சனி, 3 ஆகஸ்ட், 2013

இடைவேணில் - அரங்கன் தமிழ்


தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு ஜன்சதாப்தி ரயிலில் அதிவிரைந்து கொண்டிருந்தேன்..

சித்ரா.. வெகுநாட்களுக்குப் பிறகு நேற்று கண்பட்டாள்..  வண்டி திருச்சியில் நிற்கும் போது நான் அமர்ந்திருந்த பெட்டியில் ஏறினாள்..
நான் வாசலுக்கு அருகாமை இருக்கையிலிருந்தேன். வழக்கமான புன்னகையுடன் என்னை அருகினாள்

எப்படி இருக்கே,..?”

நல்லா இருக்கேன் சார்நீ எப்படி இருக்கே..?

இம்மாதிரியான வாக்கிய அமைப்புகள் எனக்கு எப்போதும் சுவாரஸ்யம் அளிப்பவைமுதல்வார்த்தை துவங்கும் போது உச்ச மரியாதையாக சார் என்றும்.. அடுத்தடுத்த வார்த்தைகளில் நீ வா போ என ஒருமையில் நெருங்கியபடியுமான இந்த வாக்கியங்கள்.. சென்னை மாதிரியான ஏரியாக்களில் அதிகம் புழங்கப்படுபவை….

சித்ரா இன்ன பிற திருநங்கைகள் போல இல்லை.. கரகரத்த குரல் இல்லை.. ஒழுங்கமையாத புடவை உடுத்தல் இல்லை.. எப்போதும் சுடிதார்.. ஏனையவர்களைப் போல் ட்ரேட் மார்க் கைதட்டி மாமா.. அக்கா காசு குடு..என்று கேட்கிற வழக்கம் இல்லை

அரவாணி.. அண்ணாஅரவாணிஅக்கா.. காசு குடுங்க..மெல்லிய குரல்.. தொன்னாறு சதவீதம் பெண்மை நிறைந்த குரல்..

நீ மொதல்ல குடு சார்.. இன்னைக்கு உன் கைராசி எப்படி இருக்குன்னு பார்க்கறேன்..

நான் கொடுத்தேன்.. நெற்றிமேல் வைத்து ஒற்றிக்கொண்டாள்..

இன்றைக்கு கூடுதல் சேகரிப்புக்கான வேண்டுதலாயிருக்கும்..

சித்ரா எப்படியும் மாதத்தில் நாலைந்து முறையாவது திருச்சியிலிருந்து கிளை பிரியும் ரயில் பயணங்களில் தென்படுவாள்…. ரயிலில் எல்லோரிடமும் உறுத்தலில்லாமல் யாசிப்பவள்..

ஒரு முறை அவள் பெயர் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்வாள்.. ஒரு மெலிதான புன்னகையோடு கடந்து போவாள்..…!

இன்று அவளுடன் எதாவது பேசலாம் என்றுதான் தோன்றியது..

காபி சாப்பிடறியா..?”

இல்ல.. வேணாம் சார்.. எல்லா பெட்டியிலயும் போய் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்தடறேன்..

சொல்லிவிட்டு அடுத்தடுத்த பெட்டிகளில் மறைந்து போனாள்..

வண்டி கரூர் தாண்டிய பின் நான் இருந்த பெட்டிக்கு திரும்பினாள்..
நெற்றியில் வேர்த்துகளைத்திருந்தாள்..

சார்.. ஒரு டீ வாங்கி குடு சார்..

சரி.. உட்காரு..என் அருகில் காலியாயிருந்த இருக்கையை
காட்டினேன்.. எந்த தயக்கமுமின்றி அமர்ந்தாள்..!

சக பயணிகளின் அதிர்ச்சி.. ஆச்சரிய.. விருப்பமற்ற பார்வைகள் எங்களை மொய்க்கத் தொடங்கியிருந்தன.. இருவருமே அதை அலட்சியித்தோம்

எனக்கும் சேர்த்து டீ சொன்னேன்.. சாப்பிட்டோம்.. நானே துவங்கினேன்..

உனக்கு என்ன வயசு சித்ரா..?”

இருபத்தி எட்டு சார்.. ஏன் கேட்குற..?”

சும்மாதான்.. எவ்வளவு நாளா ரயில்ல காசு வாங்குற.?”

நான் ரொம்ப வருஷமாவே இப்படித்தான்..

திருநங்கைகளிடம் எல்லா சமான்யனும் கேட்கும் அந்த கேள்வியை நானும் கேட்டேன்..

வேற எதாவது கவுரவமான வேலைக்கு போகலாம்ல.. எதுக்கு எல்லார்கிட்டயும் காசு வாங்கனும்..?”

அவளும் எல்லா சாமான்யனிடமும் சொல்லியிருக்கக் கூடிய பதிலை எனக்கும் சொன்னாள்.

எனக்கென்ன ஆசையா சார்.. நானும் நிறையா இடத்துல வேலைக்கு கேட்டுப் பார்த்துட்டேன்.. யாரு தர்றா..? ஒருத்தர் மட்டும் ஜெராக்ஸ் கடையில வேலை குடுத்தார்.. நாலு நாள் தான் வேலை செஞ்சேன்.. அதுக்குள்ள அந்த ஓனரோட பொண்டாட்டி வந்து என்னைய விரட்டிவிட்ருச்சு…!”

அவள் சொன்னதில் நிஜமான ஆதங்கம் இருந்த்து.. நான் பேச்சை மாற்றினேன்..

ஏன் இப்போ உன்னை எல்லாம் அடிக்கடி பார்க்க முடியறதில்லை..?”

வைகை, பல்லவன்ல தான் சார் அடிக்கடி வருவேன்..போன மாசம் ஒரு பிரச்சனை ஆயிடுச்சு.. அதான்.. இந்த ட்ரெயினுக்கு மாறிட்டேன்..

ஏன்.. என்ன பிரச்சனை..?”

ஒருத்தன்ட்ட காசு கேட்டேன்.. பாத்ரூம்க்குள்ள வா.. தர்ரேன்னு சொன்னான்.. நான் கண்டபடி திட்டிவுட்டேன்..

அப்புறம்..?”

அப்புறம் அவன் என்னைய கன்னத்துலயே அடிச்சிட்டான்.. நானும் திருப்பி அடிக்க போயிட்டேன்.. அப்புறம் ஒரு போலீசு அக்கா வந்துதான் என்னைய கூட்டிட்டி போச்சு..

ம்..

அதுக்கப்புறம் நான் அந்த ரயில்ல போறதே இல்லைசுசிலா அக்காதான் போகுது…”

யாரு சுசிலா அக்கா..?“

அவங்களும் அரவாணிதான்.. நான் ஊர்லருந்து ஒடியாந்தப்ப அவங்கதான் என்னைய அவங்களோட சேர்த்துகிட்டாங்க.. ரொம்ப நல்ல அக்கா..

வண்டி ஈரேட்டை நெருங்கிக் கொண்டிருந்த்து…. நான் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்து அவளுக்கு நீட்டினேன்.. மூன்று எடுத்துக்கொண்டாள்

வெளியில் உலகம் இரவுப் போர்வை எடுத்து முழுவதுமாய் போர்த்திக்கொண்டிருந்த்து.... நான் தொடர்ந்தேன்..

உன் சொந்த ஊரு எது..? அம்மா அப்பால்லாம் இருக்காங்களா..?”

இந்த கேள்வியை ஒட்டி அவளது முகத்தின் நிகழ்ந்த மெல்லிய மாற்றத்தை கவனித்தேன்.. அவளைப் பொருத்த மட்டிலும் அது ஒரு அவசியமற்ற கேள்வியாக இருந்திருக்கலாம்.. அதன் பிறகான அவளது பதிலில் ஒரு பரிதாப குழந்தைத்தனம் பற்றிக் கொண்டிருந்த்து..

சொந்த ஊரு முசிறி பக்கத்துல தொட்டியம் சார்அப்பா நான் நாலு வயசா இருக்கும் போதே செத்துட்டாருஅம்மாவும் ஒரு அண்ணனும்தான்…”

அப்புறம் ஏன் நீ இங்க..?”

என்னோட சின்ன வயசுல ரெண்டு பேரும் பாசமாத்தான் இருந்தாங்கஎனக்கும் அண்ணன் மேல ரொம்ப இஷ்டம்.. அண்ணனுக்கு என்னை விட பத்து வயசு அதிகம்என்னோட பதினேழாவது வயசுலதான் நான் அரவாணின்னு வீட்டுக்கு தெரிஞ்சுதுஅதுக்கப்புறம் அண்ணனுக்கு என்னை பிடிக்கலஎங்கயாவது ஓடிப்போயிடுன்னு அடிக்கடி அடிப்பான்.. எனக்கு வாழவே இஷ்டம் இல்ல..

உங்க அம்மா ஒன்னும் சொல்லலயா..?”

அவங்களுக்கு எம்மேல பாசம்தான்.. ஆனா அண்ணனை எதிர்த்துகிட்டு அவங்களால ஒன்னும் பண்ண முடியல.. அவன் அப்பவே தண்ணியெல்லாம் அடிக்க ஆரம்பிச்சிட்டான்.. அவன் போதையில இருக்கும் போது கண்ணுலயே மாட்ட மாட்டேன்.. பெல்டாலயே அடிச்சிடுவான்…”

ம்.. வேற யாரும் உனக்கு சப்போர்ட் பண்ணலயா..?”

எனக்கு யாரும் ப்ரண்ட்ஸ்ம் கிடையாது.. தெருவுல நடந்து போனாலே எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க.. அதானால அண்ணன் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாதுன்னு சொல்லிட்டான்….”

அப்புறம் எப்படி நீ இங்கே..?”

ஒரு நாளு அண்ணன் தண்ணி போட்டுட்டு வந்து ரொம்ப அடிச்சிட்டான்.. என்னால ரெண்டு நாளு கையே துாக்க முடியல…. அடுத்தவாரம் நான் வீட்ல இருந்த நுாத்தி அம்பது ரூபா பணத்தை எடுத்துட்டு திருச்சிக்கு வந்துட்டேன்..

ம்..

அப்போ எனக்கு பதினெட்டு வயசு.. சுசிலா அக்காதான் அவங்க கூட என்னைய சேர்த்து பார்த்துகிட்டாங்க.. அவங்களும் என்னை மாதிரியே அடிபட்டு வந்தவங்கதான்அப்படியே ஓடிப்போச்சு சார்.. பத்து வருஷம்….”

இதை அவள் சொல்லும் போது தன் நம்பிக்கைகளை தானே சிதைத்துக் கொண்டவளைப் போல்தான் தோன்றியது..! வேறு பக்கம் திரும்பி துப்பட்டாவால் கண்களை துடைத்துக் கொண்டாள்..

உங்க அம்மா..?”

அது நான் ஓடிவந்த கொஞ்ச நாள்லயே செத்துப்போச்சாம் சார்.. நான் போகலை.. அப்போ கையில காசும் இல்லை…”

அதுக்கப்புறம் உங்க ஊருக்கு போகவே இல்லையா..?”

போன வருஷம் போனேன் சார்.. எங்க அண்ணனுக்கு உடம்புக்கு முடியாம கிடக்கறான்னு கேள்விப்பட்டேன்அதான் பார்க்கலாம்னு போனேன்..

என்னவாம் உங்க அண்ணனுக்கு..?”

நிறைய தண்ணி அடிச்சி ரெண்டு கிட்னியும் பழுதாயிடுச்சாம்.. கிட்னி மாத்தலன்னா செத்துடுவான்னு டாக்டர் சொல்லி அனுப்பிட்டாங்களாம்.. அவன் பொண்டாட்டியும் ரெண்டு குழந்தைகளும் னு அழுவுதுங்க…”

அப்புறம்..?”

அப்புறம் என்னஎனக்கு மனசு கேட்கல…. நான் கையில வச்சிருந்த இருபத்திநாலாயிரம் பணத்தை குடுத்து ஆப்பரேஷன் பண்ணச் சொன்னேன்..

கிட்னிக்கு என்ன பண்ணீங்க..?“

ஒரு பழுத்த இலை உதிர்வதைப் போல சித்ரா அந்த கடைசி வாக்கியத்தை உதிர்த்தாள்..!


என்னோட கிட்னியே ஒன்னு குடுத்துட்டேன்…..”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக