ஞாயிறு, 28 ஜூலை, 2013

அன்புச்செல்வன் கவிதைகள்

குடியின்றி அமையா வாழ்வு


அதன் நெடி தாள முடியாததாய் இருக்கிறது.
அதன் சுவை குமட்டலாய் இருக்கிறது.
தாள லயமிழையும்
மதுவின் இசையில்
வெளி பரவிய போதையின்
விரல்கள் அதிரும்
நரம்புகளூடான மயக்கம்
ஸ்தூல ரூபம் மிதக்க
மிதந்தவை சிதறும் கட்புலம் மீறி
நினைவு வழிப்பாதையில்
கால்பாவ ஏதுமின்றி
நினைவின்றி போகும் கணங்கள்
'காலமும் அடையாளமும் அற்றுப்
போகிறோம்' வருந்திய சிவா
எத்தகைய பேறு அது
ஒன்பதாவது அவுன்சில்
கோப்பையாகிப் போனேன்

ஆளில்லா லெவல் கிராசிங்


துருவேறிய ஒரு தொலைபேசிக்
கூச்சலுக்காய் காத்திருப்பு
மான அவமானங் கடந்த
திட்டுகளூடே கேட் மூடல்
பற்றிக் கொள்ள யாருமற்ற
ரயிலின் கூச்சலை
துணிந்து ஊடேகி
நடத்திச் செல்லும் பூச்சி
தாழ்வாரங்களூடாகவும்
பனைமரங்களூடாகவும்
கடந்து சென்ற வாழ்க்கை
எதிரொளிக்கும்
அவனது
கஞ்சா மின்னும் கண்களில்.


SUNRISE

நிறமழித்து எழுதி அழித்தெழுதி
அலையும் அலைகளில்
எச்சில் நுரைகளில்
பொங்கித் ததும்பும்
சங்குகளும் சிப்பிகளும்
ஒரு ரொமாண்டிக் கவிதைக்கான தொடக்கம்
கிழித்தெறியப்படுகிறது
விரல் நக அழுக்கால் ஆன
கவிதையால் சூல் கொண்டன
சங்குகள்
காற்றில் ஒளிரும் மணல் துகள்களினூடாக
நீ என்ன சாதி என்றொருவன்
கேட்பானாயின்
முத்தின் நொறுங்கல்களாய்
சிதறி ஒடுங்கும் குரல்கள்
ஒரு வேளை டீக்காக
சங்கு விற்கும் கிழவனிடம்
பேரம் பேசுகையில்
உதிக்கும் செஞ்சூரியன்
ஒரு கோடி கைதட்டல்களுடன்

உருமாற்றம் () சிதைவின் வரலாறு

எனக்கான வாழ்க்கையிது
உனக்கென்று வாய்த்ததொன்று
என்னை மூர்ச்சையிக்க
எனதை அருவருக்க
கரப்பானாய் மாறச் சபி.
பறந்து திரிவேன் சிறகடித்து
கக்கூசெங்கும்...
கழிவறைகள் கவிதையறைகள்
மலம் தள்ளிய நீ
வெருளுவாய்
உன் மலமீதேகி
நான் வருடுவது
உன் வாழ்வெனும் குண்டியை...
நீ ஊற்றிய
சரித்திரத்தின் நீரின் ஊடே
மலத்தின் கசடு பற்றி
மெதுவாய் தலை நிமிர்ந்து
துவாரத்தின் வாயிலில்
எனது மீசை துளாவிய போது
உனது கண்களின் மிரட்சி
எனக்கான ஹேஸ்யம்.
அறையெங்கும் தெளித்த விந்தும்
கருப்பந்தும் உணவாகியது
உனது மலச்சிக்கலின் போது
நீ மீண்டும் கூறுகின்றாய்
உலகம் கவிதையிலானது
என்று கழிப்பறையிலிருந்து
என் இடது முட்கால்
நீ காரித் துப்பிய சளியைச்
சுரண்டியபடி சொல்கிறது
உலகம் கழிப்பறையிலானது.


கண்டக்டர் அருகில் வர
நேரமிருக்கிறது.
                                                                                         
கோதுமை விளையும்
உன் மண்ணின் துகள்களோடு
சிரிக்கிறாய் நீ
நம் ஸ்நேகங்களை எண்ணி;
நானும் கூட -
விதை நெல்லின் வாசனையோடு.
கட்டுப்பாட்டு எல்லையற்ற
பெருவெளியில் நினைவுகளோடு
அலைந்து திரியும் நாம்
இளைப்பாறும் ஏதோவொரு கிராமத்தில்
பஞ்சாயத்து டி.வி.யில்
8 P.M. ஸ்காட்ச்சோடு
பகிர்ந்து கொள்வோம்
உணர்வுகளை
பீரங்கிக் குண்டுகளால்
வெடித்துச் சிதறடிக்கப்படும் வரை.

            நெருங்கிவிட்ட கண்டக்டருக்கு
            சில்லறை தேடிக்கொண்டிருக்கிறேன்
            நான்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக