வெள்ளி, 26 ஜூலை, 2013

த.அஜந்தகுமார் கவிதைகள்


உனது பெயரில் இப்பொழுதும் சிலிர்ப்பு இருக்கிறது!

இப்பொழுது
யோசிக்கையில்
கொஞ்சம் வெட்கம் அமர்கிறது

நீ அருகில்லாத கணத்தை யோசிக்கப் பயந்தேன்
எனினும் நீ பிரிந்தாய்
கசப்புகளின் கோப்பையோடு
கொஞ்ச நாட்கள் ....
எனினும் ஞாபகம் என்பது
கீழிறங்கிச் சென்று
ஓரடுக்கில் பதுங்கியிருக்கியிருக்கிறது
யாரும் கிளராதபோது
நல்ல பிள்ளையாய்ப் படுத்திருக்கிறது

உன் பெயரை யாரும் சொல்வதை
நான் விரும்பவில்லை
அடுக்கில் இருந்து
மேலெழும் நினைவுகளை
இப்போது வெறுக்கிறேன்

உனது பெயரில்
இப்பொழுதும்
ஒரு சிலிர்ப்பை உணர்கிறேன்

எனினும் சிலிர்ப்பில்
எனது உடல் கனக்கிறது
நோய்களின் கூடாரமாய்
நானாகுவதாய் பிரமை சுழல்கிறது

நீ வெகு துாரத்தில் இருக்கிறாய்
என் நினைவின்றி இருக்கிறாய்

உன் பெயர்ச்சாவி
என் கதவுகள் எல்லாவற்றையும்
மளமளவென்று திறக்கிறது
தென்றல் புகுந்து வருடிய காலம் இப்போது இல்லை
உடலைச் சல்லடையிடுகிறது புயற்காற்று

எனவே அவள் பெயரை
யாரும் சொல்லற்க.....!

()()()()()()()()

பேசியபடியிருத்தல்=============

கவிதைகள் உன்னைச் சுற்றியே திரிகிறது

காற்றின் திசைகளில் கவிந்து கிடக்கும்
உன் திருமுகத்தை
நினைவின் ஆழ் சுழிகளில் மூழ்கி முத்துகிறேன்

எனது வலிகள் ஒப்பிக்க முடியா மொழியில்
கீறிக் கிளர்கிறது

நினைவடங்கா வெளியில்
நனவுகளின் இரத்தம் பரவுகிறது

மாறிக் கொண்டிருக்கும் காட்சி
இயலுமையின் கைகளிலும் இயலாமை

குருஷேத்திரம் நிகழ்ந்தபடியிருக்க
புறாக்கள் இரத்தச் சிறகுகளோடு காதல் கொள்கின்றன

நீயும் நானும் வெளிகளில் வீசப்பட்டிருக்கிறோம்

உனது திசையை நானும்
எனது திசையை நீயும்
முகர்ந்தபடி .......
கால நாக்கில் ஒட்டப்பட்டிருக்கிறோம்

வாரத்தைகள் நமதானவை

எங்கிருந்து பேசினாலும்
நாம் முகம் பார்த்துப் பேசியபடியிருக்கிறோம்

()()()()()()()()(


.உன்னைப்பற்றி நான் எழுதும் இறுதிக் கவிதை===========


எப்படியோ மீண்டும் மீண்டுமாய்
உன்னை நினைக்கத் தூண்டும் வாழ்க்கை!
நான் நினைக்க மறுத்தாலும்
ஏதோவொன்றின் பொறியில் இருந்து
மூண்டு மிளாசி வளர்கிறாய்

எனது கண்களில் குத்தி இறங்கி
வலிகளைத் தந்துவிட்டுப் புன்னகைக்கிறாய்
நானே என்னில் கோபப்பட்டும்
உன்னை எறிந்து விடமுடியாத துக்கத்தில்
……………………………………….. ..................................
எதையுமே விட்டு வைக்காமல்
யோசித்துத் தொலையும் மனதில் உள்ள
உனது சுவடுகளில்
தேங்கித் ததும்பும் கண்ணீரில்
உன் முகம்தான் தெரிகிறது

உன்னை வேறொருவன் நிறைத்துவிடப் போகும் வாழ்வில்
உன்னை என்னை விட்டு
எறியாது இருக்கும் துரோகத்திற்கு
நான் என்ன செய்வது?
…………………….. …………………......
உன்னைப் பற்றி நான் எழுதும்
இறுதிக் கவிதையாய் இது இருக்கட்டும்

()()()()()()()

உனது அழுகை
எனக்குள்
இறங்குகிறது
பெரும் பாறையாய்!

வார்த்தைகளற்ற
ஓலமுடனான உன் அழுகை
வாழ்க்;கையின் சாரம்
என்னவென்று வினாவிற்று.

உனது படுக்கையைச்சூழ
நிலவும் ஒரு அமானுஸ்யம்
உன்னையே நீ தொலைத்தபடி
என்னுடன் துக்கிக்கும் கணங்கள்
உனது சாரமும் படுக்கை விரிப்பும்
ஈரமாகி விட்டதே
என்ற உன் இயலாமைப் பார்வை
நீராட்டி உணவூட்டி
தலைகோதி விடுகையில்
உன் சலிப்புகள் மத்தியிலும்
தெரியும் ஒரு ஏதோ ஒன்று!

இரவில் நிம்மதியாய்
உன்னால்
உறங்க முடிவதில்லை
உன்னைக் கனவுகள்
பயமுறுத்துவதாய்
உணர்கிறேன்
திடீர் திடீர் என்று
யார் யாரையோ கேட்கிறாய்
ஏதோ நடந்துவிட்டதாய்ப்
பயங் கொள்கிறாய்
உன் கனவுகளின் நிறங்களை
அறிய முடியாது
என் கண்கள் பனிக்கின்றன

யாருக்கும் துரோகம்
செய்யாத
புன்னகையின் வசீகரம் சூழ்ந்த
ஒரு உறவின் நெருக்கம்
எனக்கு வாய்த்ததென்ற
ஒரேயொரு திருப்தி
என் வாழ்வை அழைத்துச் செல்கிறது

()()()()()()()()()

ஒளிப்பிழம்பை வினாவுதல்========
1.
கேட்கலையோ உலகீரே
என் விசும்பல்
மண் பிளந்து விண் எழுந்து
ஒலிக்கிறதே
கேட்கலையோ?

ஆட்காட்டி விரலுக்கு
ஆயிரம் அர்த்தங்கள்.
நீட்டாய் இருந்த விரல்
குறுகி,
நினைக்க முடியாப் புள்ளியாய்
கையோடு ஒட்டுண்டு
புழுங்கிக் குமைகிறது

போக்காட்டும் வாழ்க்கையில்
இருப்பது போதுமென்று இருந்திட்டேன்
சாக்காடு வரைதானே வில்லங்கம்!
சரி, பொறுப்போம் என்று
நாக்கைப் பல்லைக் கடித்து
நான் பொறுத்தேன்
கூக்காட்டிச் சிரிக்கிறது வாழ்க்கை
குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுகிறது காலம்
கேட்காமல் என் மனசு
விசும்பலிடை ஏதேதோ சொல்கிறதே
ஆக்கினைதான்
என் செய்வாய் என் மனமே!

2.
ஒளிப்பிழம்பே!
சோதியாய்த் துலங்கும் அகண்டமாயினை
ஆயின்,
என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றனை?
உனது சுவடுகளைத் தொடர்ந்து வந்து
உன்னைத் தேடும் மூர்க்கனாய் மாறி
முயல்கிறேன், என் கனவுகளுடன்!

ஒரு சுவட்டிற்கு அப்பாலான
உன் பெரிய்ய்ய மறுசுவட்டில்
கால் வைக்க முயன்று
நெருங்கி வர,
நான் கருகும் வாசம்
என்னையே ஓங்காளிக்க வைக்கிறது
பரவும் உஷ்ணத்தில்
பாதிமுகமே எரிந்தது போல் ..........
பிரமை!

கானல் சுவடாய்
ஒளியாய்......
நீ மாறிமாறிச் செய்யும் பராக்கில்
எலும்பாய் மாறி
என் சுயம்
அங்கு இங்கென்று
காற்றில் உலைகிறது.

உனக்கென்ன?
என்னைச் சோதிக்கும்
விளையாட்டு இதுவென்று
நீ மகிழ்வாய்!

ஏதிலியான என் ஏழ்மை கண்டு
ஒரு வெற்றிக் களிப்பில்
ஊடல் கொண்டிருந்த உன் பிராட்டியுடன் நீ
‘மொத்தி’ மகிழலாம் கலவியில் களிக்கலாம்

நான்
மனையாளை, மகவை
மண்ணில் புதைத்த துயரில்
கலங்கிக் கதறியழ

நீ
மீண்டும் மீண்டுமாய்
உன் பிராட்டியோடு முயங்கு!
நெற்றிக் கண்ணில் இருந்து
பிள்ளைகளை உற்பவி!
சுடுகாடு சென்று
எங்கள் சாம்பல்கள் எடுத்து நீறணி!
உடலம் வளர்;த்தி
எரிதழல் மூட்டிய இடத்தில்
உன் தேவர் குழாம் புடைசூழ
புதல்வர்கள் இருவர் சகிதம்
பிராட்டி சமேதனாய்
சோமபானம் பருகி மகிழ்!
ரம்பை ஊர்வசியை நடுவே சுழலவிடு!
கண்களை ஒளியாக்கு!

தம் கனவைப் புதைத்து விட்டு
மாண்ட தலைமுறையோடு
புணர்ந்து கிட!
கலவிக் களிப்பின் தத்துவத்தை
உலகுக்கு உரை!

===========================================
அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக