செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஜ்யோவ்ராம் சுந்தர் கவிதைகள்

ஜ்யோவ்ராம் சுந்தர் கவிதைகள்

குடிகாரர்கள் நிரம்பிய ஊர்

மாலைநேரத் தார்ச்சாலையில்
கட்டிடங்களின் நிழலில்
போதையில் கிடக்கிறது வண்ணத்துப் பூச்சி
பறக்க எத்தனிக்கிறதா
புரண்டு படுக்கிறதா
சரியாகத் தெரியவில்லை
சிக்னலை நோக்கி விரையும் வாகனங்களின்
ராட்சசச் சக்கரங்களிடமிருந்து
எப்படித் தப்பிக்குமோ
மனசு கிடந்து அடித்துக் கொள்ள
அதன் மஞ்சள் நிறத்தைக் கையிலேந்தி
பொத்திப் பாதுகாத்துப்
பறக்க விடுகிறான்
தடுமாறியபடி
முகம் மழிக்காத குடிகாரனொருவன்
தன் சின்னஞ்சிறு ரெக்கைகளின் வனப்பை
ஊருக்குக் காட்டியபடி
பறந்து கொண்டிருக்கிறது
வண்ணத்துப் பூச்சி
போதையில்

(
ரமேஷ் வைத்யாவிற்கு)

இருள் சூழ்ந்த புதர்

தலையில் பாதி வழுக்கையும்
தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த
அவன் பெயர் பார்த்திபனாம்
அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்
எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்
பன்னிரெண்டாவது வரை
ஒன்றாகப் படித்தோமாம்
என் ஞாபக அடுக்குகளில்
மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்
பள்ளி - மதிய உணவு
ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி
பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை
இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்
இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்
வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது
பேருந்தில் செல்லும் ராதிகாவை
சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது
பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்
மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி
அவசரமாய் ரயிலேறிப் போனான்
இரவில் மனைவியிடம் தன் பால்யகால
நண்பனைச் சந்தித்ததை
அவன் விவரித்து மகிழக்கூடும்
என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்

சேருமிடம்

எரிச்சலாக இருக்கிறது
ஆரத்தழுவ
யாரையாவது அடிக்க வேண்டும் 
குத்திக் கிழிக்க வேண்டும்
எலி பாஷாணம், கயிறு, தூக்க மாத்திரை
எதுவும் தேவையில்லை
அன்பை வெறுப்பை எல்லாவற்றையும்
நிராகரிக்கிறேன்
எனக்கில்லை
நெடிய தீஜூவாலைகள்
உடல் திறனற்றுப் போனேன்
புதுமைப் பித்தன் குபரா பாரதி
பல உதாரணங்கள் உண்டு
அழகானவர்கள் சாதித்தவர்கள் 
சிறுவயதில் இறந்திருக்கிறார்கள் -
எதையும் உருவாக்கவில்லை
அசிங்கத்தைத் தங்கள் 
அசிங்கமான வாழ்க்கைக்கு விட்டுவிட்டு
வாழ்வும் தற்கொலையும் மரணமும் அற்புதமானது
கிழங்கள் பூங்காக்களில் நடை பழகிக் கொண்டிருக்கட்டும்
வாய்பிளந்து குறட்டை விட்டுத் 
தூங்குபவன் தலையில் ஓங்கிப் போடு
பிறகு குளிப்பது உனக்குப் பிடித்திருக்கலாம்
காலம் என்னை முடித்துவிட்டது
கடவுளோ அல்லது வேறு யாராவதோ
தயவுசெய்து என்னை ஆசிர்வதியுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக