொருட்கள் அவற்றின் பயன்பாடுகள் இந்தப்பிரதியில் கேலிக்கு உள்ளாக்கப்படுகின்றன. தனது பதிமூன்று கணவன்மார்களோடு தனித்தீவில் வசிக்கும் கமலா அவர்களை அடைந்த விதம் பற்றியும், அவர்களுடனான தமது பொழுது போக்குகள் பற்றியும் தேர்ந்த நாவலாசிரியை போன்று விவரித்துச் சொல்லும் .
முற்றிலும் தமிழுக்குப் புதிதாய் இருப்பதினால் நாம் சொக்கிப்போய் நாவலில் ஆழ்ந்து விடுகிறோம் . கவிஞியாக மட்டுமே அறியப்பட்ட கமலாவின் முதல் நாவல் என்பது படிப்போரை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கும் சங்கதி.

தனது கவிதைகளில் வாழ்வாதாரமான காமத்தை பேய் போல் எதிர்க்கொண்ட கமலா நவீன மனதின் அசலான பிரதிபலிப்பை தனது முதல் நாவலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
( முன்னுரையில் மு. ஹரிகிருஷ்ணன்)

புளியங்கா கவிதைகள்
ஜான் - ஜானி - ஜனார்த்தன்

கவிதை என்பது கண்டபடி எழுதுவது . கவிதைகள் வாசகனுக்காக எழுதப்படுவன அல்ல. வாசகனுக்கு எதற்காக கவிதைகள்? எனக்கேட்கும் ஜான் - ஜானி - ஜனார்த்தன். இம்மூவரின் ஏழாவது கவிதை தொகுப்பு புளியங்கா கவிதைகள். உடல் சார்ந்த கவிதைகளுக்காக
ஒரு தொகுப்பும் , கடல், கடல் வாழ் உயிரினங்களுக்காக தங்களது மூன்றாவது தொகுப்பும், வான் , வான் சார்ந்த நட்சத்திர கூட்டங்களுக்காக ஒரு தொகுப்பும் என பின் நவீன மூளைக்கட்டிகளை தங்களது மண்டையோட்டினுள் சிவப்பு நிறத்தில் ஆக்டோபஸ் வடிவத்தில் வடிவமைத்துக் கொண்டவர்கள் பழங்களின் வகைகளுக்காக ஆஸ்த்திரேலிய பழ வகையிலிருந்து ஜெர்மன் பழ வகைகள் வரை எழுதி விரித்து செல்லும் கவிதைகள் இந்த தொகுப்பில் நிறைந்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

மரமேஜை ஒன்றின் மீது பூசணிப்பழத்தை வைத்துக்கொண்டு மூவரும் இணைந்தும் , பின்னர் தனித்தனியாகவும் அவரவர் தாள்களில் பெண்களின் பின்புறங்களுக்கு இணையாக எழுதி வடிவமைக்கப்பட்ட கவிதைகள் தமிழின் ஆகச்சிறந்த அட்டகாடம் , ஏற்கனவே பல்வேறு இதழ்களில் வெளிவந்து பல்வேறு பழங்களின் வாசனைகளைக் கூட நுகர வைத்த கவிதைகள்.

ராசாத்தி
பி.கே. ராசாத்தியின் சரிதம்
கன்னடத்திலிருந்து தமிழில் கருப்பன்

குப்பத்தில் கிடந்த ராசாத்தி ஆதிக்க கரங்களின் பிடிகளுக்குள் சிக்கி சீரழிந்து சின்னாப் பின்னமானவர். சேற்றில் முளைத்த செந்தாமரை. வீரு கொண்டு எழுந்து ஆதிக்க சக்திகளின் வேர்களை கிள்ளி எறிந்த வரலாறு. ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்தவர்கள் படித்து நுகர, எழுச்சி பெற , தாலாட்டி , சீராட்டி, குளிப்பாட்டி பட்டுடுத்திப் பார்க்க வேண்டிய போராளி ராசாத்தி என்பதை யாரும் மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. ஒடுக்கப்பட்ட , தட்டி முறிக்கப்பட்ட, பிளாஞ்சு ,பிளாஞ்சென ப்ளாஞ்சப்பட்ட பிறகு தற்போதைய உரிமைக்குரலாகவும், சவுண்டு பார்ட்டியாகவும் எழுச்சியடைந்தவர் ராசாத்தி. வரலாறுகள் என்றுமே சோக நிழல் படிந்து கிடப்பது உண்மைதானே.

ஏற்கனவே கருப்பனின் மொழிபெயர்ப்பில் காலச்சுமை வெளியீடாக வந்த குப்பம்மா, மொழிபெயர்ப்பில் கருப்பனுக்கு ஏராளமான புகழை ஈட்டித்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கன்னடத்தில் ராசாத்தி வயிறு எரிந்து போய் பேசிய கெட்ட வார்த்தைகளை தமிழ்படுத்த கருப்பன் சிரமப்பட்டு அப்படியே தமிழுக்கும் தருவித்திருக்கிறார். சரிதத்தை படிப்போர் வடிக்கும் கண்ணீர்த்துளிகளே அதற்கு சாட்சி.

கொய்யா பழத்தின் கதை ( நாவல் )
சுள்ளிமேட்டு ராமசாமி

1980
ல் முதல் பதிப்பு வெளி வந்த போதே வாசக உள்ளங்களை கொள்ளையடித்து பின்னர் தமிழில் ஒரு ஆட்டு ஆட்டிய நாவல். ஒரு கொய்யா செடியில் பிஞ்சாகத்தோன்றி, பருத்து பச்சை நிறத்தில் காட்சியளித்து பின்னர் யெல்லோ வர்ணத்திற்கு உருமாறி, கடைசியில் காய்ந்து கருமை நிற ஓடாய் மாறி.., நாகரீக வளர்ச்சியில் அழிந்து போன கொய்யாவின் கதை ஆசிரியரால் நிதானமாக நகர்த்தப்பட தமிழின் கதை கூறல் முறை பயன்பட , நாவல் தமிழின் கிளாசிக் என்ற பட்டத்தை நிலையாக பிடித்துக்கொண்டது. இன்று நாவல் உலகில் வேர்பிடித்து பயங்கரமாய் நின்று விட்டது. கிஹிப்ரூ விமர்சகர் ஈஸ் கே சான் நோபல் பரிசை விட வேறு ஏதோ பெரியதாக இந்த நாவலுக்கு தரப்பட வேண்டும் என்கிறார். மெசபட்டோமியாவிலும் , யுவான் சுவாங்கிலும் வீட்டுக்கு வீடு படித்து மகிழும் ஒரே தமிழ் நாவல் இது. தற்போது மீண்டும் செம்மைப்படுத்தப்பட்டு அட்டையில் இரும்புத்தகடு கொண்டு கட்டமைக்கப்பட்டு செழுமையான மறு தயாரிப்பில் வந்திருக்கிறது.

ஓலை வேய்ந்த சாலை
குமரனின் தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைகள்
தொகுப்பாளர் : சின்ன பெருமான்

குமரன் ஏகப்பட்ட கவிதைகளை எழுதியவர். கீ என்கிற தனியிதழை சிரமம் பாராமல் நடத்தியவர். கடன் தொல்லை காரணமாக உள்ளூர் ஏரிக்குள் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர். பூடகமாக கவிதைகள் எழுதியவரை வாழ வைக்காமல் விட்ட இந்த சமுதாயத்தை, அவர்பால் அன்பும் நேசமும் கொண்ட சமகால கவிஞர் கூட்டம் இன்னமும் சாடிக்கொண்டேயிருக்கிறது.குமரனின் கவிதைகளில் குப்பைகளை கழித்து தேர்வு செய்தவை இத்தொகுதியில். ஒவ்வொரு கவிதையயும் கிணற்றில் மூழ்கி மூழ்கி அடியாழத்தில் இருந்து பொக்கிஷம் தேடி எடுத்து வரும் நிலையில் சிரமத்துடன் படிமக் கவிதைகளை தேர்ந்தெடுத்ததாக களைப்பில் சின்ன பெருமாள் முன்னுரையில் கூறுகிறார். இதில் இதுவரை வெளிவராமல் இவரது கண்டெடுக்கப்பட்ட கவிதைகளும் அடக்கம். இவை நுட்பமும், படிமங்களோடே நகர்வதும் பின்னர் நொறுங்குவதுமான கவிதைகள்.

அணில்கள் ( சிறுகதைகள் )
சுள்ளிமேட்டு ராமசாமி

1980
லிருந்து 1998 அவரது இறப்புக்காலம் வரை எழுதிய பன்முக ஆளுமை மிக்க சிறுகதைகள், மொத்த சிறுகதைகளும் அடங்கிய கெட்டி அட்டை பதிப்பு.கால வரிசைக்கிரமமாக உன்னிப்பாய் ஊரே கூடி பிழைகள் திருத்தி பிழைகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட வொய்லெட் பதிப்பு. ஏற்கனவே 91 லிருந்து 95 வரையிலான இவரது சிறுகதைகள் முயல்கள் என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டு தமிழ் வாசகப் பரப்பை பீதியுறச் செய்தது நினைவிருக்கலாம். இதுவும் போக அன்னாரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுதி விற்பனையில் பட்டையைக் கிளப்பியதும் வாசக நேசங்களுக்கு நினைவிலிருந்து அழிந்து போகாது. காலாகாலத்துக்கும் நின்று நிலைக்கும் தொகுப்பு அணில்கள். படிப்பாளிகள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய பதிப்பு.

இன்று ராத்திரி நான் நாசமாகலாம்:
ப்ரெஞ்ச் கவிதைகள்
தமிழில்: புலிகேசி

சர்ரியலிசத்திற்கும், சாம்பார் ரசத்திர்கும் பெயர் போன ப்ரெஞ்ச் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்க்க தனித்திறமையும் , தனித்த பேடித்தனமில்லாத தைரியமும் வேண்டும்,ப்ரெஞ்ச் கவிதைகளின் முன்னோடி கிட்ஷாவின் குழந்தைப் பாட்டிலிருந்து தற்போதைய இளைய தலைமுறை கவிஞரகள் வரை தேடிக் கண்டறிந்து புலிகேசி பழகு தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். புத்தக கண்காட்சிக்காக அவசரமாக தயாரிக்கப்பட்ட சாதா அட்டை சாதா பேப்பர் தயாரிப்பு.

யோனி
கவிதைகள் : கவிஞர் கமலா

வாழ்வின் துக்ககரமான பகுதிகளிலும் தன் காமம் பற்றி தாள்களில் எழுதிச்செல்லும் கவிஞி கமலாவின் மூன்றாவது தொகுப்பு.வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்
வெளிச்சத்தில் பொத்தல் விழுந்த ஆணுறைகளைப் பற்றி எழுதிக்குவிக்கும் கவி மனம் உலகின் எந்த மூலைகளில் உள்ள கவிஞிகளுக்கே இல்லாது, வெளி உலகத்தை உள்ளுக்குள்ளும் , உள் உலகை வெளியிலும் எழுதித் தீர்த்த கமலா சொற்களை
கலைத்துப் போட்டு கூட்டாகச்சேர்க்கும் பணியை ஒரு சாலைப்பணியாளரின் நேர்த்தியோடு செய்கிறார்.
கவிதைகளில் காமத்தையும் ஆடைகளற்ற நிர்வாணத்தையும் எப்படியோ யோனிகள் , முலைகள் என்று கவிதைக்கு கவிதை ஜம்மென வாசகங்கள் இடம் பெற்றால் சரி என்று ரசிப்பவர்களை கைநீட்டு காதலோடு அழைக்கின்றன் இவரது கவிதைகள்.
ஒளிந்திருந்து பேசிய கதைகள்
தொகுப்பு : தொப்புளான்

திருட்டுக் கொடுத்தவர்களின் புலம்பல்கள் , திருடு போன அலுமினிய தேக்ஸா,
குண்டான் பற்றிய பதிவுகள், கூடவே திருடியவர்களின் கொண்டாட்டங்கள் , சில்மிஷங்கள்.., கூடவே திருடுவதில் நடந்த பிழைகள் என இவைகள் பலவற்றையும் சேர்த்து மிக மிக சிரமப்பட்டு திருடிச்சேகரித்த சிறு சிறு திருட்டுக்கதைகள்.

இவைகள் எல்லாமே தமிழக கிராமங்களில் முன்பு பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடிய சமயத்தில் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களின் சேகரிப்பு. தமிழில் இப்படி ஒரு தொகுப்பு வருவது இதுவே முதல் முறை. இவற்றை சேகரிக்க தொப்புளான் பயணப்பட்ட கிராமங்கள் எண்ணிலடங்காதவை.

சூனிய நிழல் ( நாவல்)
தோழர் பெரியசாமி

மொழியின் அடுக்குகள் சிதைவுற்று இசங்களின் போர்வைக்குள் சிக்காமல் வந்த தமிழின் முதல் குதிரைப் பிரதி. ஏற்கனவே ஆசிரியரின் சொந்த வெளியீடாக வந்த பிரதி பத்து வருடம் கழித்து அதே ஆளுமையுடன் ப்ளாஸ்டிக் தாள்களில் வருகிறது. தமிழில் அதிகம் பேசப்படாத நாவல்களில் ஒன்றான சூனிய நிழல் வெறுமைப் பாதையில் செல்லும் புத்தி தடுமாற்றமற்ற நாவலாக அறியப்பட்டிருக்கிறது.

சுள்ளிமேட்டு ராமசாமி 80 லிருந்து 95 வரை ( கட்டுரைகள் )

எழுத்துலகில் பலகாலம் கொடியைக் கட்டிப்பறந்து வாசக மனங்களை அபகரித்துக்கொண்டவர் சுள்ளிமேட்டு ராமசாமி. இவரைப் பற்றி ஏனைய எழுத்தாள பக்த சிரோமணிகள் எழுதிய ஞாபக அடிச்சுவடுகளின் தொகுப்பு. கூடவே இவரது மேடைப்பேச்சுகள், பேசலாம், எழுதலாம் என எழுதி வைத்த முக்கிய குறிப்புகள் எல்லாவற்றையும் சமயத்தில் காசு பார்த்து விடும் நோக்கில் கூட்டாக சேகரித்து வெளிவரும் அவசர பதிப்பு.

தோழர் பெரியசாமி
நினைவோடை : சுள்ளிமேட்டு ராமசாமி

ஆயிரத்தெட்டு பிரச்சனைக்களுக்கு மத்தியிலும் நட்புறவோடு இரண்டு சாமிகளும் பழகி உள்ளதை மூடி மறைக்காது திறந்து காட்டும் புத்தகம்.

என் வேதனைகள் ( பதிவு )
கனகா

சிவராமன் திரைப்படத் துறையில் நுழைந்து கலக்கி வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தில்லான திரைப்படத்திற்கு வசனம் எழுதிய சிவராமன் நாயகியின் பெயரை கனகா என்று பயன்படுத்தி கதாநாயகனை விட்டு கனகா காபி கொண்டாடி , கனகா துணியை துவையடி,கனகா பெட்ரூம் வாடி என்று வசனங்களை அள்ளித்தெளித்ததால் சிறு பத்திரிக்கை இலக்கிய கூடாரத்தில் கவிதைகளை வீச்சோடு எழுதும் கவிஞி கனகா கொந்தளித்து எழுந்து வைக்கும் புகார்களும் , வாடி போடி என்பனவற்றால் தான் அடைந்த மன உளைச்சல்களையும் பதிவு செய்யும் சிறு புத்தகம். கூடவே காலச்சுமை ஆசிரியர்க்கு அளித்த நேர்காணலில் கதறக்கதற கொட்டிக் குவித்த கண்ணீர்த்துளிகள் இணைப்பாக.

.பி.பியில் வாங்குங்கள்

# காலச்சுமை பதிப்பக வெளியீடுகளை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்

#
 உங்கள் தேவையையும் முகவரியையும் SMS அனுப்பினால் போதுமானது. போஸ்ட் ஆபிஸ் தேடிக்கொண்டோ , வங்கிகளைதேடிக்கொண்டோ இதற்காக வெய்யிலிலும் , மழையிலும் அலைந்து உடலை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

#
 புத்தகங்களை உங்கள் நண்பனாக பாவியுங்கள் சிரமம் இராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக