புதன், 17 ஜூலை, 2013

ஒத்தபனமரக்காடு- எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் இருந்து 2 அத்தியாயம் -கி.ச.திலீபன்



பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்...
டிரான்சிஸ்டரில் ஒலிக்கும் ஒவ்வொரு பாடலும் மாதையனுக்குள் ஏதோ ஒன்றை பழைய நினைவுகளிலிருந்து கிளறி விட்டுச்செல்கிறது. கடந்த கால நினைவுகள் மனதிற்குள் வந்தெழும்பினாலே நிகழ்காலம் கசப்பாகி விடுகிறது போலும். கடந்த காலத்தில் தவற விட்டனவற்றை நினைத்து நிகழ்காலத்தில் ஏங்கும் சுகம் இந்தப் பாடல்களில் கிடைத்தது. மாதையனுக்குள் அந்தப் பாட்டு கடந்த காலத்திற்குள்ளான மறுபிரவேசமாகவே பட்டது. கடந்து போன ஒரு வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டியதாகவும் இருந்தது. மாதையனுக்கு எம்.எஸ்.வி, இளையராஜா பாடல்களின் பின்னால் வாழ்வின் சகலமும் புதைந்து கிடக்கிறது. அந்தப் பாடல்களை கேட்கும்போதே அப்படியான ஒரு உணர்வு பீறிடும். சில பாடல்களை கேட்டால் அவரையே அறியாமல் அவரது கண்ணிலிருந்து நீர்த் துளிகள் எட்டிப்பார்க்கும்.  தற்போது வரும் பாடல்களை லக்கி டீ ஸ்டாலில் கேட்க நேரிடும் பட்சத்தில் “என்னய்யா இவன் கண்ண மூடிட்டு கையில கிடைக்கிறதை எல்லாம் வெச்சு கொட்டிட்டு இருப்பான் போல  கேட்க முடியுதா ஒன்னா இதுக்கு சாவு மோளமே தேவலை” என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார். தற்போது வரும் திரைப்படங்கள் மீதும் அவருக்கு அவ்வளவாக பற்றுதல் இருப்பதில்லை. தன் பதின் பருவத்தில் தூக்கநாயக்கன்பாளையம் ஸ்ரீ தேவி திரையரங்கில் தான் கண்டு ரசித்த படங்களை பற்றி இன்றளவிலும் ஆரவாவாரமாய் பேசிக்கொண்டிருப்பார். அநேகமாக பெரும்பாலானோர் எம்.ஜி.ஆர் ரசிகராகத்தான் இருந்திருக்கின்ற அந்தக் காலத்தில் மட்டும் இவர் நம்பியார் ரசிகராய் இருந்து ஊரை ரணகளப்படுத்தியவர். நம்பியார் அடியில் எம்.ஜி.ஆர் சுருண்டு விழும் போது கைதட்டி ரசித்தால்  என்ன நிகழும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மாதையனின் குடிசையை இசையால் வருடிக்கொண்டிருக்கும் இந்த ட்ரான்சிஸ்டர்தான் மாதையனை உயிரூட்டிக்கொண்டிருக்கிறது. பசி அவரை உருக்குலைத்துப் போட்டிருப்பதை ஒட்டிப்போயிருக்கும் அவரது வயிறே சொல்லி விடும். இதோ அந்த மூலையில் கிடக்கும் மண் பானையில் சோறு வடித்து பசி ஓட்டிய பொழுதுகள் மறைந்து போய் நேற்று மதியத்திலிருந்தே அந்த பானையும் அவரது அடுப்பும் வெறுமனே கிடக்கிறது. கெம்பத்தராயன் கரட்டிலிருந்து பொறுக்கி வரப்பட்ட சுள்ளிகளும் அப்படித்தான். ஊரில் ஏதேனும் எழவு விழுந்தாலாவது மூர்த்தி கடையில் கிலோ நாலு ரூபாய்க்கு விற்கும் ரேசன் அரிசி வாங்கிப்போடலாம் என்றால் வயசான டிக்கட்டுகளெல்லாம் இழுத்துகிட்டே இருக்குதோ தவிர ஒன்னும் போய்ச்சேர மாட்டேங்குதே என்பதுதான் மாதையனின் தற்போதைய கவலை. அது சரி மாதையனின் பசிக்காக ஒரு மரணத்தை எதிர்நோக்குவது நியாயமற்றதுதான் பசியின் கொடுமை எந்த அளவும் நம்மை சிந்திக்க வைக்குமே. ஒரு மாத காலமாகவே சுத்து வட்டாரத்தில் எங்கும் எழவே விழவில்லை, கோவில் திருவிழாவுக்கு இன்னும் நான்கு மாதங்கள் கிடக்கின்றன. ஏதோ அன்றொரு வியாழக்கிழமை வரிசையில் காத்திருந்து வாங்கிப்போட்ட ரேஷன் அரிசி இருந்ததால்  பொழுது ஓடியது அதுவும் நேற்றுதான் தீர்ந்து போக அவரது வீட்டில் அடுப்புக்குப் பதிலாக வயிறுதான் எரிந்து கொண்டிருக்கிறது. பழனிச்சாமி வீட்டுக்கு போனாலாவது வகிரு ரொம்ப சாப்பிடலாம் என்கிற முடிவும் இரண்டு மனதாகவே இருக்கிறது. அந்தக் குழப்பத்தின் இடையில்தான் ட்ரான்சிஸ்டரின் ஆறுதலில் ஒய்யாரமாய் படுத்துக் கிடக்கிறார் மாதையன்.
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்...ஏன்...ஏன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்...ஏன்..ஏன்.. ஒலிக்கவும் அட்ராசக்க.. என்று அவர் தொடை தட்டிய போதுதான் குடிசையின் படலைத் திறந்து கொண்டு பழனிச்சாமி உள் நுழைந்தார். அழுக்குப் படிந்திருந்த கதர் வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு வெற்றுடலுடன் வந்த அவரிடத்து பரபரப்பு தென்பட்டது. கைகளை முட்டுக் கொடுத்து படாரென எழுந்து உட்கார்ந்தார் மாதையன்.
”என்ன முக்கியமான ஜோலியா... பரபரக்க வராப்லயாட்டிருக்குதே”
“தப்பட்டை உனக்கென்ன விஷயமே தெரியாதா ஆளு மகாராசனாட்ட படுத்துகிட்டிருக்க”
”சொன்னாத்தான தெரியுறதுக்கு”
” ஆறுமுகக் கவுண்டரு போயிட்டாருயா”
“எங்க?”
“செத்துப்போயிட்டாரருங்குற...”
” அடக் கருமமே அது எப்ப”
“ காலைலதான் செத்துப்போயிருக்காரு.. அவரு கூத்துதான் நமக்குத் தெரியுமே எதையோ அரைச்சுக்குடிச்சுட்டாப்லைன்னு சொன்னாங்க.. அதெல்லாம் அங்க போய் பாத்துக்குவோம் சட்டு புட்டுனு கெளம்பி வருவியா” என பழனிச்சாமி துரிதப்படுத்தினார். இதற்குத்தானே ஆசைப்பட்டேன் என்பது போலவே மாதையன் பல்லிளித்தார். எப்படியும் இன்றைக்கு ஆட்டுக்கறி குழம்புடன் சாப்பிடப்போகிற திருப்தி மாதையனின் இளிப்புக்கு முக்கியக் காரணமாய் இருந்தது.
” என்னவோ போ... நாங்கும்பிட்ட சாமி என்னை கைவிடலை... நேத்திலிருந்து கஞ்சி குடிக்காம ஊரில ஒரு எழவையும் காணமேன்னு படுத்துக்கெடக்கேன் நல்ல வேளை ஏதோ ஆறுமுக கவுண்டரு புண்ணியத்துல இன்னைக்கு வகிரு நம்ப சாப்பாடும் குடியும்தான்”  என்றார். ஆறுமுகக் கவுண்டரின் இறப்புச் செய்தியே மாதையனின் பாதி பசியை தின்று விட்டது போல துள்ளியெழுந்து குடிசையின் ஓரத்தில் மாட்டப்பட்டிருந்த பறையை எடுத்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டார். இருவரும் ஆறுமுகக் கவுண்டர் வீட்டை நோக்கி நடையைக் கட்டினர்.
ஒத்தப்பனமரக்காட்டிலேயே ஆறுமுகக்கவுண்டர்தான் பெரிய கை. பத்துப் பேரைத் தூக்கிப்போட்டு பந்தாடக்கூடிய திராணி அவரிடத்தில் தட்டுப்படும். என்னதான் சொத்துக்காரராக இருந்தாலும் இரும்பு பிடித்த அவரது கைகள் காப்பு காய்த்திருக்கும். நல்ல மீசையும் கிர்தாவும் வைத்து ஆளே மிரட்டும் தொணியில் இருப்பார். “கவுண்டரே சத்தியமங்கலம் காட்டுப்பக்கம் போயிடாதீங்க அப்புறம் வீரப்பன்னு நெனைச்சு உங்களை சுட்டுப்போடுவாங்க” என்று ஊரில் நாலு பேர் நாலு விதமாக சொன்னது இதைத்தான். ஊரில் எந்த நல்ல காரியத்துக்கும் நன்கொடை வேண்டுமென அவர் வீட்டில்தான் ரசீதுடன் காத்துக்கிடப்பார்கள். வாரி வழங்கும் எண்ணமெல்லாம் அவருக்கு அறவே கிடையாதென்றாலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே ரசீதுச் சீட்டுகளில் ஆயிரம், ஐநூறு என்று எழுதித் தொலைத்து விடுவார். மாபெரும் கபடிப்போட்டி நடத்துறோம் என தூக்கநாயக்கன்பாளையத்தில் இருந்தும் கூட இவரைத் தேடி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். ரசீதுப் புத்தகத்தை வாங்கி அதில் ஆயிரமோ ஐநூறோ அவர் எழுதும்போது டொனேஷன் கேட்டவர்களுக்கு புல்லரித்து விடும். எழுதி விட்டு நாளைக்கு வந்து காசை வாங்கிக்கங்க என்று அவர் சொல்லி விட்டு சிரிக்கும்போது  புல்லரிப்பில் சிலிர்த்து நின்ற ரோமங்கள் அப்படியே அடங்கிப்போகும். அவரை நம்பி அடுத்த நாள் வந்தாலும் இன்று போய் நாளை வா என்ற பஞ்சாங்கத்தையே பாடிக் கொண்டிருப்பார். தூக்கநாயக்கன்பாளையத்துக்காரர்கள் நாளடைவில் டொனேஷனுக்கு அவர் வீட்டுக்கு போவதையே தவிர்த்து விட்டனர். ஏப்ரல் 1ம் தேதி விளையாடுகிற ஏமாத்து விளையாட்டில் கைதேர்ந்தவராக முத்திரை குத்தப்பட்டார்.  ஆறுமுகக் கவுண்டர் வாழ்க்கை கேள்விகளாலேயே பின்னப்பட்டிருந்தது. ஏன் இப்படி நடந்தது? இவங்களுக்கா இப்படி? இந்த மனுசனுக்கேன் இத்தனை ஆட்டமுங்கிற? என இன்று காலை அவர் மோதிரத்தில் இருந்த வைரத்தை அரைத்து பாலில் கலக்கிக் குடித்துச் சாகும் வரையிலும் அந்தக் கேள்விகளுக்கான பதில் தெரியவே இல்லை.  
ஒத்தப்பனமரக்காட்டு மண் சாலைகளில் புழுதியை பரப்பிய வண்ணம் சொகுசு கார்கள் பலவும் வந்தபடி இருந்தன. ஆறுமுக கவுண்டரின் அம்பாஸிடர் காரை மட்டுமே கண்டிருந்த இந்த மண் சாலைகளுக்கு இந்த கார்களின் வருகை புதிதுதான். வருகிறவர்கள் எல்லாம் பூமாலையோடும் கோட்டித்துணியோடும் சென்று கொண்டிருக்கும் மர்மம் புரியாமல் ஊருக்கு வெளியே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தனர்.
ஆறுமுகக் கவுண்டரின் விஸ்தாரமான அந்த பங்களா ஜமீன் பங்களாவுக்குரிய அத்தனை தகுதிகளையும் பெற்று போன பொங்கலுக்கு செய்யப்பட்டிருந்த பெயிண்டிங்கில் தகதகத்து மின்னியது. அவரது வீடு எழவு வீட்டிற்கான அறிகுறியே இல்லாமல் காணப்பட்டது. வந்திருந்த எல்லோரும் கடமைக்கென கைகட்டி நின்று கொண்டு முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள முயற்சித்தது அப்பட்டமாய் தெரிந்தது. பெரிய அளவில் அழுகையோ அரற்றலோ இருந்ததாகத் தெரியவில்லை. கிராமத்துப் பெருசுகள் சில ஒன்று கூடி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்ததோடு சரி. ஒத்தப்பனமரக்காடு கிராமம் அதன் இயல்பில் சிறிதளவு மட்டும் மாற்றம் காட்டியிருந்தது. கட்டாயம் துக்கத்துக்கு போயாக வேண்டிய நிர்பந்தத்துக்கு கிராமமே ஆட்பட்டிருந்தது.  ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் பலரும் வந்து நின்று துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஈரோடு, பெருந்துறை பகுதிகளிலிருந்தும் பல உறவினர்கள் எந்த வித சோகத்தையும் காட்டிக்கொள்ளாமல் வந்தமர்ந்திருந்தனர்.
வழக்கமான சாங்கிய சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு வெள்ளைத் துணிகளால் சூழப்பட்டிருந்த ஆறுமுகக் கவுண்டரின் உடல் போர்டிகோவில் கிடத்தப்பட்டிந்தது. பிணத்தை சுற்றி அமர்ந்திருந்த் பெண்கள் பலரும் மெகாசீரியலை மனதில் கொண்டு வந்தாவது அழுகையை வரவழைத்து விட முயற்சி செய்து கொண்டிருந்தனர். கையில் தீப்பந்தம் ஏந்தி தரையில் துண்டு விரித்து உட்கார்ந்து கொண்டிருந்த வண்ணான், வருகிறவர், போகிறவர் முகங்களையெல்லாம் ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.  தன்னைக் கடக்கும் போது ஒவ்வொருவரின் கைகளும் சட்டைப் பாக்கெட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிற அவனது எதிர்பார்ப்பு எல்லா நேரங்களிலும் நடந்தேறுவதில்லை. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லரைக்காசுகள் கடமைக்கென வந்து விழுந்தன. பத்து ரூபாய் நோட்டுக்கள் விழுவதே அதிசயமாகத்தான் இருந்தது.  வெள்ளையும் சொள்ளையுமாய் ஏசி காரில் வருகிறவர்களின் கைகளில் பத்து ரூபாய்க்கு மேல் அகப்படாமல் போனதை எண்ணி சபித்துக்கொண்டிருந்தது அவனுக்கு மட்டுமே தெரியும். அப்போதுதான் மாதையனும், பழனிச்சாமியும் வந்து சேர்ந்திருந்தனர். ஆறுமுகக் கவுண்டரின் உறவினர் ஒருவர்தான் அவர்களை தனியே ஒரு ஓரத்திற்கு கூட்டிச்சென்றார்.
“ஊருல எழவு உழுந்தா உங்களை வெத்தலை பாக்கு வெச்சழைக்கணுமோ? நேரங்காலத்துல வர மாட்டிங்க...”
“இல்லைங் சாமி... கரட்டுக்கு போயிருந்த மாதையனை கூட்டியார நேரமாயிடுச்சுங்..” என சமாளித்தார் பழனிச்சாமி.
“சரி...நல்லா கேட்டுக்கங்க... ஊர்ல பெரிய மனுஷன் எழவு அதனால சத்தம் காதைப் பொளக்கோணும் சொல்லிப்புட்டேன்”
“அதெல்லாம் பண்ணிடலாமுங்க... கொஞ்சூண்டு உள்ள எறக்கிப்புட்டமுன்னா அப்புறம் சத்தம் தானா வருமுங்க”
“சரிய்யா... பட்டாசு வாங்கப் போன மாதேசு கிட்ட சரக்கு வாங்கியாரச் சொல்லியிருக்கேன்.. இத இப்ப வந்துடும்... குடிச்சுப் போட்டு சகிட்டுக்கு அடிச்சுத்தள்ளுறீங்க”
“எல்லாம் பண்ணிப்போடலாமுங்க” என்று சொன்ன இருவரின் கண்களிலும் வர்ணிக்க முடியாத ஆனந்தப் பூரிப்பு. போன மாதம் கொங்கர்பாளையத்தில் நடராசன் வீட்டு எழவில் குடித்ததோடு சரி... மதுவின் ருசியை ஒரு மாத காலமாகவே ஏங்கித்தவிக்கிறது மனசு. தலைக்கேறும் போதையில் தப்படித்தவாறே ஆடிக்கொண்டு சகலத்தையும் மறந்து வாழ்க்கையின் இன்பத்தின் அத்தியாயங்களை மட்டும் பார்க்கிற வாய்ப்பு போதையில்தான் கிடைக்கிறது என்று இருவரும் முழுமையாக நம்பினர்.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா....” அநேகமாக ஆறுமுகக் கவுண்டரின் இறப்புக்கு வந்திருந்தவர்கள் மனதில் இந்தப்பாட்டு ஒலித்துக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அவர் ஆடிய ஆட்டம் அப்படிப்பட்டது. எதை கொண்டு வந்தோம் அதை நாம் இழப்பதற்கு என்கிற கீதையின் வரிகள் மீது ஈர்ப்பு கொண்டோ என்னவோ அத்தனையையும் இழந்து விட்டார் அவரது வைர மோதிரத்தைத் தவிர. ஆறுமுகக் கவுண்டரின் ஆரம்ப கால வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அது பட்டினிகளால் நிறைந்திருந்தது. பசி என்று மட்டும் ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலகம் என்னவாயிருக்கும்? முழுச்சோம்பேறிகளாயிருந்திருப்போம். வயிற்றுக்காவே வாழ்க்கை ஓட வேண்டிய நிர்பந்தம் அவரிடத்தில் இருந்தது. மனித வாழ்வின் சூத்திரமாகவே பணம் அவருக்குப் பட்டது. எப்படி எப்படியோ வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகங்களை எல்லாம் தாங்கி அவர் சம்பாதித்தது ஏராளம். பணம் அவர் கைகளில் அகப்பட்டுக்கொண்டது. மனித வாழ்வின் சூத்திரம் மட்டுமல்ல அத்தனையும் அவருக்கு கிடைத்து விட்டதாகவே உணர்ந்தார். இனி காலம் அவர் கையில் என்கிற நினைப்பு தலைக்கேறி விட்டது. அழுக்குத்துணியோடு சுற்றித் திரிந்த காலத்தின் வடுக்களுக்கு மருந்தாய் ஆடம்பரத்தை பூசினார். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறேன் என்று போலியான ஒரு வாழ்க்கையினூடே இன்பத்தைக் கண்டு திளைத்தார். சென்னையிலிருந்து திரைக்கூத்தாடிகளை வரவழைத்து உடற்பசியைத் தீர்த்துக் கொண்ட அளவு உச்சகட்ட ஆட்டம் ஆடியவர். காமப்பசி மட்டும் தீர்ந்ததாகத் தெரியவில்லை, 4 ஏக்கர் நிலத்தை விற்று விட்டு சென்னைக்குப் போனார். அங்கும் எத்தனையோ சல்லாபங்கள், உல்லாசங்கள். அப்படியே போனது 4 ஏக்கரில் தொடங்கியது அடுத்து அடுத்து என அத்தனையும் இழந்த போதும் காமத்தின் உச்சநிலையை அவருக்கு அடையாதது மாதிரியோர் உணர்வு. காமத்தின் உச்சநிலையை அடையும் அவரது முயற்சிக்கு இந்த பங்களா அடமானத்திற்கு ஆளானதுதான் மிச்சம். எந்த நிலையையும் அடைய முடியவில்லை. அப்போதுதான் அந்த மதி மயக்கத்திலிருந்து மீண்டார்.  “சின்ன ஒரசலுக்குத்தான் இத்தனையும் போச்சா” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன் மீதே தனக்கான வெறுப்பில்தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆறுமுகக் கவுண்டர் எதைக் கொண்டு வந்தார் அதை இழப்பதற்கு, எல்லாம் இங்கிருந்தே பெறப்பட்டது.
தூக்கநாயக்கன்பாளையம் டாஸ்மாக்கிலிருந்து வாங்கி வந்த ஆஃப் ட்ரிப்பிள் எக்ஸ் ரம்மை மாதையனிடம் பகிர்ந்து கொள்ளும்படி ஒப்படைத்தான் மாதேஷ். பங்களாவின் பக்கவாட்டில் வேப்ப மரம் ஒன்று குடையாக கிளை பரப்பி நிழலையும் தூய காற்றினையும் வழங்கிக் கொண்டிருந்தது. கொளுத்தும் உச்சி வெயிலுக்கு அந்த மரத்தடியைத் தவிர வேறெந்த இடமும் சரிப்பட்டு வருவதாகத் தெரியவில்லை. மாதையனும் பழனிச்சாமியும் வேப்ப மர நிழலுக்குப் போனார்கள். வேப்பையின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்த காக்கை ஒன்று இட்ட எச்சம் பழனிச்சாமியின் தோள் பட்டையில் விழுந்து தெரித்தது. “அடக் கெரகத்த...” என்றவாறே வேப்பிலைகளை பிய்த்து அதன் மூலம் எச்சத்தை சுத்தம் செய்தார். பங்குனி வெயிலின் உக்கிரத்துக்கு இந்த வேப்பமரத்தடி முழு ஆறுதலையும் தந்தது. அதன் மெல்லிய காற்று அப்படியே வருடி விடுவது போன்றொரு உணர்வில் இருவரும் ரம்மை பங்கிடத் துவங்கினர். பாட்டிலிலிருந்து வெளியே கொட்டும் அந்த கருப்பு திரவத்தை சுவைத்து விடத்தான் எத்தனை பாடு.
“தப்பட்டை பாத்து அளவு சரியா இல்லைன்னா எனக்கு மசக்கோபம் வந்துடும்”
“பழனி நா ஊத்தினா படியில அளந்து ஊத்துற மாதிரி கொஞ்சமும் மாறாது நீ வேணா பாத்துக்க” என்றபடியே முதல் ரவுண்டை யூஸ் அண்ட் த்ரோ டம்ளரில் ஊற்றிய மாதையன் கையில் எடுத்து முகர்ந்து பார்த்து முகம் சுளிர்த்தார்.
“பழனி.. என்னதிது..”
“ஏந்தப்பட்டை”
“மட்டமான சரக்கைக் கொடுத்துப்போட்டானுகளாட்டிருக்குதே”
“அட.. ஆமா...65 ரூவா சரக்கைத்தான் கொடுத்திருக்கானுக”
“குதிரைக்கு ஊத்துறதையெல்லாம் நம்ம தலையில கட்டி உசுர வாங்குறாங்க” என்று ஏசியபடியே கண்ணை மூடிக்கொண்டு டம்ளரை காலி செய்த மாதையன் நாக்கை வெளியே நீட்டி “ஏக்..ஏக்” என்றார். உள்ளுக்குள் இருந்து குமட்டிக் கொண்டு வந்ததால் நெஞ்சின் மீது கை வைத்து தடவிக்கொடுத்தபடி இருந்தார்.
“பழனி... உனக்கொன்னும் பண்டலியா”
“அட...நம்பளை இது என்ன பண்ணிடப் போகுது. நானெல்லாம் பட்டை சாராயத்தையே சூட்டோட குடிச்ச ஆளாக்கும்”
“ரொம்பத்தான் பெருமை பேசாத... அந்த மாதேஷ் கண்டாரோலி பையனுக்கு நல்ல சரக்கு கூட வாங்கத் தெரியாதா? பிச்சக்கார நாயி..”
“அட உடுக்கிரகத்த... உனக்கென்ன மிலிட்டிரி சரக்கா குடுப்பாங்க... ”
“குடிக்கிற மாதிரி குடுத்தா போதுமே... நானெல்லாம் எப்பப் போனாலும் எம்பது ரூவாய் சரக்குத்தான் வாங்குவேன் வேணா நம்ம சாராயக்கடை சண்முகத்தைக் கேட்டுப்பாரு. உன்னை மாதிரி கிடையாது தெரிஞ்சுக்க” என்றார் மாதையன்.
“உன் லட்சணம் எனக்கு தெரியாது பாரு... சரி.. வுடு கஷ்டப்பட்டு இந்தக் கெரகத்தை ஏன் குடிக்காட்டி? நானே குடிச்சுக்கிறேன்” என்று பாட்டிலைத் தொட்டார் பழனிசாமி.
“யோவ்... எடுய்யா கைய்ய... வெவரமான ஆளுதாய்யா நீயி.. அசந்தாப்ல ஆட்டையப் போடப்பாக்குறே பாரு” என்ற மாதையன் அடுத்த ரவுண்டை சரிசமமாகப் பங்கிட்டு பாட்டிலை காலி செய்தார். முதல் ரவுண்டில் வந்த உமட்டல் தற்போது இல்லை முன்பைக் காட்டிலும் குதிரைக்கூத்துகிற ரம்மின் வீரியத்தை மாதையன் புரிந்து கொண்டது போல அவரது தலை சுழன்றது.
“தப்பட்டை...என்ன கவுந்துடுவியாட்டிருக்கு...”
“நா...செத்துப் பொழைச்சவண்டா... எமனெ பார்த்து சிரிச்சவண்டா...” நெஞ்சு நிமிர்த்தி பாடினார் மாதையன்.
“ஒனக்கு ஏறிக்கிச்சு”
“ராமெ ஆண்டாலும் ராவண ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல.. நாந்தாண்டா எ மனசுக்கு ராஜா..”
“அது சரி இந்த அளவுக்கு கூட ஏறிலின்னா அப்புறம் எதுக்கு இந்த கெரகத்தை குடிக்காட்டி”
“எடுடா மேளம்... அடிடா தாளம்... இனிதா கச்சேரி ஆரம்போ...” மாதையனின் பாட்டில் சற்றே உளறல்.. மாதையனின் மகிழ்ச்சி இது போன்ற பாடல்களினூடே வெளிப்படும். எப்போது அவர் வாய் நிறைய பாடுகிறாரோ அப்போது அவர் வாழ்வின் பிரதி பலனை அடைந்து கொண்டிருக்கிறார் என பொருள் கொள்ளலாம். மாதையனின் பாட்டு பழனிச்சாமிக்கு வாடிக்கையாகிப் போன ஒன்றுதான். மாதையனை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்த பழனிச்சாமி தானே சுற்றித்திரிந்து பிய்ந்து போன தென்னை ஓலைகளை கொண்டு வந்து நெருப்பு மூட்டினார். நெருப்பில் பறையைக் காட்டி சூடேற்றும்போது பறை நன்கு முறுக்கேறும். பிறகு அடிக்கிற அடி ஒன்றொன்றும் இடி மாதிரி கேட்கும். பழனிச்சாமி தன் பறையை தீயில் இட்டுக்காட்டத் தொடங்கினார். பாடுவதை நிறுத்தி விட்டு மாதையனும் வந்து தன் பறையை தீயில் காட்டி சூடேற்றினார்.
“பழனி... கவுண்டரு பாவம் மெட்ராஸ் கட்டி போய் படுத்து எந்திரிச்சு எல்லாத்தையும் நாசமாக்கிப்புட்டாப்ல போ...” என்றார் மாதையன்.
“நீ வேணா ராசாத்தியை லிங் பண்ணி வுட்ருந்தீன்னா... நீயும் நாலு காசு பாத்திருக்கலாம்”
“கொன்னே புடுவேன் என் ராசாத்திய நீ என்னன்னு நெனைச்ச” மாதையனின் பேச்சில் கோபம் கலந்திருந்தாக தெரியவில்லை.
“உடு தப்பட்ட அளவுக்கு மீறி ஆடவே கூடாது பாத்துக்க”
“அதான் கரெக்டு நானெல்லாம் ராசாத்தியைத் தவித்து யாரையாச்சும் தொட்டிருப்பனா? நீ கூட வள்ளியம்மாகிட்ட அடிக்கடி போய்ட்டு வர்றத நானே பார்த்துருக்கேன்” என்றார் மாதையன் பழனிச்சாமியிடம்.
“உடு தப்பட்டை நீ யோக்கியன்னு ஒத்துக்குறேன், அதுக்காக எல்லா குட்டையும் கிளறாத” என்றார் பழனிச்சாமி.
எல்லா எழவு வீட்டிலும் கோட்டித் துணி போடச் சொல்வதிலும் பிணத்தை எடுக்கச் சொல்வதிலும் குறியாக இருக்கும் ஆட்கள் தவறுவதில்லை. அப்படித்தான் அங்கும் ஆறுமுகக்கவுண்டருக்கு கோட்டித்துணி போர்த்தச் சொல்லி அறிவிக்கவே ஆளாளுக்கு கிளம்பிப் போய் போர்த்தத் தொடங்கினர். கோட்டித் துணி போர்த்திய மறுகணமே ஜவுளிக்கடைப் பாலிதீன் பையை தூக்கி வீசியதால் சன் ரெடிமேட்ஸ் கடை கவர்கள் மண்ணிலிருந்த படியே கடையை விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தன.
“டேய்.. மாதேஷூ.. எங்கடா அவனுக சரக்கப்போட்டுட்டு கவுந்துட்டானுகளா? தூக்குற நேரமாச்சு போய் கூட்டியா..” கூட்டத்திலிருந்து குரல் வரவே வேப்பமரம் நோக்கிப் போனான் மாதேஷ்.
“தப்பட்டை சட்டுபுட்டுன்னு வா பாக்கலாம் கவுண்டரைத் தூக்கறாங்களாம்” என்ற மாதேஷின் அதிகாரக் குரலுக்கு இணங்க மாதையனும் பழனிச்சாமியும் அரைபோதையில் தோள் பட்டையில் மாட்டிக்கொண்டு வாசலுக்கு சென்றனர்.
மாதையன், பழனிச்சாமியின் கொட்டுச்சத்தத்தை வைத்தே ஆறுமுகக்கவுண்டரைத் தூக்கப்போகிறார்கள் என்பதை ஊரே அறிந்தது. பாடையில் ஏற்றப்பட்டு அவர் சுடுகாடு நோக்கி கொண்டு செல்லப்பட்டார். என்னதான் 65 ரூபாய் சரக்காக இருந்தாலும் ஒரு வித தள்ளாட்டத்தைத் தந்து மாதையனை குதூகலப்படுத்தியிருந்தது அந்த ரம். அதன் உற்சாகத்தில் பல்லை வெறுகிக்கொண்டு தப்படிக்கலானார் மாதையன். தப்படித்து ஆட்டமாடிய படியே வந்து கொண்டிருக்க அவர்களின் அருகே வந்த மாதேஷ் “சத்தம் போதாது.. இன்னும்...இன்னும்” என்று குடைய ஆரம்பித்தான்.
தூவப்பட்ட பூக்களில் கலந்திருந்த சில்லரைக்காசுகள் சாலையில் பட்டுத் தெரித்தன. வழி நெடுக நின்றிருந்த சிறார்கள் அந்த காசுகளை எடுக்க முற்பட்ட போது அவர்களின் தாயார்கள் அந்தக்காசெல்லாம் எடுக்கக்கூடாது என்று எச்சரித்தனர்.  ஆறுமுகக் கவுண்டரின் பிணம் கடந்து சென்றதும் அங்குள்ள வீடுகளில் இருந்தவர்கள் சொம்புத் தண்ணீரால் சாலையை நனைத்தபடி இருந்தனர்.
கிரங்கடிக்கும் போதையில் தப்புச்சத்தமும் சேர்ந்ததால் தன்னையறியாமல் ஆடிக்கொண்டிருந்தார் மாதையன். பழனிச்சாமிக்கு ஓரளவுதான் போதை ஏறியது என்பதால் அவரிடத்தில் நிதானம் தென்பட்டது. வழியில் இருந்த சிறுவர்கள் பலரும் இந்த ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடிக்கொண்டிருந்தனர். இதுவல்லவோ இசை என்று மாதையனுக்கு பெருமையைக் கொடுத்துக் கொண்டே வந்தது இந்த தப்புச்சத்தம். இதற்கு மேலும் தப்பில் சத்தம் வராது என்பதை சொல்லிப் புரியவைக்கும் நிலையில் மாதையனும் இல்லை அவர்களும் இல்லை.
ஆறுமுகக் கவுண்டர் மண்ணோடு மண்ணானார். அத்தனை காரியங்களையும் முடித்து விட்டு சாயங்காலம் ஐந்து மணிக்கெல்லாம் கூட்டம் வீடு திரும்பியது. மாதையனுக்கும், பழனிச்சாமிக்கும் பந்தியெலெல்லாம் இடம் ஒதுக்கப்படவில்லை. ஒரு ஓரத்தில் தரையில் அமர வைக்கப்பட்டு கறிச்சோறு போடப்பட்டது. மாதையனைக் குத்திக்குடைந்து கொண்டிருந்த பசியில் சோறு போட்டு கொழம்பு ஊற்றப்பட்ட அடுத்த கணமே அள்ளி வாயில் திணித்தார்.
“தப்பட்ட ஒனக்குத்தான் அந்த சோறு எவனுந் தூக்கிட்டுப் போயிட மாட்டான் பாத்து பொறுமையாத் திண்ணு ஒன்னும் அவசரமில்லை” என்று மாதேஷ் சொன்னதும் வாய் நிரம்ப சோற்றை அடக்கிக் கொண்டு தலையை மட்டும் ஆட்டினார் மாதையன்.
எல்லா பரிபாலனைகளும் முடிந்த பின்னர் வேப்ப மரத்தின் கீழ் காத்திருந்தவர்களை நோக்கி மாதேஷ் வந்தான். வந்தவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து கைவிட்டு மாதையன், பழனிச்சாமி கையில் ஆளுக்கு நூறு ரூபாய்த் தாளைத் திணித்தவன் “ கெளம்புங்க” என்றபடி தலையை ஆட்டினான்.
“நூறு ரூவா தர்றீங்க இது என்னத்துக்கு பத்துமுங்க” என்றார் மாதையன்.
“யோவ்.. உங்களுக்கெல்லாம் பாட்டில் வாங்கி ஊத்தியுட்டு வயிறு நெம்ப கறி சோறு போட்டாலும் இப்படித்தானய கேப்பீங்க”
“அதுக்கு”
“என்ன நொதுக்கு மரியாதையா கொடுக்கறதை வாங்கிட்டு போயிடுவயா அத உட்டுப்போட்டு”
“தப்பட்ட இவருகிட்ட நமக்கென்ன பேச்சு நாம கவுண்டரு மகன்கிட்ட பேசிக்குவோம் வா” பழனிச்சாமி சொன்னதும் அடுத்த கணமே மாதேஷ் அவர்கள் கையில் மேலும் நூறு ரூபாயைத் திணித்து “தொலையுங்க” என்றான்.
“எங்களுக்கு ஒரு எழவுக்கு முந்நூறு ரூவா தர்றாங்க நீங்க எரநூறக் குடுத்து என்ன செய்ய” மாதையனும் கடிந்தார்.
“அதான் சரக்கு வாங்கிக் கொடுத்ததுக்கு சரியாய்போச்சு கெளம்புங்கடா இங்கிருந்து உங்ககூட பெரும் ரோதனையாப் போச்சு” மாதேஷ் அதட்டலானான்.
“பழனி அதான் சரி நாம கவுண்டரு மகண்டயே பேசிக்குவோம் வா” என்று மாதையனும் அழுத்தமாய்க் கூற வேறு வழியின்றி மேலும் ஆளுக்கு ஒரு நூறைக் கொடுத்து விட்டு கோபமாய் அங்கிருந்து நகர்ந்து சென்றான் மாதேஷ்.
சூரியனின் மங்கலான ஒளி ஒத்தப்பனமரக்காட்டின் மீது படர்ந்திருந்தது. மாலைப்பொழுதை தின்று கொண்டு இரவு எட்டிப்பார்க்கிற தருணத்தில் ஒத்தப்பனமரக்காட்டின் நடுவீதியில் மாதையனும் பழனிச்சாமியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒத்தப்பனமரக்காடு தன் அத்தனை தேவைகளுக்கும் தூக்கநாயக்கன்பாளையத்தை சார்ந்து கொண்டிருக்கும் குக் கிராமம். ஒத்தப்பனமரக்காட்டுக்கென பேருந்து வசதியே கிடையாது. கோபிச்செட்டிப்பாளையமோ, சத்தியமங்கலமோ செல்ல வேண்டும் என்றால் தூக்கநாயக்கன்பாளையம் அண்ணா சிலை பேருந்து நிறுத்ததுக்குத்தான் போயாக வேண்டும். மாதையனும், பழனிச்சாமியும் தப்பட்டை அடிப்பதற்காக மட்டும் வெளியூர் செல்வார்கள். காசு புழங்கும் நேரங்களில் தூக்கநாயக்கன்பாளையம் ஒயின்ஷாப்புக்கு சென்று விடுவார்கள். மற்றபடி லக்கி டீ ஸ்டால்தான் அவர்களின் பொழுதுபோக்கு கூடாரம்.
“பழனி கொஞ்சமில்லைன்னா நம்மளை அந்த மாதேஷ் தா..ழி ஏமாத்திருப்பான்”
“அவங்கப்பன் புத்திதான அவனுக்கும் வரும். பத்துப் பாஞ்சு குடும்பத்தோட பொழப்பைக் கெடுத்தவன் அவங்கப்பன்னா இவன் ஊர்ல இருக்கிற ஒருத்தன் குடியையும் உட்டு வெக்க மாட்டாம் போலத் தெரியுது. சின்னக் கவுண்டர்கிட்ட போறேன்னு சொன்னதும் அவம் மூஞ்சியப் பாத்தியா?”
“ஆமாம... பேயறைஞ்ச மாதிரி நின்னுட்டான் அந்தப் பேப்பயல்..  அவங்குடுக்குற சாராயத்துக்கு நாம நாய் மாதிரி வாலாட்டிட்டு போறதாலதான் அவ்வளவு எலக்காரமாப் போச்சாட்டிருக்கு அவனுகளுக்கு”
“அப்பிடித்தாந் தெரியுது தப்பட்டை சாராயத்தையெல்லாம் கணக்கா பேசுறானுக பாரேன்”
“நாம தப்பட்டை அடிக்கலைன்னா நாயக்கமாருகளெல்லாம் விசேஷமே நடத்த மாட்டாங்க. சாவு வூட்டுலயும் தப்பட்டை அடிக்கிறத சடங்காவே வெச்சிருக்கானுக நாமெல்லாம் ஏன் ஒரு நாளைக்கு ஸ்ட்ரைக் பண்ணக்கூடாது” என்றார் மாதையன்.
“நாம என்ன கவர்மெண்டு ஆபிஸர்களா ஸ்ட்ரைக்கு பண்ணதும் சம்பளத்தை ஏத்திக்கொடுக்க”
“இல்ல பழனி... பொணத்தக் கொண்டு போய்கிட்டிருக்கும்போது நடு ரோட்டில நிறுத்தி ஸ்ட்ரைக் பண்ணலாம் சத்தமே இல்லாம அவனுக பொணத்தைக் கொண்டி எரிக்கட்டும். அதைக்கூட வுடு திருவிழா நடக்கும்போது பாதியிலேயே நிறுத்திட்டா அவனுக திருவிழா ஒன்னத்துக்கும் ஆகாம போயிடும்” என்று விறுவிறுப்பு காட்டினார் மாதையன்.
ஒத்தப்பனமரக்காட்டின் முக்கில் இருக்கும் மூர்த்தி கடைக்கு வந்ததும் பழனிச்சாமியிடமிருந்து விடைபெற்றார் மாதையன். கோல்டு ஃப்ளேக் போர்டின் கீழே மூர்த்தி மளிகை என்று எழுதியிருந்த அந்த கடைக்குள் நுழைந்த மாதையன்
“மூர்த்தி ரேசன் அரிசி ஒரு நூறு ரூவாய்க்கு கொடு”
“தப்பட்ட இதென்ன ரேசன் கடையா மெதுவா கேளு... நீயே என்ன கோத்துட்டு போயிடுவ போலிருக்கே”
“ஓ... நீ திருட்டுத் தனமாத்தா வித்துகிட்டிருக்கியா”
“இல்லையே கவர்மெண்டுல ஆர்டர் வாங்கி வித்துகிட்டிருக்கேன்... நல்ல ஆளுய்யா நீயி.. அப்புறம்”
“ஒரு கட்டு பத்தா நம்பர் பீடி”
“ம் அப்புறம்.. ஆமா பழசு ஒரு நாலு ரூவா பாக்கியிருக்கில்ல”

எல்லாம் வாங்கிக் கொண்டு 25 கிலோ அரிசி மூட்டையை சுமந்த படி மாதையன் வீடு நோக்கி நடக்கலானார். வீட்டுக்குள் நுழைந்தவர் பத்தா நம்பர் பீடியை பற்ற வைத்து புகை விட்டு அதே தீக்குச்சியில் சுள்ளிகளையும் எரிய வைத்து உலையில் அரிசியைப் போட்டார் மாதையன். உலை கொதித்தது மனசு குதூகலித்தது. 



நடு வீதிதான் ஒத்தப்பனமரக்காட்டின் முதுகெழும்பு போன்றது. நடு வீதியிலிருந்துதான் பல வீதிகள் பிரியும். ஒத்தப்பனமரக்காட்டில் கடைகண்ணிகளெல்லாம் இருப்பதால் சனங்கள் தட்டுப்படுவதே இந்த நடுவீதியில்தான். நடுவீதிக்கு பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலை பராமரிப்பின்றி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாய் காட்சி தரும். நடுவீதியின் சாலையில் நேரே சென்றால் அது தூக்கநாயக்கன்பாளையத்தில் முட்டும். நடுவீதி ஒன்றும் அவ்வளவு பெரியதல்ல ஒரு குக் கிராமத்தின் இயல்பில் அப்படியே இருக்கும். நடுப்பகுதியில் மூர்த்தி மளிகைக்கடை இருக்கும் அதற்கடுத்தபடியாய் ராமாத்தாள் பெட்டிக்கடை, அதற்கும் கொஞ்சம் தள்ளி பாபு சைக்கிள் கடை இருக்கும். இவற்றையெல்லாம் தாண்டி தெருவின் கடைக்கோடியில் லக்கி டீ ஸ்டால் இருந்தது. துருப்பேறிய தகர போர்டில் லக்கி டீ ஸ்டால் என்ற சிவப்பு எழுத்துக்கள் மங்கிப்போய்த் தெரியும். காசு குறைவாகட்டும் என்று எழுதத்தெரியாத எவனையோ வைத்து எழுதியது போலத்தான் அதன் எழுத்துக்கள் இருக்கும். கடை ஒன்றும் அவ்வளவு பெரிதாக இருக்காது. கடை முழுவதும்  தென்னை ஓலைகளால் வேயப்பட்டிருக்கும், கடைக்கு வெளியே ஒரு வேப்ப மரம், அது நிழலை மட்டுமின்றி தன் காற்றால் அனைவரையும் வசீகரப்படுத்திகொண்டிருக்கும். மரத்திலான பெஞ்சுகள் கடைக்கு உள்ளேயும் கடைக்கு வெளியே வேப்ப மர நிழலிலும் போடப்பட்டிருக்கும். கடையின் மூங்கில் தாழ்வாரங்களில் தொங்க விடப்பட்டிருக்கும் வரிக்கி, பன், வாழைப்பழங்கள் ஆகியவை அதை டீக்கடை என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும். ஒத்தப்பனமரக்காட்டில் இருக்கும் ஒரே டீக்கடை இதுதான். ஆறு மாதங்களுக்கு முன்புதான் இங்கு வேறொரு டீக்கடை துவங்கப்பட்டது. அது துவங்கப்பட்ட வேகத்திலேயே மூடப்பட்டதற்கு பரதேசி டீ ஸ்டால் என்கிற அதன் பெயரும் கூட ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். ஒத்தப்பனமரக்காட்டில் உள்ள பல அறிவு ஜீவிகள் தங்களுக்கான விவாதத்தினை லக்கி டீஸ்டாலில் தினசரியை முன் வைத்துதான் தொடங்குவார்கள். பக்கத்து வீட்டு சங்கதிகளில் ஆரம்பிக்கும் இந்த பேச்சுக்கள் தேசிய ஊழல் குற்றங்கள் தொட்டு பேசப்படும்.  இந்த அறிவு ஜீவிகள் ஏதோ அரசியலமைப்பை எல்லாம் கரைத்துக் குடித்து விட்டு உட்கார்ந்திருப்பதாக கனவிலும் நினைக்க வேண்டாம். எல்லாம் செய்தித்தாளில் வருகிற செய்தியோடு தங்களது அனுமானங்களையும் கலந்து அதை சபையில் தெரிவித்து தன்னை ஒரு புத்திசாலியாக காட்டிக் கொள்பவர்கள்தான் இவர்கள். காந்தியை சுட்டது யாரென்றால் சற்றும் யோசிக்காமல் நேதாஜி என்று சொல்வார்கள். பாவம் இந்த கேள்வியை அவர்களிடத்தில் கேட்போருக்கு நாதிராம் கோட்சேவின் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தென்னை ஓலைகளால் வேயப்பட்டிருப்பது மட்டுமின்றி வேப்ப மரக்காற்றும் கிடைத்து குளுகுளுவென இருப்பதால், தினசரி நான்கு டீக்களை வாடிக்கையாக்கிக் கொண்டு லக்கி டீ ஸ்டாலிலேயே இது போன்ற அறிவு ஜீவிகள் குடியிருக்க ஆரம்பித்து விட்டனர். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஏதோ நாட்டில் என்னதான் நடக்கிறது என தெரிந்து கொள்ளும் நோக்கில் “என்ன செய்தி போட்டிருக்கான்” என அறிவு ஜீவிகளிடத்தில் கேட்பர். அப்போது இவர்களுக்குள்ளே அளவு கடந்த பெருமையும், ஆணவமும் தலைகாட்டும். தன்னை ஒரு மேதாவி என இது போன்ற படிப்பறிவில்லாதவர்களிடம் மட்டுமே காட்டிக் கொள்ள முடியும் என்ற உண்மை இவர்களுக்கு தெரியவே தெரியாது என்பதுதான் வருத்தமான செய்தி. ஊருக்கு நாலு சிவப்புத் துண்டுக்காரர்கள் இருக்கவே செய்கிறார்கள். அது போல இங்கு இருக்கும் சிவப்புத் துண்டுக்காரர்கள் டீக்குடிக்க வந்து விட்டால் போதும் உடனே அறிவு ஜீவிகள் வேண்டுமென்றே எதையேனும் கிளறிவிட்டு அவர்களிடம் வாதம் புரிவதற்காய் முற்படுவர். “காரல் மார்க்ஸ் சொல்கிற பொருள் முதல் வாதத்தை அடிப்படையில் வெச்சுக்கிட்டம்ணா” என்று சிவப்புத் துண்டுக்காரர்கள் பேச்சைத் துவக்கினால் அறிவு ஜீவிகள் அப்படியே அணைந்து விடுவார்கள். செய்தித்தாள்களின் கட்டுக்குள் அடங்கிய வார்த்தைகளை மட்டுமே படித்து விட்டு தங்களை அரசியல் மேதாவிகளாக கற்பனை செய்து கொள்ளும் அவர்களிடம் பொருள் முதல் வாதத்தை பற்றிக்கேட்டால் எந்த தேதியில் எந்தப் பத்திரிக்கையில் வந்திருக்கிறது என்று நம்மைத் திருப்பி கேள்வி கேட்பார்கள். கிராமத்து டீக்கடைகளை வெறும் டீக்கடைகளாக மட்டுமே பார்க்க வேண்டாம் அங்குதான் சர்வதேச அரசியல் கூட பேசப்படுகின்றன. லக்கி டீ ஸ்டால் என்கிற இந்த பெயரைக் கேட்டதும் நமக்கு வரும் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்யாகிப்போகும். வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தொலைத்தவன், கடையின் பெயரிலாவது அது இருக்கட்டுமே என்கிற நப்பாசையில் உருவானதுதான் இந்தப் பெயர்.  பொருளே இல்லாமல் நாம் பொருள் படுத்திக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல்தான் டீக்கடை ராசுவுக்கு அளவற்ற காதல் இருந்தது. வாழ்வின் அத்தனை தருணங்களும் அதிர்ஷ்டத்தினாலேயே நகர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ராசுவை மென்று தின்றது. பங்களாப்புதூர் மேல்நிலைப்பள்ளியில் ராசு படித்துக் கொண்டிருக்கும்போதுதான் இந்த அதிர்ஷ்டத்தின் மேலான காதல் துளிர் விட்டிருக்க வேண்டும். பங்களாப்புதூர் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் பல மாணவர்கள் வந்து பயின்று செல்வதால் காலையும், மாலையும் பள்ளியின் வாசல் பரபரப்புடனே காணப்படும். பள்ளியின் வாசலில் தின்பண்டங்கள் மட்டுமில்லாது விஜய், அஜித் படங்கள் போட்ட ஸ்டிக்கர்கள். சச்சின் டெண்டுல்கர் போஸ்டர்கள் என மாணவர்களைக் கவரும் அத்தனையையும் பல ஊர்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து விற்றுச் செல்வர். அப்படித்தான் ஒரு நாள் அங்கு லங்கரக்கட்டை உருட்டப்பட்டது. கோவில் திருவிழாக்களில் மட்டுமே பெரும்பாலும் உருட்டப்படும் இந்த லங்கரக்கட்டை மாணவர்களின் ஆர்வத்தைக் கிளறி விட்டு சில்லரைகளை வாரிச்செல்லும் நோக்கோடு அங்கு உருட்டப்பட்டது. மாணவப்பருவத்தில் எல்லாமே வேடிக்கைதான். லங்கரக்கட்டை உருட்டப்படுவதைப் பார்க்க மாணவர்கள் பலரும் கூடி நின்றிருந்தனர். மாணவர்களில் சிலர் ஹார்டின், டைமண்டு என தன் உத்தேசங்களுக்கேற்ற கட்டங்களில் காசு வைத்து நெஞ்சின் மீது கைவைத்து குல சாமியை வேண்டிக்கொண்டே இருந்தனர். மற்ற மாணவர்கள் எல்லாம் யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர். லங்கரக்கட்டை உருட்டப்பட்டு அதில் சிலரின் வேண்டுதல் பலிக்கவில்லை அது கடவுளின் தவறல்ல. வேண்டுதல் பலித்ததாக நினைத்த பரிசு விழுந்த மாணவன் வெறுமனே திரும்ப மாட்டான். ஜெயித்த காசை மீண்டும் கட்டங்களுக்குள் போட்டு மீண்டும் வேண்டி காசை இழந்த பிறகு வேண்டுதல் பலிக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு போவது வாடிக்கை. பள்ளியில் கபடி விளையாடி முடித்து விட்டு வந்து கொண்டிருந்த ராசுவும் அந்தக்கூட்டத்தில் ஐக்கியமானான். அவன் பார்த்தது பரிசு விழுபவனை மட்டும்தான். காசை இழந்து விட்டுத் தேம்பித் தேம்பி அழுது கொண்டு போனவர்கள் யாரும் அவனது கண்களுக்கு தட்டுப்படவேயில்லை. அவனுக்கும் ஆர்வம் வந்துவிட்டது, தன் குல சாமியின் மகிமையை இந்நேரத்தில் சோதித்துப் பார்க்கும் முயற்சியில் அவனும் இறங்கினான். தட்டுத்தடவிப் பார்த்ததில் பொரி உருண்டை வாங்குவதற்காக வைத்திருந்த எட்டணா தட்டுப்பட அதை ஹார்டினில்  வைத்தான். கட்டை உருட்டப்பட்டது, ஹார்டின் விழுந்ததால் 50 பைசாவின் இரு மடங்கு ஒரு ரூபாய் கூடுதலாக கிடைத்தது. அந்த ஒரு ரூபாயைக் கொண்டு அடுத்து அவன் தேர்ந்தெடுத்தது ஸ்பேடை, மீண்டும் கட்டை உருட்டப்பட்டது இப்போதும் அவனுக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. ஒரு ரூபாயின் இரு மடங்கு இரண்டு ரூபாய். அடுத்து அவன் ஹார்டினையே தேர்ந்தெடுத்தான் மீண்டும் அவனுக்கே சொந்தமாகிப்போனது அதிர்ஷ்டம். அவன் கையிலே இரண்டு ரூபாய்க்கு நான்கு ரூபாய் இனாம் கொடுத்து விட்டு நேரமான காரணத்தால் லங்கரக்கட்டைக்காரன் இடத்தை காலிசெய்தான். எட்டணா ஏழரை ரூபாயாய் உருமாறியது அதிர்ஷ்டத்தால் மட்டுமே சாத்தியம் என்கிற நம்பிக்கை அவனுக்குள் அப்போதுதான் வேர்பிடித்தது. அன்றிலிருந்து வாரம் தோறும் வெள்ளிக்கிழமை லங்கரக்கட்டைக்காரனை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து போனான். தீபாவளி சமயத்தில் ராமாத்தாள் பெட்டிக்கடையில் பரிசு அட்டை தொங்க விடப்பட்டிருந்தது. பரிசுச் சீட்டு கிழித்ததில் அவனுக்கு லட்சுமி வெடி, அனுகுண்டெல்லாம் கிடைத்தது. நாட்கள் நகர்ந்தது, அதுவரை அவனுக்கு துணைநின்றதாய் கருதிக்கொண்டிருந்த அதிர்ஷ்டம் ஏனோ இவன் சூதாட்டத்தில் லட்சங்களை இழந்த போது மட்டும் கிட்டவே வர மறுத்து தூர விலகி நின்றது. ஒன்னத்துக்கும் உதவாத ஓட்டாண்டி ஆனான். இப்போதும் யாரேனும் ராசுவைப் பார்த்து “அதிர்ஷ்டக்காரண்டா நீயி” என்று சொல்லி விட்டால் போதும் அவனுக்குள் எங்கிருந்துதான் அந்த வார்த்தைகள் வருமோ தெரியாது. அவனது அகராதியில் அவன் வெறுக்கும் வார்த்தை அதிர்ஷ்டமாகத்தான் இருக்கிறது.
தினத்தந்தி பேப்பரில் செய்திகளை படிக்க முடியவில்லையேனும் சினிமா நடிகைகளின் படங்களைப் பார்த்தேனும் ஆறுதலடையும் முயற்சியில் அங்கு சில பெருசுகள் ஈடுபட்டிருந்தனர். அறிவு ஜீவிகள் இருவர் உட்கார்ந்து கொண்டு ஈரோட்டுப்பக்கம் நடந்த கள்ளக்காதல் கொலையைப் பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். தட்டுக்குச்சி போலான உடலில் துருத்திக் கொண்டு நிற்கும் மார்புக்கூட்டைக் காட்டியபடியே வெற்றுடலுடன் துண்டை மட்டும் போட்டுக்கொண்டு மாதையன் லக்கி டீ ஸ்டாலுக்குள் நுழைந்தார்.
“ராசு... சூடா ஒரு டீ..” என்று சொன்னபடியே பெஞ்சில் உட்கார்ந்தார்.
“தர்லாம்... தர்லாம் என்ன பழைய பாக்கி அறுவத்தைஞ்சு ரூவாய் இன்னுந் தரக் காணாமாட்டிருக்கே”
“எல்லாம் தரலாம் ராசு... ”
“தர்லாம்னா... எப்ப?”
“நம்ப சம்பாத்தியம் பிச்சைக்காரன விட மோசமாவல்ல இருக்கு”
“அப்படியொன்னும் தெரியலையே”
“மருதமலை கோவிலுக்கு அடிவாரத்துல உக்கார்ந்துகிட்டிருக்க பிச்சைக்காரன் நாளொன்னுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கறானாம். ஆனா நாம இங்க மாங்கு மாங்குன்னு தப்படிச்சாலும் எவன் தர்றான்” மன வேதனையைக் கூட சிரித்த வண்ணமே சொன்னார் மாதையன்.
“நேத்து கவுண்டரூட்டு எழவுல செமத்தியா பார்த்திருப்பியே”
“அட போ ராசு...”
“ஏன்.. என்னாச்சு”
“சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி கொடுக்க உடமாட்டான்ங்கிற மாதிரி அந்த மாதேஷ் பயல் இருக்கானே எங்க கிட்டயே ஆட்டையைப் போட்டுட்டான் தெள்ளவாரி நாயி”
“அவனொரு வெளங்காதவனாச்சே”
“ஆமாம... பொழச்சுச்சேரான் நம்ம காசுலாயாவது அவன் பொழச்சான்னு இருக்கட்டுமே” என்ற மாதையன் காதின் இடுக்கில் செறுகியிருந்த பத்தா நம்பர் பீடியை எடுத்து பற்ற வைக்கலானார். சூடாக ராசுவிடமிருந்து டீ வரவே டீயின் கதகதப்பில் பீடியை இழுத்து விட்டு ஒவ்வொரு மடக்காய் குடித்தார்.
“நீ என்னதான் பழைய கணக்கைக் கேட்டு தொல்ல பண்ணாலும் ஒன் டீ அரும ராசு” காலி டம்ளரை வைத்த படியே சொன்னார் மாதையன்.
“இந்த சோப்பு போடுற வேலையெல்லாம் வேணாம்.. காசைக்குடுக்குற வழியப்பாரு எனக்கும் குடும்பங்குட்டிக இருக்கல்ல”
“உடு ராசு வேணா உங்க ஊட்டுல யாராச்சும் போயிட்டாங்கன்னா தப்படிச்சுக் கழிச்சுக்கலாம்”
“அட என்ன இது ஒங்கிட்ட கணக்க நேர் பண்றதுக்கு எங்குடும்பத்துல யாரோ ஒருத்தரை சாகவா சொல்ல முடியும்” என்று ராசு சொன்னவுடன் மாதையன் புன்முறுவல் பூத்தார். ராசுவும் இலேசாகச் சிரிக்க என்ன நடக்கிறதென்று புரியாமல் பேப்பரைப் படித்து (பார்த்து)க் கொண்டிருந்த பெருசுகள் சற்றே முகம் தூக்கிப் பார்த்தன.
ஈரோட்டுக் கள்ளக்காதல் பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த முனியப்பன் வாதத்தில் மும்மரத்தை கைவிட்டு மாதையனைப் பார்த்தான்.
“தப்பட்டை இப்பத்தா வந்தீங்களா”
“ஆமாமா... இப்படியே பேசிகிட்டுக் கெடங்க மனுசன் வர்றது கூடத் தெரியாம”
“அதாவதுங்க தப்பட்ட... நாங்கெல்லாம் ஒரு எஜிகேட்டட் பீப்பிள்ஸ் ஒத்தப்பனமரக்காட்டுல ஒக்காந்துகிட்டு ஒபாமாவைப்பத்தி பேசிக்கிட்டிருப்போருப்போம்”
“நீ சொல்றதே ஒன்னும் வெளங்கலடா தெளிவா சொல்லு”
“நாங்கெல்லாம் மெத்த படித்த மேதாவிகள்னு சொன்னங்க”
“என்னத்தடா படிச்சீங்க.... அவனாரு மாரிமுத்தா ரெண்டு பேரும் சேர்ந்தா வெளங்குன மாதிரிதா தெனத்திக்கும் நூஸ் பேப்பர படிச்சுப்போட்டு நீங்க பண்ற இம்ச கண இம்சையா இருக்குது” என்றார் மாதையன்.
“அதை விடுங்க தப்பட்ட, ஒபாமாதான் மறுபடியும் ப்ரசிடெண்ட் ஆயிருக்காராமா அதப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க” மாதையனை நக்கலடித்து மகிழ்ச்சி காணும் தொணி அவர்களிடத்தில் தென்பட்டது.
“எந்த ஊருக்கு ப்ரெசிடெண்ட் ஆயிருக்கான்” என்ற மாதையன் பதிலுக்காகவே காத்திருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். மாதையன் டீக்கடை ராசுவிடத்தில் “இவனுகளுக்கென்ன இன்னைக்கு அமாவாசை முத்திடுதாட்டிருக்கு” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
“ராசு ஒரு போட்டுக்க... ஆமா தீப்பெட்டி எங்க? ஓ..அங்கிருக்கா?” என்று கேட்டுக்கொண்டே கடைக்குள் நுழைந்தார் சின்னச்சாமி. ஆள் தட்டுக்குச்சி போலத்தான் இருப்பார். அவரது நல்ல உயரத்திற்கேற்ற உடல் இல்லாததால் நோஞ்சான் மாதிரியே காட்சி தருவார். கண்ணாடி அணிந்திருப்பார். இவரும் சிவப்புத்துண்டுக்காரர்தான். எந்நேரமும் கையில் ஏதேனும் புத்தகத்தை வைத்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருப்பார். அநேகமாக அந்த புத்தகங்களில் எல்லாம் புரட்சி நாயகர்களின் படங்கள்தான் அச்சிடப்பட்டிருக்கும். ஏதேதோ தலைப்புகளில் நூல் கொண்டு வருவார். அவரிடமிருந்து ஒரு சிலர் அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ படித்துப் பார்த்து விட்டு “தமிழ் மொழியில இவ்ளோ கஷ்டமான புக்கெல்லாம் இருக்கா?” என்று கேட்பர். இவருக்கு மட்டும் எப்படிய்யா இந்த புத்தகம் புரியுது என்கிற கேள்விகளும் எழுவதுண்டு. டீக்கடைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அறிவு ஜீவிகளில் பெரும்பாலானோர் இவரிடம் மூச்சு விடக்கூடத் தயங்குவர் ஏனென்றால் இவரிடம் தங்களது பருப்பு வேகாது என்பதனை நன்கே அறிந்து கொண்டதனால்தான்.  தீப்பட்டியை எடுத்து பீடியை பற்ற வைத்தார் சின்னச்சாமி. புகை உள்ளே சென்று வெளியே விட்ட சுகத்தில் மாதையனிடம்
“மாதையன்.. வணக்கம்” என்றார். மாதையனும் பதில் வணக்கம் வைத்தார். மாதையனுக்கு சின்னச்சாமி மீது அதீத மரியாதை உண்டு. குறிப்பான ஒன்று ஒத்தப்பனமரக்காட்டில் மாதையன் என்று யாரும் அவரைக் கூப்பிட மாட்டார்கள். தப்புடனே புழங்கித் திரிவதால் அவரை தப்பட்டை என்றுதான் கூப்பிடுவார்கள். சின்னச்சாமி மட்டுமே மாதையன் என்று கூப்பிடுவார்.
“தூக்கநாயக்கன்பாளையத்துல நம்ப அமைப்பு சார்புல விழா ஒன்னு வெச்சிருக்கோம் நீங்கதான் வந்து தப்படிக்கோணும்”
“அதெல்லாம் பண்ணிப் போடலாமுங்க... என்னைக்குன்னு சொல்லவே இல்லைங்க..”
“வர்ற ஞாயித்துக்கெழமதான்”
“அப்ப கண்டிப்பா வந்தரமுங்..”
“அப்புறம் தொழிலெல்லாம் எப்படிப் போகுது”
“நம்முளதெல்லாம் தண்ணி பட்ட பாடுங்.. உங்குளுக்குத் தெரியாததுங்களா”
“அப்புறமே இதை அடிக்காட்டி”
“பரம்பரை பரம்பரையா செஞ்சுட்டு வர்றத அவ்ளோ சீக்கிரத்துல உட்ற முடியுமுங்களா?”
“அப்பிடின்னா... அதையே கட்டிக்கிட்டு அழவேண்டியதுதான்”
“நீங்களே இப்பிடிச்சொன்னா எப்படி”
“வேறென்னத்த சொல்லணுமுங்கிறீங்க”
“எங்களுக்கு எவனும் கூலி ஒழுங்கா கொடுக்க மாட்டேன்றா, அதுக்கு ஒரு போராட்டம் பண்ணுவீங்களா... அத உட்டுப்போட்டு”
“அதுக்கென்ன பண்ணிட்டாப் போச்சு...”
“அதப் பண்ணுங்க நாளப்பின்ன மகாராசனா இருப்பீங்க”
“பண்ணலாம் ஆனா அப்புறம் எந்த எழவுக்கும் உங்களைக் கூப்பிட மாட்டானுக”
“அப்படிங்ளா”
“எதைச் சொன்னாலும் நம்பிக்குங்க...அதாவதுங்க மாதையன் உங்களுக்கு ஏதாச்சும் வேணுமுன்னா நீங்கதாம் போராடணும். ஆமா.. உங்ககிட்ட ஒரு கேள்வி...செத்தவனுக்கு எதுக்கு தப்படிக்குறாங்கன்னு தெரியுமா?”
“அதானுங்.. சம்பிரதாயம், இது பல காலமா நடந்துட்டு வருதுங்களே”
“ சம்பிரதாயமுங்கிடையாது ஒரு மண்ணாங்கட்டியும் கெடையாது சம்பிரதாயம்னு சொல்லி ஒங்களை எல்லாம் ஏமாத்தி வெச்சிருக்கானுக...”
“சம்பிரதாயம்ங்கிறதெல்லாம் நம்ப முன்னோர்கள் சொன்னதுங்கோ அதெல்லாம் பழிக்கக் கூடாது”
“சரி சம்பிரதாயம்னு வெச்சுக்கிட்டாலும் அதை எதுக்காக பண்றாங்க”
“அது வந்து...” மாதையன் இழுத்த இழுப்பில் பதில் இல்லை என்பதை புரிந்து கொண்ட சின்னச்சாமி தொடர்ந்தார்.
“அந்தக்காலத்துல ஒரு மனுசன்  செத்துப்போயிட்டானா இல்ல உசுரோட இருக்கானான்னு உத்தேசம் பண்றதுக்காக தப்படிசாங்க. செத்துப் போயிட்டதா பாடையில ஏத்தி சுடுகாடு கொண்டு போகுற வழியிலயே தப்புச் சத்தம் கேட்ட அதிர்ச்சியிலெ நெறைய பேர் எந்திரிச்சுருக்காங்க ”
“அப்புடிங்களா?”
“என்ன நீங்களே இப்புடிக் கேட்டா... எத்தனை எழவுக்கு போயி அடிச்சிருப்பீங்க ஏன் அடிக்கிறோம் எதுக்காக அடிக்கிறோம்னெல்லாம் தெரிஞ்சுக்க மாட்டீங்களா... அதான சாராயம் குடுப்பானா மாட்டானாங்கிறதுலயே குறியா இருந்தா அப்படித்தான்” என்று சின்னசாமி சொன்னதும் மாதையன் தயக்கத்தில் மண்டையை சொரிந்தார்.
சின்னச்சாமி கைக்கு டீ வந்ததும் டம்ளரை உளற்றிய படியே இரண்டு மூன்று மடக்குகளை உள்ளே தள்ளினார். டீ உள்ளே சென்றதும் புத்துணர்வு கிடைத்து விட்டது போல அவரிடையே ஓர் உணர்வு தென்பட்டது. சிவப்பு நூலின் அருகாமை வரை தீ வந்து விட்ட படியால் பீடியை கீழே போட்டு செருப்பால் மிதித்து விட்டு மாதையனைப் பார்த்தார்.
“பறைய எப்படிக் கண்டுபிடிச்சாங்க சொல்லுங்க பாப்போம்” என்ற கேள்விக்கு மாதையனிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது.  சின்னச்சாமி இன்று நம்மை மடக்கி வைத்து கேள்வி கேட்பார் என்பதை அவர் தெரிந்து கொண்டா லக்கி டீ ஸ்டாலுக்கு வந்தார்?
“இது கூட தெரியாம இருந்தா எப்பிடி... நாம தோத்துப் போகுறதுக்குக் காரணமே நம்ம வரலாறை நாமளே தெரிஞ்சுக்காம இருக்கிறதுதான். அதனால அதையெல்லாம் தெரிஞ்சுக்கனும் மாதையன். தோல் இசைக்கருவிக்கு சொந்தக்காரன் தமிழந்தான் இது கூடத் தெரியாம நீங்க நாப்பது வருஷம் தப்படிச்சு என்னத்துக்காகுறது”
“இல்லைங்க பல தலைமுறைகளா தப்படிச்சுக்கிட்டு வராங்கன்னு எங்கம்மா எங்கிட்ட சொல்லிருக்கு. அது மட்டுமில்லாம நல்ல விசேஷங்களுக்கெல்லாம் தப்புதான் அடிப்பாங்கன்னும் அம்மா சொல்லுச்சு அதானுங்க” என்றார் மாதையன்.
“சரி இப்ப நான் சொல்றேன் தெரிஞ்சுக்கங்க, பலநூறு வருஷத்துக்கு முன்னாடி மாட்டைக் கொன்னு அதோட தோலை ஒரு மரக்கிளையில தொங்கப்போட்டானாம். அந்தத் தோல் நல்லா காய்ஞ்சு காத்தடிக்கும்போது மோதினதுல சத்தம் வந்துச்சாம் அப்படித்தான் இதைக் கண்டு பிடிச்சிருக்காங்க... அப்புறம் மனுஷங்களுக்கு தொல்லை கொடுத்துக்கிட்டிருந்த காட்டு விலங்குகளை இந்த பறையத்தான் அடிச்சு வெரட்டிருக்காங்க...” என்று சின்னச்சாமி சொன்ன வரலாறை கேட்ட போது மாதையனின் முகத்தில் ஈயாடவில்லை. இது தெரியாமத்தான் இத்தனை நாள் போட்டு லொட்டு லொட்டுன்னு அடிச்சுட்டுக்கிடந்தமாவென மாதையனுக்குள் எண்ண அலைகள் ஓடின. இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த டீக்கடை ராசு சின்னச்சாமியிடம்
“உங்ககிட்ட ஒருத்தர் சிக்கிடக் கூடாதே” என்றான் சிரித்தபடியே.
“ராசு அதிகமா பேசாத அப்புறம் தேயிலை உருவான வரலாறெப்படின்னு உங்கிட்ட பாடம் நடத்த ஆரம்பிச்சுடுவேன்” என்று சின்னச்சாமி பதில் தாக்குதல் தொடுத்தார்.
“ஆளை உடுங்கப்பா நீங்களாச்சு மாதையனாச்சு” என்றபடி ராசு கையெடுத்துக் கும்பிட்டான்.
“மாதையன்... தப்பப் பத்தி என்ன நெனைக்குறீங்க” மீண்டும் தொடர்ந்தார் சின்னச்சாமி.
“அது வந்துங்க... நம்ப பாட்டான் முப்பாட்டன் நமக்காக உட்டு வெச்சுட்டுப் போன சொத்துங்க”
“கரெக்டு.. அது சொத்து மட்டுமில்ல அது நமக்கான அடையாளம். நம்ம தமிழர்கள் இசையிலும் கொடிகட்டிப் பறந்திருக்காங்கங்கிறதுக்கான ஆதாரம்”
“சரிதானுங்..”
“இன்னும் என்னத்தைப் போயிட்டு சாவுக்கு கீவுக்கெல்லாம் அடிச்சிட்டுத் திரியுறீங்க... அந்தக் காலத்துல வெளிச்சமில்லைன்னு வண்ணான தீப்பந்தம் பிடிக்கச் சொன்னான். இப்ப கரண்டு வந்து தெருவுக்கு தெரு வெளக்கு வந்த பின்னாடியும் அதே மாதிரி தீப்பந்தந்தான் புடிக்க வெச்சிருக்காங்க. அப்படீன்னா என்ன அர்த்தம்”
“அது சம்பிரதாயமுங்க”
“நான் திரும்ப திரும்ப சொல்றங்க மாதையன், சம்பிரதாயமெல்லாம் கெடையாது. ஒங்களை எல்லாம் கடைசி வரைக்கும் இப்படியே இருக்க வெச்சுடலாம்னு பாக்குறாங்க புரியுதா?”
“புரியுதுங்..”
“புரிஞ்சுக்கிட்டா சரிதான்...சரி வர்ற ஞாயித்துக்கிழமை சாயங்காலம் தூக்கநாயக்கன்பாளையத்துக்கு வந்துடுங்க”
“சரிங்க”
குடித்த டீக்கு காசைக் கொடுத்து விட்டு சின்னச்சாமி இடத்தைக் காலி செய்தார்.
மாதையன் வாழ்க்கையின் பக்கங்கள் சோகங்களால் நிறைந்தது. மாதையன் தப்பைக் கையிலெடுத்தே ஒரு சோகத்தில்தான்... அதற்குப் பிறகும் அடுத்தடுத்த சோகங்கள், அந்த சோகங்களையும் அதற்கான ஆறுதல்களையும் இந்த தப்பட்டைதான் அவருக்குக் கொடுத்தது என்பதுதான் ருசிகரம்.
பதினான்கு வயதில் தொட்ட இந்த தப்பின் பிடி அறுபதை எட்டியும் இன்னும் தளரவில்லை. மாதையனுக்கும் தப்பிற்குமான உறவை வார்த்தைகளால் வகைப்படுத்த முடியாது. உறவுகளையும் கடந்ததொரு உன்னதம். தப்பு என்பது அவரது ரத்தத்திலே ஊறிய ஒன்றாகிப்போனது. பறையடிக்கும் தொழிலை அடிப்படையாக வைத்து பிரிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்தான் மாதையன். அவரது முந்தையை தலைமுறையினர் அனைவரும் தப்பாட்டாத்துக்காரர்கள்தான்.  மாதையனின் தந்தை தப்பாட்டத்தில் கைதேர்ந்தவர். அன்றைய காலகட்டங்களில் ஒத்தப்பனமரக்காடு சுற்றுவட்டாரத்தில் அவரது தப்புச்சத்தம் கேட்காத திருவிழாக்களோ, எழவுகளோ இருக்காது. அப்போதெல்லாம் ஒத்தப்பனமரக்காடு இன்றைக்கு இருப்பதைப் போன்று இல்லை. மாதையனின் சொந்த பந்தங்கள் பதினைந்து குடும்பங்கள் மட்டுமே அங்கு பூர்வீகமாக இருந்து வந்துள்ளனர். மாதையன் பிறந்து ஆறு மாத காலத்திலேயே அவரது அப்பா தங்கராசு ஏதோ ஒரு மோதலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக அம்மா லட்சுமி சொல்லியிருக்கிறார். அப்பா இறந்த தினத்திலிருந்து மாதையனுக்கு அம்மாவின் ஆதரவு தவிர்த்து வேறெந்த சொந்தங்களின் ஆதரவும் இல்லை. மாதையனைக் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு கணவன் இல்லாத சூழ்நிலையில் பல காமுகன்களை எதிர்த்தும் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. எங்கு வேலைக்குப் போனாலும் லட்சுமியிடம் இருந்து அதைத்தான் எதிர்பார்த்தார்கள் எல்லாவற்றையும் எதிர்த்து லட்சுமி வாழ்ந்ததே மாதையனுக்காகத்தான். குழந்தைப் பருவத்தில் வயதுக்கு மீறியதையெல்லாம் செய்து கொண்டிருக்கும் மாதையனை நினைத்து அவரது தாய் பூரித்துக் கொள்வாள். தவழும் வயதில் நிறுத்தாமல் ஓ...வென அழும் மாதையனின் அழுகையை அடக்க முடியாமல் தவித்தாள். வீட்டின் படலில் மாட்டப்பட்டிருந்த தங்கராசுவின் தப்பை எடுத்து டொம் டொம் என்று கொட்டி மாதையனுக்கு விளையாட்டுக் காட்டியதும் அழுகை நின்றது. இப்படியாகத் தொடர்ந்தது நாளடைவில் தப்புச் சத்தம் மாதையனுக்கு நன்கு பழகிப்போனது டொம், டொம் என்று கேட்கிற அந்த சத்தத்துக்குள் ஏதோ ஒன்று மாதையனைக் கவர்ந்திருக்கிறது. மாதையன் நடக்கும் பருவத்து வந்த பிறகு லட்சுமி தப்படிக்க மாதையனை ஆடச்சொல்வாள். கை, கால்களை உயர்த்தி எப்படியெப்படியோ ஆடியதை கண்டு லட்சுமி அசந்து போவாள். இப்படியாய் அவரின் பால்யமே இந்தத் தப்புச்சத்தத்தால் நிறைந்திருந்தது. கையில் குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு கண்டமேனிக்கு அடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு முறையான பயிற்சி வேண்டும் என அவரது அம்மாதான் அவரை தாய்மாமன் நாகராசிடம் அனுப்பி வைத்தார். பில்லிக் குச்சி விளையாட வேண்டிய பத்து வயசிலேயே தப்புக் குச்சியைக் கொண்டு தப்படிக்க ஆரம்பித்தார். ஒத்தப்பனமரக்காட்டில் இருந்த சக வயது சிறுவர்களை அழைத்துக் கொண்டு மலை அடிவாரத்துக்கு போய் விடுவார். அங்கு இவர் தப்படிக்க மற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆடியபடியே பொழுதைக் கழிப்பர். இப்படித்தான் மாதையனின் இன்ப உலகை முழுவதும் நிறைத்திருந்தது இந்த தப்புச்சத்தம். தாய் லட்சுமி அடிக்கடி சொல்வாள்
“இத பார்றா மாதையா... இந்தத் தப்புங்கிறது நம்ம தாத்தனுக்கு தாத்தங்காலத்துக்கு முந்தி இருந்து இருக்குது. நாமெல்லாம் காலங்காலமா இதத்தான் அடிச்சுக்கிட்டு வர்றோம்... உங்கப்பன் இந்த சுத்து வட்டாரத்துல தப்படிக்காத கோயலே கெடையாது... அப்பெல்லாம் உங்கொப்பனளவுக்கு யாருந்தப்படிச்சதில்லை அந்தாளு பல்ல வெறுவிக் கொட்டினா ஏழூரூக்கு கேக்குமுடா”
“போம்மா... ஏழூருக்குக் கேக்குமாமா...அதெப்பிடி நா நம்புவனா?”
“நல்ல தெறமைக்காரர்றா உங்கப்பன் அதத்தான் சொன்னன்.. நீயும் அந்த மாதிரியாவியா?” என்றாள் உம் என்று மண்டையை ஆட்டுவார். அவரது சகாக்கள் பலரும் பற்பல விளையாட்டுக்களில் மூழ்கியிருக்கும்போது இவர் தப்பட்டையைத் தவிர வேறெதையும் கையிலெடுக்க மாட்டார். இவருக்கு பதினான்கு வயதிருக்கும் அப்போதுதான் அது நடந்தது. மாதையனின் தாய் லட்சுமி பாம்பு கொத்தி அநியாயத்துக்கும் செத்துப்போனாள். வாயில் நுரை தள்ள செத்துப்போயிருந்த அவளது உடலை குடிசை வீட்டு முன் கிடத்தியிருந்தனர். அம்மா இறந்தது தெரியாமல் மலை அடிவாரத்தில் தப்பட்டை அடித்து தனது சகாக்களுடன் மாதையன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தாய்மாமன் நாகராசு என்னவென்று சொல்லாமலேயே அவரைக் கூட்டி வந்தார். தன் குடிசை வீட்டு முன் கூட்டம் கூடி நிற்பதிலும் தாய்மாமன் தன்னை கூட்டி வருவதிலும் உள்ள மர்மம் புரியாது போன மாதையனுக்கு அது பேரதிர்ச்சியாய் இருந்தது. பதறியோடி அம்மாவின் பிணத்தைக் கட்டிக்கொண்டு “அம்மா...” என்று மாதையன் கதறிக் கதறி அழுதது அங்கிருந்த எல்லோரையும் சற்றே கலங்க வைத்தது. தனக்கென இருந்த நிழலும் மறைந்து போய் விட்டதை மாதையனால் அப்போது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன்னை மீறியும் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. தந்தை இறப்புக்குப் பின்னும் உடைந்து விடாத தாயின் மன உறுதியை ஏதோ மாதையனின் பக்குவத்துக்கு ஏற்றாற்போல் புரிந்து கொண்டு ஆறுதலடைந்தார். அத்தனை சடங்குகளும் முடிக்கப்பட்டு லட்சுமி பாடையில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டாள். தன் தாயின் பிணத்துக்கு முன் தப்படித்து ஆடிக்கொண்டே வந்தார் மாதையன். வெறுமையாகி இருந்த மனதில் இந்த தப்புச்சத்தம் ஏதோ புத்துணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது போல அவருக்கு இருந்தது. தாய் இறந்த சோகத்தை ஏற்றுக்கொண்ட அவரது மனத்தின்மையை ஊரே வியந்தது. சுடுகாட்டில் கொண்டு சொல்லப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது லட்சுமியின் உடல். அன்றைக்கு மாதையனுக்கு ஏதுமில்லை அந்த குடிசை வீட்டைத்தவிர. தன் முந்தைய தலைமுறை தனக்கென விட்டுச் சென்றிருப்பது அந்த குடிசை வீட்டையும் தப்பையும்தான் என்பதை அன்றுதான் உணர்ந்தார் அவர். அன்றிலிருந்து தாய்மாமன் நாகராசுடன் தப்படிக்க போனார். அந்தச் சிறு வயதில் எத்தனை இறப்புகள், எத்தனை திருவிழாக்கள் அத்தனைக்கும் இவரது தப்பு கொட்டிமுழங்கியது. வாழ்வின் இரண்டறக் கலந்து விட்ட இந்த தப்பு எப்படி வந்தது? என்று கூடத்தெரியாமல் இத்தனை நாளை நகர்த்தியிருக்கும் தன் அறியாமையைப் பற்றி இப்போதுதான் யோசித்தார். அதுவும் சின்னச்சாமியின் கேள்விகளுக்குப் பிறகு.சின்னச்சாமி கடைசியாக “உங்களை அப்படியே கடைசி வரைக்கும் வெச்சுக்கலாம்னு பாக்குறாங்க” என்று சொன்ன வரிகள்தான் அவரிடத்தில் பற்பல குழப்பத்தை தூண்டிய வண்ணமே இருந்தன. 
மாதையன் தன் குடிசை வீட்டிற்கு வந்து கயிற்றுக் கட்டிலில் படுக்கும் வரையிலும் அதே யோசனையாய்த்தான் இருந்தது. சின்னச்சாமி மாதையனிடத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்திச் சென்று விட்டார். தன்னை நோக்கித் தானே கேள்வி கேட்கிற ஒரு உணர்வை விதைத்துச் சென்று விட்டார் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக