வியாழன், 18 ஜூலை, 2013

ஷாராஜ் -புல்வெளியின் ஓவியக்கலைஞன்


இந்து மதத்தின் ரகசியப் பேருண்மைகள் : சமகால தேவையிலும் நோக்கிலும்  
- ஷாராஜின் சமகால நவீன தாந்த்ரீக ஓவியங்கள் குறித்த ஒரு பொதுக் கண்ணோட்டம்

சமகால நவீன தாந்த்ரீக ஓவியரான ஷாராஜ் இவ் வகை முன்னோடிகள் மற்றும் சமகாலத்தவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு நிற்பவர். அவரது தனித்துவமும் (individuality) ஈடின்மையும் (unique) தொழில்நுட்பத் திறன் சார்ந்தவையல்ல. உள்ளடக்கம் சார்ந்தவை. “ நான் எனது ஓவியங்களைக் கையால் வரைவதில்லை; மூளையால் வரைகிறேன்” என்று அவர் சொல்வது முற்றிலும் சரியானதே. எனினும் அவை வெறும் அறிவுஜீவித வெளிப்பாடுகள் (intellectual expressions) அல்ல. ஒரு சமகால இந்திய நவீன படைப்பு மனத்துக்கே உரித்தான இயல் கடந்த ஆய்வின் (metaphysics) ஆவணப் படைப்புகள் (docu-creations).

நவீன  தாந்த்ரீக ஓவியம் இன்று உலகளவில் – கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகள் பலதிலும் – படைக்கப்படுகிற ஒன்றாக இருந்தாலும், இந்தியாவில் அல்லது இந்தியர்களால் படைக்கப்படுபவையே அதிக ஆழமும் விரிவும் கொண்டவையாக இருக்கின்றன. அது அப்படித்தான் இருக்கவும் முடியும். காரணம், தாந்த்ரீகத்தின் பூர்வீகம் இந்தியா என்பதும், தாந்த்ரீக யோகம் இந்து மதத்தின் ஆன்மீகக் கண்டுபிடிப்பு என்பதுமே. (திபெத்திய பௌத்த தாந்த்ரீகமான வஜ்ராயணம் (Vajrayana) மற்றும் சீனத் தாந்த்ரீகமான தாவோயிஸம் (Taoism) ஆகியவற்றிற்கும் மூலம் இந்து தாந்த்ரீகமே). இதற்கு ஆதாரமாக நவீன தாந்த்ரீக ஓவிய முன்னோடிகளான s.h. ரஸா, k.c.s. பணிக்கர், K.V.  ஹரிதாஸன் போன்றவர்களையும், தாந்த்ரீகம் கலந்து நவீன ஓவியங்கள் படைப்பவர்களில் சமகால மேதையான பரேஷ் மைத்தி (Paresh Maity) போன்றவர்களையும் குறிப்பிடலாம். ஆனால், இவர்களுடைய பாணி(style)களிலிருந்தும் நிலைபாடுகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை ஷாராஜின் தாந்த்ரீக ஓவியங்கள்.

கடவுள் மறுப்பாளரும் (atheist) ஆன்மீக அறிவியல்வாதியுமான ஷாராஜ், தனது தர்க்க அறிவில் பெறும் தரிசனங்களி(vision)லிருந்தும், யோக – தியான அனுபவங்களில் பெறும் மெய்யுணர்விலிருந்தும் (mysticism), துணைப் பிரக்ஞை (sub concious) அல்லது ஆல்ஃபா நிலை(alpha state)யில் எழும் படைப்பு மனத்தோற்றங்களி(creative fantacy)லிருந்துமே தனது சமகால நவீன தாந்த்ரீக ஓவியங்களைப் படைக்கிறார்.

கலை என்பதையும் தாண்டி இவற்றில் பல்வேறு நோக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை:

துறைசார் ரகசியங்களாக (essoteric) இருந்து வரும் யோக அறிவியலின் ஆன்மீக மெய்ம்மை(spiritual reality)களை மக்களிடம் அம்பலப்படுத்துவது (reveal).
இந்து மதத்தின் கடவுள்கள், வேதங்கள், புராணங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட லோகாயத வாழ்வின் (mundane life) அனைத்து கூறுகளிலும் மறைபொருளாக உள்ள தாந்த்ரீக உட்பொருள்களை வெளிப்படுத்துவது.
தற்கால அறிவியல் கடந்த 19-20 ஆம் நூற்றாண்டுகளில் கண்டறிந்த ப்ரபஞ்ச மெய்ம்மை (cosmic reality) களையே வேத காலமான கி.மு. 1500 காலகட்டத்திலேயே ரிஷிகளும் யோகிகளும் ஞான திருஷ்டி(clairvoyance)யால் கண்டறிந்து கடவுள் உருக்கொடுப்புகளாகவும் (empodyment), தத்துவ ஞானமாகவும், புராணக் கதைகளாகவும் உருமாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பது. (யாராலும் இதுவரை கண்டறியப்படாத பல புதிய தரிசனங்களும் இதில் அடங்கும்).
மனம் பற்றிய கடந்த நூற்றாண்டு மற்றும் சமகால உளவியல் கண்டுபிடிப்புகள் பலவும் புராதன தந்திர சாஸ்த்திரங்களிலேயே சொல்லப்பட்டுள்ளதை அறியப்படுத்துவது.
சிவ-ஷக்தி உருக்கொடுப்புகளின் தாந்த்ரீகம், ஆன்மீகம், அறிவியல் மற்றும் உளவியல் மெய்ம்மைகளை விளக்குவது.

சமகால நோக்கிலும் தேவையிலும் உள்ள உயர்ந்த நோக்கங்கள் இவை.

தாந்த்ரீக யோகிகளான சித்தர்கள் கண்டறிந்த சித்த வைத்தியமும், ரிஷிகள் நல்கிய ஆயுர்வேதமும் துறை சார் ரகசியங்களாகவே வைக்கப்பட்டு அனேக மருத்துவ சூட்சுமங்கள் பிற்காலத்தவர்களால் அறியப்படவியலாததாகவே போய்விட்டன. எஞ்சியிருப்பவைதான் இப்போதுள்ள சித்த-ஆயுர்வேதங்களில் உள்ளவை. சீனாவின் பாரம்பரிய சிகிச்சையாக இன்று உலகெங்கும் பரவியுள்ள நுண்ணழுத்தம் (acu pressure) மற்றும் நுண்துளை (acu puncher) சிகிச்சையின் மூலமே சித்த வைத்தியம், ஆயுர்வேதம், வர்மக்கலை போன்றவைதான். தாந்த்ரீக ரகசியங்களும் அவ்வாறு இருப்பதால், எவ்வளவு அற்புதமான விஷயங்களை நாம் இதுவரை அறியாமலே இருந்திருக்கிறோம் என்பது ஷாராஜின் சமகால நவீன தாந்த்ரீக ஓவியங்கள் ஒவ்வொன்றையும் அவற்றின் விளக்கங்களுடன் பார்க்கும்போது நமக்கு தோன்றுகிறது.

“என்னுடைய ஓவியங்கள் வெறுமனே சுவர்களை அலங்கரிப்பதற்காகப் படைக்கப்படுபவையல்ல. அவற்றின் நோக்குநர்(beholder)களில் ஒரு தாக்கத்தை, மாற்றத்தை, ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் படைக்கப்படுபவை. இந்து மதத்தின் வளமான ஆன்மீகப் பாரம்பரியத்தில் வந்த எனக்கு பிதுரார்ஜித சொத்தாக (heritage), அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாக மூதாதைகளின் ஆன்மீகப் பெருஞ்செல்வம் கிடைத்துள்ளது. அதை வைத்துக்கொண்டு பிச்சைக்காரத்தனமாக பொருளற்ற ஓவியங்களை வரைய என்னால் முடியாது.”


ஷாராஜின் குரல் தீர்க்கமாக ஒலிக்கிறது.

உள்ளபடியே அவரது நவீன தாந்த்ரீக ஓவியங்கள் அதன் நோக்குநரில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. சிலவற்றில் அது ஆழ்ந்த மனப்பதிவாக (impression) இருக்கும்; சிலவற்றில் அதிர்ச்சியாக இருக்கும். மனப்பதிவை ஏற்படுத்துபவை ஆழ்ந்த தியானத்தன்மை கொண்ட அவரது வண்ணத் தேர்ந்தெடுப்பு மற்றும் சேர்க்கை(combination)களும், தாந்த்ரீக ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டும்படியான உக்கிர உருவங்கள் மற்றும் உருவகங்(metopher)களுமே. அதிர்ச்சியை உண்டாக்கக் கூடியவை கடவுள் – கடவுளிகளின் நிர்வாணம் மற்றும் பாலியல் சித்தரிப்புகள், அவருக்கே உரித்தான தாந்த்ரீக படிமங்கள் ஆகியன. ஆனால் தாந்த்ரீகமயமானதும் கலகத்தன்மை கொண்டதுமான அவற்றின் விளக்கங்களை அறிந்த பிறகு அதிர்ச்சி விலகி, உட்பொருள் ஆழங்களை உணர நிச்சயமாக வாய்க்கும்.

 மாற்றமும் விழிப்புணர்வும் ஏற்படுவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. அது நடக்கிறதோ, இல்லையோ, இவ்வோவியங்களை ஒருமுறை பார்த்தாலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது என்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக